கிரிக்கெட் உலகில் தனக்கென தனி பாணியை உருவாக்கி கூல் கேப்டனாக வலம்வந்த தோனி தலைமையிலான இந்திய அணி 2011 ஆண்டு ஏப்ரல் 2 இதேநாளில் நடைபெற்ற உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் கோப்பையை வென்று கிரிக்கெட் ரசிகர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியதோடு இந்தியாவிற்கும் பெருமை சேர்த்தது. அந்த நாளின் நினைவுகளை கொஞ்சம் திரும்பிப் பார்க்கலாம்.
தோனி தலைமையிலான இந்திய அணியில் டெண்டுல்கர், சேவாக், காம்பிர், விராட்கோலி, யுவராஜ், ரெய்னா, ஹர்பஜன், ஜாகிர்கான், முனாப்படேல், ஸ்ரீசாந்த, நெக்ரா, அஸ்வின், யூசுப் பதான், சாவ்லா ஆகியோர் இடம் பெற்றிருந்தனர். இப்படை தோற்கின் எப்படை வெல்லும் என்று சொல்வார்கள் அதை அப்படியே நிரூபித்து காட்டியிருந்தது இந்திய அணி. அனுபவமும் இளமையும் ஒன்றுசேர கூல் கேப்டன் தனது பணியை சிறப்பாக செய்து உலக கோப்பையை பெற்றுத்தந்தார்.
2011ஆம் ஆண்டு நடைபெற்ற உலக கோப்பை கிரிக்கெட் போட்டியை இந்தியா இலங்கை வங்களா தேசம் ஆகிய மூன்று நாடுகள் இணைந்து நடத்தியது. மொத்தம் 14 அணிகள் கலந்து கொண்ட இப்போட்டியில், ஒவ்வொரு குழுவிலும் தலா 7 அணிகள் வீதம் இரண்டு குழுக்களாக பிரிக்கப்பட்டு போட்டிகள் நடைபெற்றன.
பாகிஸ்தான், இலங்கை, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, ஜிம்பாவே, கனடா, கென்யா ஆகிய 7 அணிகள் ஏ பிரிவிலும். இந்தியா, தென்ஆப்ரிக்கா, இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், வங்காளதேசம், அயர்லாந்து, மற்றும் நெதர்லாந்து ஆகிய 7 அணிகள் பி பிரிவிலும் இடம் பெற்றிருந்தன.
இப்போட்டியில் திறமைவாய்ந்த இந்திய அணி, வங்களாதேச அணியுடன் முதல் போட்டியில் விளையாடியது. டாஸ் வென்ற வங்கதேசம் பவுலிங்கை தேர்வு செய்தது. இதை பயன்படுத்தி முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 50 ஓவர்களில் 4 விக்கெட்களை இழந்து 370 ரன்களை குவித்தது. இதில் வீரேந்திர சேவாக் 140 பந்துகளை சந்தித்து 175 ரன்களை விளாசினார். இதையடுத்து 370 ரன்களை துரத்திய வங்களாதேச அணி 50 ஓவர்களில் 9 விக்கெட்களை இழந்து 283 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது. வங்களா தேசத்திற்கு எதிராக இந்தியா அடித்த 370 ரன்கள்தான் இந்த தொடரின் அதிகபட்ச ஸ்கோர் ஆகும்.
அதேபோல ஏ பிரிவில் இடம்பெற்றிருந்த நியூசிலாந்து அணியும் கென்யா அணியும் சென்னை சேப்பாகம் மைதானத்தில் பலப்பரிட்சை நடத்தியது. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த கென்யா அணி 23.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 69 ரன்கள் மட்டுமே எடுத்தது. எளிதான இலக்கை விரட்டிய நியூசிலாந்து 8 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 72 ரன்கள் எடுத்து தனது முதல் வெற்றியை பதிவு செய்தது. இப்போட்டியில் கென்யா எடுத்த 69 ரன்களே இத்தொடரின் குறைந்தபட்ச ஸ்கோர் ஆகும்.
ஒவ்வொரு பிரிவிலும் முதல் நான்கு இடங்களை பெற்ற அணிகள் காலிறுதி போட்டிக்கு தகுதி பெற்றன. இதில், ஏ பிரிவில் இடம் பெற்றிருந்த பாகிஸ்தான், இலங்கை, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய அணிகளும், பி பிரிவில் இடம் பெற்றிருந்த தென்னாப்ரிக்கா, இந்தியா, இங்கிலாந்து, மேற்கிந்திய தீவுகள் ஆகிய நான்கு அணிகளும் காலிறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றன.
பாகிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ் இடையிலான இத்தொடரின் முதல் காலிறுதி ஆட்டம் இந்தியாவில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்று பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி 43.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 112 ரன்களை மட்டுமே எடுத்தது. எளிதான இலக்கை விரட்டிய பாகிஸ்தான் 20.5 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 113 ரன்களை எடுத்து வெற்றிபெற்று அரையிறுதி போட்டிக்கு தகுதி பெற்றது.
இந்தியா ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடைபெற்ற இரண்டாவது காலிறுதிப் போட்டியில் டாஸ் வென்று பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி, 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 260 ரன்களை குவித்தது. இதில் ரிக்கி பாண்டிங் 118 பந்துகளை எதிர்கொண்டு 104 ரன்களை விளாசினார். அடுத்து களம்கண்ட இந்திய அணி 47.4 ஓவர்களில் 5 விக்கெட்டை இழந்து 261 ரன்களை எடுத்து அரையிறுதிப் போட்டிக்குள் நுழைந்தது.
