விளையாட்டு

பந்தை சேதப்படுத்திய விவகாரம்: இலங்கை கேப்டன் கோரிக்கை நிராகரிப்பு

webteam

பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் இலங்கை கிரிக்கெட் அணியின் கேப்டன் தினேஷ் சண்டிமாலின் அப்பீல் நிராகரிக்கப்பட்டது.

இலங்கை கிரிக்கெட் அணி, வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது. இதன் இரண்டாவது டெஸ்ட் போட்டியின் போது பந்தை சேதப்படுத்திய சர்ச்சையில் இலங்கை கேப்டன் தினேஷ் சண்டிமால் சிக்கினார். இனிப்பு பொருளைத் தின்று அதன் எச்சிலால் பந்தை தேய்த்து அதன் தன்மையை மாற்றியதாகப் புகார் கூறப்பட்டது. இதை அவர் ஒப்புக்கொண்டதை அடுத்து போட்டிக்கட்டணத்தில் இருந்து 100 சதவிகிதம் அபராதமும் ஒரு டெஸ்டில் விளையாட தடையும் விதிக்கப்பட்டது. போட்டி நடுவர் ஜவஹல் ஸ்ரீநாத் இதை விதித்தார்.

இந்த தடையை எதிர்த்து சண்டிமால் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலில் அப்பீல் செய்தார். இதுபற்றி ஐசிசி விசாரணை அதிகாரி மைக்கேல் பிலாஃப் நேற்று நான்கு மணி நேரம் விசாரணை நடத்தினார். பின்னர் அவரது அப்பீலை பிலாஃப் நிராகரித்தார். இதையடுத்து அவருக்கான தடை உறுதியானது.

இந்த தடை காரணமாக வெஸ்ட் இன்ஸ்டீஸின் பார்படாஸில் நடக்கும் பகலிரவு டெஸ்ட் போட்டியில் சண்டிமால் விளையாட மாட்டார்.