விளையாட்டு

79 பந்துகளில் 205 ரன்கள்! டி20 போட்டியில் முதல் இரட்டைச் சதம் விளாசிய இந்திய வீரர்

79 பந்துகளில் 205 ரன்கள்! டி20 போட்டியில் முதல் இரட்டைச் சதம் விளாசிய இந்திய வீரர்

jagadeesh

டெல்லியை சேர்ந்த கிரிக்கெட் வீரர் சுபோத் பாட்டி உள்ளூரில் நடைபெற்ற டி20 போட்டியொன்றில் 79 பந்துகளில் 205 ரன்கள் குவித்து சாதனைப் படைத்து பலரது புருவங்களை உயர்த்தியுள்ளார்.

டெல்லி லெவன் அணிக்கும் சிம்பா அணிக்கும் கிளப் கிரிக்கெட் டி20 போட்டி நடைபெற்றது. அதில் முதலில் பேட்டிங் செய்த டெல்லி லெவன் அணி 20 ஓவர் முடிவில் 256 ரன்களை எடுத்தது. இதில் விளையாடிய சுபோத் பாட்டி 79 பந்துகளில் 205 ரன்களை குவித்தார். இதில் 17 சிக்ஸர்களும், 17 பவுண்டரிகளும் அடங்கும். இதன் மூலம் டி20 போட்டிகளில் முதல் முதலாக இரட்டைச் சதம் அடித்த முதல் வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார் சுபோத் பாட்டி.

30 வயதாகும் சுபோத் பாட்டி, அடிப்படையில் ஒரு பவுலர். வலது கை வேகப்பந்து வீச்சாளர். ஆனால், பேட்டிங்கிலும் தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டு வருகிறார். டெல்லி அணிக்காக 2015 ஆம் ஆண்டு அறிமுகமான சுபோத் பாட்டி அந்த அணிக்காக ரஞ்சி, சையத் முஷ்டக் அலி கோப்பை, விஜய் ஹசாரே கோப்பைகளில் விளையாடி வருகிறார்.

சர்வதேச டி20 கிரிக்கெட்டில் கிறிஸ் கெயில் அதிகபட்சமாக  66 பந்துகளில் 175* ரன்கள் விளாசியிருக்கிறார். இவருக்கு அடுத்தபடியாக ஆஸ்திரேலிய வீரர் ஆரோன் ஃபின்ச் 76 பந்துகளில் 172 ரன்களை விளாசியுள்ளார். அடுத்த இடத்தில் மசகட்சா இருக்கிறார். இவர் 71 பந்துகளில் 162* ரன்கள் விளாசி இருக்கிறார். இப்போது இவர்கள் ஒட்டுமொத்த சாதனைகளையும் இந்திய வீரர் சுபோத் தகர்த்து சாதனைப்படைத்து இருக்கிறார்.