மூன்றாவது அரையிறுதிப் போட்டி நியூசிலாந்து மற்றும் தென்னாப்ரிக்கா அணிகளுக்கு இடையே நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்று போட்டிங் தேர்வு செய்த நியூசிலாந்து அணி 50 ஓவர்களில் 8 விகெட்டை இழப்பிற்கு 221 ரன்களை எடுத்தது. எளிமையான இலக்கை எதிர்கொண்ட தென்னாப்ரிக்கா 43.2 ஓவரில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 172 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை தழுவியது. இப்போட்டியில் வென்றதன் மூலம் நியூசிலாந்து அணி அரையிறுதிப் போட்டிக்கு தகுதிபெற்றது.
இலங்கை இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்ற காலிறுதி போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங் செய்தது. இதில் அந்த அணி 50 ஓவரில் 6 விக்கெட்களை இழந்து 229 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆடிய இலங்கை அணி 39.3 ஓவரில் விககெட் இழப்பின்றி 231 ரன்களை எடுத்து அரையிறுதி போட்டிக்கு தகுதிபெற்றது. இப்போட்டியில் தில்சான் 115 பந்துகளை சந்தித்து 108 ரன்கள் எடுத்து அவுட்டாகாமல் இருந்தார்.
முதல் அரையிறுதிப் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி. இலங்கை பந்து வீச்சை சாமாளிக்க முடியாமல் 48.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 217 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதையடுத்து தொடர்ந்து விளையாடிய இலங்கை அணி 47.5 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 220 ரன்களை எடுத்து இறுதிப் போட்டிக்கு தகுதிபெற்றது.
இந்தியா பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே கிரிக்கெட் போட்டி நடைபெற்றால் அனல் பறக்கும் அதுவும் உலக கோப்பை போட்டியில் சொல்லவா வேண்டும். ரசிகர்களின் ஆர்ப்பரிக்கும் ஆராவாரத்திற்கு இடையே நடைபெற்ற இரண்டாவது அரையிறுதியில் போட்டியில் பாகிஸ்தானுடன் மோதிய இந்திய அணி டாஸை வென்று போட்டிங்கை தேர்வு செய்தது. 50 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 260 ரன்களை குவித்தது. அடுத்து ஆடிய பாகிஸ்தான் அணி 49.5 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 231 ரன்கள் எடுத்து தோல்வியை தழுவியது. இப்போட்டியில் வென்றதன் மூலம் இந்திய அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.
ஏப்ரல் 2 இதேநாளில் மும்பை வான்கடே மைதானத்தில் நடந்த இறுதிப் போட்டியில் இந்திய அணி இலங்கை அணியுடன் மோதியது. இரண்டு அணிகளும் ஒருவருக்கு ஒருவர் சளைத்தவர்கள் இல்லை என்பதுபோல் பலம் வாய்ந்த அணியாக இருந்தனர். 1983ல் உலக கோப்பையை வென்ற இந்திய அணி இந்த முறை வெற்றிபெற்று இரண்டாவது முறையாக கோப்பையை வென்றுவிட வேண்டும் என்றும். 1996ல் கோப்பையை வென்ற இலங்கை அணி இரண்டாவது முறையாக கோப்பையை கைப்பற்ற வேண்டும் என்ற முனைப்புடன் களம்கண்டது.
மும்பை வான்கடே மைதானத்தில் நிறம்பிவழிந்த ரசிகர்களின் ஆரவாரத்திற்கு மத்தியில் டாஸ் போடப்பட்டது. இதில் இலங்கை கேப்டன் சங்ககர வெற்றிபெற்றார். ஆனால் ரசிகர்களின் சப்தத்தால் சங்ககரா கேட்டது எனக்கு கேட்கவில்லை என்று போட்டியின் நடுவர் கூறவே இரண்டாவது முறையாக டாஸ் போடப்பட்டது. இதிலும் சங்ககரா வெற்றிபெற்று முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.
பரபரப்பாக விறுவிறுப்பாக நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் முதலில் ஆடிய இலங்கை அணி 50 ஓவரில் 6 விக்கெட்களை இழந்து 274 ரன்களை குவித்தது. இதில் ஜெயவர்தனே 88 பந்துகளை எதிர்கொண்டு 103 ரன்களை குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். கடினமான இலக்குதான் இருந்தாலும் ஒரு கை பார்ப்போம் என்ற துடிப்போடு இந்திய அணி ஆட்டத்தை தொடங்கியது.
ஆரம்பம் முதலே அடித்து ஆடிய இந்திய அணி 48.2 ஓவரில் 4 விக்கெட்களை இழந்து 277 ரன்களை எடுத்து வெற்றிபெற்றது. காம்பீர் 122 பந்துகளை சந்தித்து 99 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். 28 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய அணி உலககக் கோப்பையை கைப்பற்றியது. தோனி அடித்த சிக்சரை அடுத்து 2011 உலக கோப்பையை போட்டி நிறைவுபெற்றது. இந்திய கிரிக்கெட் ரசிகர்களின் வேண்டுதலை கனவை நனவாக்கிய பெருமை தல தோனியையே சேரும். இரண்டாவது முறையாக உலக கோப்பையை பெற்றுத்தந்த வீரர்களை இந்நாளில் நினைவு கூர்வோம் நன்றியுடன்.