மகேந்திர சிங் தோனியின் ஒருநாள் கிரிக்கெட் ஆட்டம் விரைவில் முடிவுக்கு வரலாம் என இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கூறியுள்ளார்.
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுவிட்ட நிலையில், ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் மட்டும் விளையாடி வந்தார். இந்திய அணிக்காக அவர் கடைசியாக விளையாடியது, உலகக் கோப்பை தொடரில் நியூசிலாந்து அணிக்கு எதிரான அரையிறுதிப் போட்டிதான். அதன் பிறகு நடைபெற்ற எந்தவொரு தொடரிலும் தோனி விளையாடவில்லை. விளையாடவில்லை என்பதை விட, அணியில் அவர் சேர்க்கப்படவில்லை என்றே சொல்லலாம்.
தோனி மீண்டும் இந்திய அணிக்காக எப்போது விளையாடுவார் என்பதும் அல்லது விளையாடுவாரா? இல்லையா? என்பதும் இன்றுவரை உறுதியாக தெரியவில்லை. தோனியும் தன்னுடைய நிலைப்பாட்டை இதுவரை தெரிவிக்கவில்லை. இந்திய அணி நிர்வாகமும் இதுவரை தெளிவுப்படுத்தவில்லை. அதனால், இந்திய அணி ஜெர்ஸியில் தோனி எப்போது விளையாடுவார் என அவரது ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர்.
இந்நிலையில், தோனி விரைவில் ஒருநாள் போட்டிகளில் விளையாடுவதை நிறுத்திக் கொள்வார் என்று ரவி சாஸ்திரி கூறியுள்ளார். இதுகுறித்து, சிஎன்என்-க்கு அவர் அளித்த பேட்டியில், “தோனியுடன் நான் உரையாடினேன். இது எங்கள் இருவருக்கு இடையில் நிகழ்ந்த உரையாடல். அவர் தன்னுடைய டெஸ்ட் கிரிக்கெட் ஆட்டத்தை முடித்துக் கொண்டிருக்கிறார். அவர் விரைவில் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் விளையாடுவதையும் நிறுத்திக் கொள்வார். ஒருநாள் போட்டிகளில் விளையாடுவதை அவர் நிறுத்த அனைத்து வாய்ப்புகளும் உள்ளன.
நீண்ட காலமாக அனைத்து விதமான போட்டிகளிலும் அவர் விளையாடி வந்துள்ளதால், அவருக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும். இந்த வயதில் அவருக்கு டி20 கிரிக்கெட் மட்டுமே விளையாட வாய்ப்புள்ளது. அவர் திரும்பவும் விளையாட வேண்டும். ஏனெனில் அவர் ஐபிஎல் போட்டிகளில் விளையாடப் போகிறார். அதில் அவர் உடற்தகுதி எப்படி இருக்கிறது என்பதை பார்க்கலாம்.
ஐபிஎல் தொடரில் தோனி சிறப்பாக விளையாடும் பட்சத்தில், இருபது ஓவர் உலகக் கோப்பையில் அவர் பங்கேற்க இன்னும் வாய்ப்புள்ளது. ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடும் பட்சத்தில் தானாகவே அவர் அணிக்குள் வந்துவிடுவார்” என்று கூறியுள்ளார்