விளையாட்டு

`ஐபிஎல் வரலாற்றில் தலைசிறந்த வீரர், பேட்ஸ்மேன் யார் யார்?’- முன்னணி வீரர்கள் சொன்ன பதில்!

webteam

ஐபிஎல்லில் தலைசிறந்த வீரர் தோனிதான் என ஐபிஎல்லில் விளையாடிய முன்னணி ஜாம்பவான்கள் தெரிவித்துள்ளனர்.

ஜியோ சினிமா ஒரிஜினல் தொடரான ‘லெஜண்ட்ஸ் லவுஞ்ச்’ ('Legends Loung') இன் புதிய எபிசோடான 'Success Mantra' சமீபத்தில் வெளியானது. இதில் ஐபிஎல் ஜாம்பவான்களான சுரேஷ் ரெய்னா, கிறிஸ் கெய்ல், ராபின் உத்தப்பா, அனில் கும்ப்ளே, பார்த்தீவ் படேல் மற்றும் ஸ்காட் ஸ்டைரிஸ் ஆகியோர் கலந்துகொண்டனர். அப்போது `ஐபிஎல் வரலாற்றில் தலைசிறந்த வீரர் யார்? மிகவும் சுயநலமற்ற வீரர் யார்?’ என்கிற கேள்விகளுக்கு, விவாதத்துடன் தங்கள் எண்ணங்களையும் பதில்களையும் அவர்கள் பகிர்ந்து கொண்டனர். அதில் இவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து, ‘லெஜண்ட்ஸ் லவுஞ்ச்’ நிகழ்ச்சியில் ஐபிஎல் வரலாற்றில் மிகச்சிறந்த வீரராக எம்.எஸ்.தோனியையே தேர்வு செய்தனர்.

தோனியைத் தேர்வு செய்தது குறித்து அவர்கள், “ஐபிஎல்லில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எம்.எஸ்.தோனி 4 முறை கோப்பைகள் வென்று தந்துள்ளார். அது மட்டுமின்றி, அணிக்கு எப்போதும் ஊக்கம் தரும் வீரர்களில் ஒருவராக அவர் உள்ளார்” எனக் காரணம் தெரிவித்துள்ளனர். இதுவரை 234 ஐபிஎல் போட்டிகளில் விளையாடி உள்ள தோனி, அவற்றில் 4,978 ரன்கள் எடுத்துள்ளார். அதில் 24 அரைசதங்களும் அடக்கம். சென்னை அணியின் கேப்டனாக இருக்கும் தோனி, இந்த ஆண்டுடன் ஐபிஎல்லில் இருந்தும் ஓய்வுபெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த 2020ஆம் ஆண்டுடன் அவர், அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் ஓய்வுபெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. இன்று நடந்த இந்த விவாதத்தின்போது, கெய்லிடம் `ஐபிஎல்லில் சிறந்த வெளிநாட்டு வீரர் யார்’ எனக் கேட்கப்பட்டது. அதற்கு அவர் சிரித்தப்படியே, தன் பெயரையே உச்சரித்தார். இருப்பினும், மற்ற வீரர்கள் ஏ.பி. டி.வில்லியர்ஸ் மற்றும் டேவிட் வார்னர் ஆகியோரைப் பட்டியலிட்டனர். `ஐபிஎல் வரலாற்றில் சிறந்த இந்திய பேட்ஸ்மேன் சுரேஷ் ரெய்னா’ என அனில் கும்ப்ளே கூறியதை இதர வீரர்களும் ஒப்புக்கொண்டனர்.