இங்கிலாந்துக்கு எதிரான கடைசி ஒரு நாள் போட்டி முடிந்தபின் நடுவரிடம் இருந்து தோனி பந்தை வாங்கியது ஏன் என்பது இப்போது தெரியவந்துள்ளது.
இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் தோனி 2 வது போட்டியில் 59 பந்துகளில் 37 ரன்னும், கடைசிப்போட்டியில் 66 பந்துகளில் 42 ரன்னும் எடுத்தார். தோனியின் நிதானமான ஆட்டம் விமர்சனத்துக்கு உள்ளானது. கடைசி ஒருநாள் போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்து தொடரை இழந்தது. அப்போது வீரர்கள் பெவிலியன் திரும்பிக்கொண்டிருந்தபோது, அம்பயர்கள் ஸ்டீவ் ஆக்ஷன்போர்ட் (ஆஸ்திரேலியா), மைக்கேல் கோஹ் (இங்கிலாந்து) ஆகியோரிடம் இருந்து பந்தை கேட்டு வாங்கினார்.
தோனி பந்தை வாங்கும் படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியானது. பொதுவாக போட்டி தொடரை வென்றாலோ, அல்லது சிறப்பாக பந்து வீசினாலோ வீரர்கள் ஸ்டம்ப் அல்லது பந்தை நினைவாக எடுத்து செல்வது வழக்கம். அதன்படி தோனி, பந்தை வாங்கியதால் அவர் ஒரு நாள் போட்டியில் இருந்து ஓய்வு பெற போகிறார் என்று பரபரப்பாக விவாதிக்கத் தொடங்கினர்.
ரசிகர்கள் இப்படி விவாதிப்பதற்கு முன் உதாரணம் இல்லாமல் இல்லை. டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு அறிவிப்பை வெளியிடும் முன் தனது கடைசி போட்டியில் நடுவர்களிடம் இருந்து தோனி ஸ்டம்பை வாங்கினார். அதனால் இப்போதும் அவர் ஓய்வு பெறப்போகிறார் என்று ரசிர்கள் நினைத்தனர்.
37 வயதான டோனி 2014 ஆம் ஆண்டில் டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வுபெற்றார். இப்போது ஒருநாள் மற்றும் 20 ஓவர் போட்டியில் மட்டும் விளையாடி வருகிறார். உலகக் கோப்பை வரை அவர் விளையாடுவார் என்று கூறப்படுகிறது. அதற்குள் இப்படி ஒரு முடிவை எப்படி எடுப்பார்? என்றும் கேள்விகள் வெளியானது.
இந்நிலையில், அவர் பந்தை கேட்டு வாங்கியது ஏன் என்பது பற்றி பயிற்சியாளர் ரவி சாஸ்திரியிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர், ‘தோனி, அந்த பந்தை வாங்கியது பந்துவீச்சு பயிற்சியாளர் பரத் அருணிடம் காண்பிக்க வேண்டும் என்பதற்காகத்தான். போட்டிக்குப் பின் பந்தின் தன்மை எப்படி இருக்கிறது, என்ன நிலையில் இருக்கிறது என்பதை அவரிடம் காண்பிப்பதற்காகவே வாங்கினார். மற்றபடி அதில் வேறு ஒன்றும் இல்லை. அவர் பற்றி வந்த செய்திகள் பொய்யானவை. அவர் எங்கும் ஓடிப்போகவில்லை. அணியில்தான் இருக்கிறார்’ என்றார்.