விளையாட்டு

'6..6.6..4' டெத் ஓவரில் சிக்ஸர் மழை! ‘ஹிட்டர்’ என்பதை மீண்டும் நிரூபித்த தினேஷ் கார்த்திக்

rajakannan

ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் பெங்களூர் வீரர் தினேஷ் கார்த்திக் டெத் ஓவரில் ரன் குவித்து அதிரடி காட்டியுள்ளார்.

2018 ஆம் ஆண்டு நடைபெற்ற நிடாதாஷ் தொடரில் பங்களாதேஷ் அணிக்கு எதிரான இறுதிப் போட்டியை இந்திய ரசிகர்களால் நிச்சயம் மறந்திருக்க முடியாது. அந்தப் போட்டியில் புலிகளை அழ வைத்து இந்திய ரசிகர்களை குஷிப் படுத்தியவர்தான் தினேஷ் கார்த்திக். அந்தப் போட்டியில் கடைசி இரண்டு ஓவர்களில் 34 ரன்கள் எடுக்க வேண்டிய நிலையில், தினேஷ் கார்த்திக் தன்னுடைய அதிரடியான ஆட்டத்தால் இந்திய அணியின் வெற்றியை உறுதி செய்தார். 19வது ஓவரில் மட்டும் அவர் 22 ரன்கள் குவித்தார். மொத்தமாக வெறும் 8 பந்துகளில் அவர் 29 ரன்கள் விளாசித் தள்ளினார். தினேஷ் கார்த்திக்கா இது இவரை ஏன் இத்தனை நாள் இந்திய அணி பயன்படுத்தவில்லை என பலரும் அந்த கேள்வியை எழுப்பி இருந்தனர். அப்படி ஒரு நாக் விளையாடி இருந்தார்.

அப்படியான இறுதி நேர அதிரடி ஆட்டத்தை நடப்பு ஐபிஎல் சீசனில் பல முறை ஆடியுள்ளார் தினேஷ் கார்த்திக். பெங்களூர் அணியில் அவரது ஆட்டம் மிகவும் சிறப்பாகவே அமைந்துள்ளது. ஹைதராபாத் அணிக்கு எதிரான இன்றையப் போட்டியில் 19வது ஓவரில் களமிறங்கினார். முதல் இரண்டு பந்துகளிலும் ரன் எடுக்கவில்லை. மூன்றாவது பந்தில் இரண்டு ரன்கள் எடுத்த அவர், நான்காவது பந்தில் இமாலய சிக்ஸர் விளாசினார். கடைசி ஓவரில் நான்கு பந்துகளை சந்தித்தார். ஹாட்ரிக் சிக்ஸர் விளாசி பெங்களூர் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தினார். கடைசி பந்திலும் பவுண்டரி அடித்தார். மொத்த 8 பந்துகளை மட்டுமே சந்தித்த அவர் 4 சிக்ஸர் மற்றும் ஒரு பவுண்டரி உடன் 30 ரன்கள் குவித்தார். இவரது அதிரடி மூலம் பெங்களூர் அணி 20 ஓவர்கள் முடிவில் 192 ரன்கள் குவித்தது.

நடப்பு சீசனில் 12 போட்டிகளில் விளையாடி இதுவரை 274 ரன்கள் எடுத்துள்ளார். இவரது பேட்டிங் சராசரி 68.50 ரன்கள். ஸ்ட்ரைக் ரேட் 200. இதுவரை மொத்த தலா 21 சிக்ஸர், பவுண்டரிகள் விளாசி உள்ளார். இந்தப் போட்டியில் அவரது ஸ்ட்ரைக் ரேட் 375 ஆகும். ஐபிஎல் சீசனில் ஒரு இந்திய வீரரின் அதிகபட்ச ஸ்ட்ரைக் ரேட் இதுதான். ஒட்டுமொத்தமாக பார்த்தால் ஏபி ட்வில்லியர்ஸ் முதல் இடத்தில் உள்ளார். அவர் 8 பந்துகளில் 31 ரன்கள் குவித்து இருந்தார். அதன் சராசரி 388 ஆகும்.

நடப்பு ஐபிஎல் சீசனில் டெத் ஓவர்களில் அதிக சிக்ஸர்கள் விளாசியவர்களில் தினேஷ் கார்த்திக் இரண்டாவது இடத்தில் உள்ளார். இதுவரை அவர் டெத் ஓவர்களில் 18 சிக்ஸர் விளாசி உள்ளார். ஹெட்மயர் 19 சிக்ஸர்களுடன் முதல் இடத்தில் உள்ளார்.

நடப்பு ஐபிஎல் சீசனில் தினேஷ் கார்த்திக் மிரட்டலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் நிலையில், டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் அவரை நிச்சயம் சேர்க்க வேண்டும் என ரசிகர்கள் சமூக வலைதளங்களில் வலியுறுத்தி வருகிறார்கள்.

இந்தப் போட்டியில் 193 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிய ஹைதராபாத் அணி 125 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதனால், 67 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூர் அணி அபார வெற்றி பெற்றது.