விளையாட்டு

‘வாழ முடியா’ காற்று மாசு : குழந்தைக்காக இந்தியாவை விட்டே வெளியேறும் குடும்பம்..!

‘வாழ முடியா’ காற்று மாசு : குழந்தைக்காக இந்தியாவை விட்டே வெளியேறும் குடும்பம்..!

webteam

6 வயது மகளால் டெல்லி காற்று மாசில் வாழ முடியாது என்பதால் ஒரு குடும்பம் இந்தியாவிலிருந்தே வெளியேறும் நிலைக்கு வந்துள்ளது.

டெல்லி அருகாமையில் உள்ள நொய்டாவில் வசிக்கும் தம்பதியினர் மனோஜ் ஓஜா மற்றும் துலிகா. இவர்களின் 6 வயது மகள் பரிதி. லட்சக்கணக்கில் வருமானம் ஈட்டும் இந்த குடும்பத்தினர், சொந்த வீடு, நல்ல வேலை, உறவினர்கள் என நொய்டாவில் சகல வசதிகளுடன் இருந்தாலும், தற்போது வாழ முடியா சூழலுக்கு தள்ளப்பட்டு, மன வருத்தத்துடன் கனடா புறப்பட தயாராகிவிட்டனர். இதற்கு காரணம் டெல்லி சுற்றுவட்டார பகுதியின் காற்று மாசு தான்.

கடந்த 2017ஆம் தீபாவளிக்கு பிறகு ஆரம்பித்தது இந்தக் குடும்பத்தின் பிரச்னை. அப்போது குழந்தை பரிதிக்கு சுவாசப் பிரச்னைகள் ஏற்பட்டுள்ளது. மூச்சுவிட சிரமப்பட்ட குழந்தைக்கு, தொடர் இருமல் ஏற்பட்டிருக்கிறது. அன்று இரவு முழுவதும் பரிதியால் தூங்க முடியவில்லை. காற்று மாசால் கடும் அவதிக்குள்ளாகியுள்ளார். அடுத்த நாள் மருத்துவரை பார்த்தபோது, குழந்தையின் சுவாச நிலை மோசமடைந்திருப்பதாகவும், இதே நிலை தொடர்ந்தால்குழந்தைக்கு பெரும் இன்னல் ஏற்படும் என்றும் மருத்துவர்கள் கூறியுள்ளனர். 

இதன்பின்னர் தொடர் சிகிச்சையில் குழந்தை பரிதி இருந்து வருகிறார். ஆனாலும் மற்ற குழந்தைகள் போல இயல்பாக அவரால் வாழ முடியவில்லை. அவர் வீட்டில் இருந்து வெளிப்பகுதியில் சென்று விளையாடினால் உடல்நிலை மற்றும் சுவாசப் பிரச்னைகள் ஏற்படுகின்றன. இதனால் குழந்தை பெரும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார். பள்ளிக்கு செல்லாமல், தொடர் விடுமுறைகளை அவ்வப்போது எடுத்துள்ளார். இந்நிலையில் தற்போது டெல்லி சுற்றுவட்டாரப் பகுதியின் காற்று மாசு நிலை மேலும் மோசமடைந்திருப்பதால், குழந்தைக்கு அதிகப்படியான சுவாசப் பிரச்னைகள் ஏற்பட ஆரம்பித்துள்ளது.

இதுதொடர்பாக குழந்தையின் குடும்பத்தினர் மருத்துவரை அணுகியுள்ளனர். மருத்துவரிடம் இதற்கு தீர்வு தான் என்ன என்று குடும்பம் கேட்க, அதற்கு நீங்கள் இந்த இடத்தில் இருந்து வெளியேறுவதை தவிர வேறு வழியல்ல என்று மருத்துவர் கூறியுள்ளார். இதையடுத்து குழந்தையின் பெற்றோர் கோவா செல்லலாமா ? என்று கேட்க, அங்கு சென்றாலும் ஒன்றரை வருடத்தில் குழந்தையின் சுவாசப் பிரச்னைகள் மோசமடையும் என மருத்துவர் கூறியிருக்கிறார். இதனால் காற்று மாசு முற்றிலும் இல்லாத இடத்திற்கு செல்ல முடிவு செய்த அந்தக் குடும்பம், தற்போது கனடா செல்லும் நிலைக்கு வந்திருக்கிறது. இந்தியாவை விட்டு பிரிய மனமில்லாவிட்டாலும், வேறு வழியின்றி முடிந்த வரை விரைவாக அவர்கள் கனடா செல்லவுள்ளனர்.