கடந்த ஆண்டுகளில் இலங்கை அணியை வழிநடத்தியதற்காக ஏஞ்சலோ மேத்யூஸுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்று நேற்று கேப்டன் பதவியில் இருந்து விலகிய இலங்கை அணியின் முன்னாள் கேப்டன் குறித்து தினேஷ் சன்டிமால் உணர்ச்சிகரமாகப் பேசினார்.
இலங்கை அணியின் டெஸ்ட் கேப்டனாக நியமிக்கப்பட்டு இருக்கும் விக்கெட் கீப்பர் மற்றும் பேட்ஸ்மேனான 27 வயது தினேஷ் சன்டிமால் 36 டெஸ்ட், 128 ஒருநாள் மற்றும் 48 இருபது ஓவர் போட்டியில் விளையாடி இருக்கிறார். நாளை (14/07/17) தொடங்கும் ஜிம்பாப்வேக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இலங்கை அணியின் கேப்டனாக சன்டிமால் இருப்பார். புதிய கேப்டனாக பொறுப்பு ஏற்க இருக்கும் சன்டிமால் அளித்த பேட்டியில், ‘இலங்கை அணியை வழிநடத்தியதற்காக மேத்யூசுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். அணிக்கு தலைமை தாங்குவது என்பது எளிதான காரியம் அல்ல. கடந்த 2 ஆண்டுகளில் எங்கள் அணி நிறைய ஏற்றம், இறக்கங்களை சந்தித்தது. அணியில் திறமை வாய்ந்த இளம் மற்றும் சீனியர் வீரர்கள் உள்ளனர். என் மீது நம்பிக்கை வைத்து கேப்டன் பதவியை வழங்கியது மகிழ்ச்சி அளிக்கிறது. அணி சரியான நிலைக்கு திரும்ப முழு மூச்சுடன் பாடுபடுவேன்’ என்று தெரிவித்தார்.
ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளுக்கு உபுல் தரங்கா கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். 32 வயதான பேட்ஸ்மேனான உபுல் தரங்கா 27 டெஸ்ட், 207 ஒருநாள் மற்றும் 16 இருபது ஓவர் போட்டியிலும் விளையாடி இருக்கிறார்.