விளையாட்டு

50/4.. சரிந்த அணியை தூக்கி நிறுத்திய ரிஷப், பவெல் ஜோடி! மும்பைக்கு 160 ரன்கள் இலக்கு!

50/4.. சரிந்த அணியை தூக்கி நிறுத்திய ரிஷப், பவெல் ஜோடி! மும்பைக்கு 160 ரன்கள் இலக்கு!

ச. முத்துகிருஷ்ணன்

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் இன்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்று வரும் ஆட்டத்தில் ஆர்சிபி அணியின் ஏகோபித்த ஆதரவுடன் ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும், ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி கேபிடல்ஸ் அணியும் மோதி வருகின்றன. டாஸ் வென்ற மும்பை அணியின் கேப்டன் ரோகித் ஷர்மா பவுலிங்கை தேர்வு செய்தார். டெல்லி அணியின் ஓப்பனர்களாக பிருத்வி ஷா, டேவிட் வார்னர் ஆகியோர் களமிறங்கினர்.

டேனியல் சாம்ஸ் வீசிய முதல் ஓவரில் பவுண்டரி விளாசி டெல்லியின் ரன் கணக்கை துவக்கி வைத்தார் பிருத்வி ஷா. ஹிருத்திக் ஷோக்கீன் வீசிய அடுத்த ஓவரில் வார்னரும் பவுண்டரி விளாசி அதிரடிக்கு தயாரானார். ஆனால் சாம்ஸ் வீசிய 3வது ஓவரில் சிக்கி அவுட்டாகி வெளியேறினார் வார்னர். அடுத்து வந்த மிட்செல் மார்ஷ் பும்ராவின் வேகத்தில் சிக்கி கோல்டன் டக் அவுட் ஆகி அதிர்ச்சி அளித்தார். அடுத்து வந்த கேப்டன் ரிஷப் பண்ட் நிதானமாக விளையாடத் துவங்கினார்.

பும்ரா வீசிய பவர்பிளேவின் இறுதி ஓவரில் பிருத்வி ஷாவும் தன் விக்கெட்டை பறிகொடுக்க 31 ரன்களுக்குள் 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது டெல்லி அணி. அடுத்து களமிறங்கிய சர்பராஸ் கான் சிக்ஸர் அடித்து அசத்திவிட்டு, அடுத்த ஓவரில் மார்கண்டே பந்துவீச்சில் விக்கெட்டை பறிகொடுத்து நடையைக் கட்டினார். 50 ரன்களுக்குள் டெல்லி அணி 4வது விக்கெட்டையும் இழந்தது. அடுத்து களமிறங்கிய ரோவ்மென் பவல் கேப்டன் பண்டுடன் கூட்டணி அமைத்து நிதானமாக ஆடத் துவங்கினார்.

ஹிருத்திக் ஷோக்கீன் வீசிய 12வது ஓவரில் பவல் 2 சிக்ஸர்கள், ஒரு பவுண்டரிகளை விளாச் ஸ்கோர் எகிறத் துவங்கியது. மார்கண்டே வீசிய அடுத்த ஓவரிலும் பவல் தலா ஒரு பவுண்டரி, சிக்ஸர் விளாசி டெல்லிக்கு நம்பிக்கை அளித்தார். நிதானமாக ஆடிக் கொண்டிருந்த பண்ட், ரமன்தீப் சிங் வீசிய 16வது ஓவரில் 2 பவுண்டரி, ஒரு சிக்ஸர் விளாசிவிட்டு ஓவரின் கடைசி பந்தில் அவுட்டாகி வெளியேறினார். அடுத்து வந்த அக்சர் படேலும் அதிரடியாக விளையாடத் துவங்கினார்.

மறுபுறம் அதிரடியாக ஆடிக் கொண்டிருந்த பவல் 43 ரன்கள் எடுத்த நிலையில், பும்ரா பந்துவீச்சில் க்ளீன் போல்டாகி வெளியேறினார். அடுத்து வந்த ஷர்துலும் ரமன்தீப் சிங் வீசிய கடைசி ஓவரில் அவுட்டாகி வெளியேறினார். 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 159 ரன்களை குவித்தது டெல்லி அணி. மும்பை அணியில் பும்ரா 25 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 160 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை எட்டினால் மட்டுமே இ சாலா கப் நிஜமாகும் என்ற நிலையில் விளையாடி வருகிறது மும்பை இந்தியன்ஸ் அணி.