கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனி, பேட்மிண்டன் வீராங்கனை பி.வி. சிந்து ஆகியோருக்கு பத்ம விருதுகள் வழங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
குடியரசு தினத்தன்று மாலையில் டெல்லியில் நடைபெறும் விழாவில் விருதுகள் வழங்கப்படவுள்ளன. பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு ஆண்டுதோறும் பத்ம விருதுகளை வழங்கி மத்திய அரசு கவுரவித்து வருகிறது. அதன்படி விளையாட்டுத் துறையில் சிறந்து விளங்கிய முன்னாள் கேப்டன் தோனி, பேட்மிண்டன் வீராங்கனை பி.வி. சிந்து, மல்யுத்த வீராங்கனை சாக்ஷி மாலிக் உள்ளிட்டோரின் பெயர்கள் பத்ம விருதுகள் வழங்க பரிந்துரைக்கப்பட்டது .
இந்திய அணிக்கு 2வது முறையாக உலகக்கோப்பையை வென்று தந்தவரும் கிரிக்கெட்டில் பல்வேறு வெற்றிகளை தேடித்தந்தவருமான மகேந்திர சிங் தோனிக்கு பத்ம விருது வழங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதேபோல் கடந்த ஆண்டு ரியோவில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் பேட்மிண்டன் போட்டியில் கலந்து கொண்டு வெள்ளிப் பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனையான பி.வி. சிந்துவுக்கும் இவ்விருதினை வழங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. பி.வி.சிந்துவின் பயிற்சியாளரான கோபி சந்து-வுக்கும் பத்ம விருது வழங்கப்பட உள்ளது.