விளையாட்டு

"தோனி சச்சினுக்கு கொடுத்த பரிசை கோலியால் கொடுக்க முடியவில்லை" வருந்தும் ரசிகர்கள்

"தோனி சச்சினுக்கு கொடுத்த பரிசை கோலியால் கொடுக்க முடியவில்லை" வருந்தும் ரசிகர்கள்

webteam

உலகக் கோப்பை தொடரில் நேற்று நடைபெற்ற முதல் அரையிறுதி போட்டியில் நியூசிலாந்து அணியிடம் 18 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா தோல்வியடைந்தது. இதன்மூலம் இந்திய அணி உலகக் கோப்பை தொடரில் இருந்து வெளியேறியது. இது இந்திய அணியின் ஜாம்வானான தோனிக்கு கடைசி உலகக் கோப்பையாக அமைந்தது. எனவே இந்த உலகக் கோப்பையை வென்று தோனிக்கு நல்ல பிரியாவிடையளிக்க வேண்டும் என்ற கனவும் தகர்ந்துள்ளது. 

இந்நிலையில் 2011ஆம் ஆண்டு இந்திய அணி உலகக் கோப்பையை வென்று சச்சினுக்கு பிரியாவிடை கொடுத்த தோனிக்கு, தற்போது அது கிடைக்காதது குறித்து சமூகவலைத்தளங்களில் ரசிகர்கள் ஆதங்கப்பட்டு வருகின்றனர். 

2011ஆம் ஆண்டு உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் சச்சின் டெண்டுல்கர் இடம்பெற்றிருந்தார். அது சச்சின் டெண்டுல்கருக்கு 6ஆவது உலகக் கோப்பை தொடராகும். கிரிக்கெட் உலகில் பல தரப்பட்ட சாதனைகளை படைத்திருந்தாலும் உலகக் கோப்பையை தன் கையில் பிடிக்கும் கனவு சச்சினுக்கு அப்போது வரை எட்ட முடியாத கனவாகவே இருந்தது. 2003ஆம் ஆண்டு இந்திய அணி உலகக் கோப்பை தொடரின் இறுதி போட்டி வரை சென்றது. எனினும் இறுதி போட்டியில் இந்திய அணி ஆஸ்திரேலியா அணியிடம் தோல்வியடைந்து கோப்பை வெல்லும் வாய்ப்பை தவறவிட்டது. 

இதனையடுத்து 2011ஆம் ஆண்டு உலகக் கோப்பை சச்சினின் கடைசி உலகக் கோப்பை என்பதால் இந்திய அணி வீரர்கள் அனைவரும் ஒருமித்த குரலாய் "சச்சினுக்காக இந்திய அணி உலகக் கோப்பையை வெல்வோம்" என்ற எண்ணத்தை வெளிப்படுத்தினர். அத்துடன் அப்போதைய இந்திய கேப்டன் தோனி, “எங்களுக்கு மிகவும் பிடித்தவர் சச்சின் டெண்டுல்கர். இது அவரின் கடைசி உலகக் கோப்பை தொடராக அமைந்திருக்கிறது. எனவே அவருக்கு இந்த உலகக் கோப்பையை பரிசாக அளிக்க இந்திய அணி வீரர்கள் தங்களால் முடிந்த அனைத்தையும் செய்வார்கள். இந்த உலகக் கோப்பையை அவருக்கு பெற்று தருவதே எங்களின் எண்ணம்” எனத் தெரிவித்தார்.

அதற்கேற்றார் போல் இந்திய அணி 2011ஆம் ஆண்டு உலகக் கோப்பை இறுதி போட்டியை அடைந்தது. இறுதி போட்டியில் இலங்கை அணியை எதிர்த்து இந்திய அணி விளையாடியது. முதலில் ஆடிய இலங்கை அணி 274 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து களமிறங்கிய இந்திய அணியில் சேவாக் மற்றும் சச்சின் குறைவான ரன்களில் ஆட்டமிழந்தனர். இதனால் இந்திய அணி மீண்டும் உலகக் கோப்பை வெல்லுமா என்ற எண்ணம் ரசிகர்களிடம் எழுந்தது. அத்துடன் சச்சின் ஆட்டமிழந்தவுடன் மைதானமே அமைதியானது.

எனினும் அந்தப் போட்டியில் வழக்கமாக வரும் இடத்திற்கு மாறாக, இந்திய கேப்டன் தோனி யுவராஜ் சிங்கிற்கு முன் களமிறங்கினார். தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கேப்டன் தோனி இந்திய அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்து சென்றார். அத்துடன் சச்சின் டெண்டுல்கருக்கு எட்டாமல் இருந்த அந்த உலகக் கோப்பையை தோனி பெற்று தந்தார்.

அப்போது பேசிய கோலி "இந்திய அணியை தன் தோள்களில் பல ஆண்டுகளாக சுமந்தவர் சச்சின். இப்போது அவருக்கு உலகக் கோப்பையை பரிசளித்து, நாங்கள் அவரை தோளில் சுமக்கிறோம்"என்றார். அதேபோல நடப்பு உலகக் கோப்பை தொடர் தோனியின் கடைசி உலகக் கோப்பை தொடராக அமைந்தது. எனவே விராட் கோலி தலைமையிலான இந்திய அணி இந்தத் தொடரை வெற்றிப் பெற்று தோனிக்கு உலகக் கோப்பையை பரிசாக அளிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் விராட் கோலி தன்னுடைய கேப்டனுக்கு நல்ல பிரியாவிடை அளிக்கும் வாய்ப்பை தவற விட்டுள்ளார். இது  இந்திய அணி ரசிகர்களிடையே பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. அத்துடன்  2ஆவது முறை தோனி உலகக் கோப்பையை வெல்லும் வாய்ப்பு தகர்ந்தது ரசிகர்களை பெரும் வருத்ததில் ஆழ்த்தியுள்ளது.