ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் 3 ஒரு நாள் போட்டிகளில் இருந்து இந்திய வீரர் தவான் விலகியுள்ளார். அவர் மனைவி ஆயிஷா முகர்ஜிக்கு உடல்நிலை சரியில்லாததால் இந்த முடிவை அவர் எடுத்துள்ளார்.
இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடுகிறது. முதல் ஒரு நாள் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை நடக்கிறது. முதல் மூன்று ஒரு நாள் போட்டிக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டு இருந்தது. இதில் இடம் பிடித்திருந்த தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான் நேற்று திடீரென விலகினார். அவரது மனைவி ஆயிஷாவுக்கு உடல்நலம் சர்யில்லாததால், அணியில் இருந்து தன்னை விடுவிக்கும்படி இந்திய கிரிக்கெட் வாரியத்தை கேட்டுக் கொண்டார். அதை வாரியம் ஏற்றுக்கொண்டதை அடுத்து விலகியுள்ளார். தவானுக்கு பதிலாக ரஹானே ஆடுவார் என்று தெரிகிறது.
ஆஸ்திரேலிய அணியில் தொடக்க ஆட்டக்காரர் ஆரோன் பிஞ்ச் பயிற்சியின் போது காயமடைந்துள்ளார். வலது காலில் காயம் அடைந்துள்ள அவர் முதலாவது ஒரு நாள் போட்டியில் ஆடுவது சந்தேகம் தான். தொடரில் இருந்து அவர் விலகுவதற்கு வாய்ப்பு உள்ளதாக ஆஸ்திரேலிய அணி வட்டாரங்கள் தெரிவித்தன.