விளையாட்டு

கொல்கத்தாவுக்கு எதிராக டாஸ் வென்ற டெல்லி -கொரோனாவிலிருந்து மீண்டு அணிக்கு திரும்பிய மார்ஷ்

கொல்கத்தாவுக்கு எதிராக டாஸ் வென்ற டெல்லி -கொரோனாவிலிருந்து மீண்டு அணிக்கு திரும்பிய மார்ஷ்

சங்கீதா

15-வது சீசன் ஐபிஎல் போட்டியில், கொல்கத்தா அணிக்கு எதிரான ஆட்டத்தில் டெல்லி அணி டாஸ் வென்று பவுலிங்கை தேர்வு செய்துள்ளது.

நடப்பாண்டுக்கான 15-வது சீசன் ஐபிஎல் போட்டி, தற்போது பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இதுவரை 40 போட்டிகள் முடிவடைந்தநிலையில், மும்பை வான்கடே மைதானத்தில் இன்று 41-வது லீக் போட்டியில் ரிஷப் பந்த் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும், ஸ்ரேயாஸ் அய்யர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதுகின்றன.

இதில் டாஸ் வென்ற டெல்லி அணியின் கேப்டன் ரிஷப் பந்த் பவுலிங்கை தேர்வு செய்துள்ளார். இதையடுத்து ஸ்ரேயாஸ் அய்யர் தலைமையிலான கொல்கத்தா அணி பேட்டிங்கில் களமிறங்குகிறது. டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 3 வெற்றி, 4 தோல்வியுடனும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 3 வெற்றி, 5 தோல்வியுடனும் தலா 6 புள்ளிகள் பெற்றுள்ளன. நிகர ரன்ரேட் அடிப்படையில் டெல்லி 7-வது இடத்திலும், கொல்கத்தா 8 -வது இடத்திலும் உள்ளன.

இதனால் 4-வது வெற்றியை பெறப்போகும் அணி எது என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது. ‘லீக்’ முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகளே ‘ப்ளேஆஃப்’ சுற்றுக்கு தகுதி பெறும் என்பதால், அடுத்த சுற்று வாய்ப்பில் நீடிக்க இனி ஒவ்வொரு ஆட்டமும் இரு அணிக்குமே முக்கியமாகும். கடந்த போட்டியின் போது ராஜஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில், கடைசி ஓவரில் நோ பால் சர்ச்சையால் அபராதம் விதிக்கப்பட்டநிலையில், இன்று டெல்லி அணி களமிறங்கியுள்ளது. கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டுள்ள மிச்செல் மார்ஷ் டெல்லி அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

டெல்லி கேப்பிட்டல்ஸ்:

பிருத்வி ஷா, டேவிட் வார்னர், ரிஷப் பந்த் (கேப்டன், விக்கெட் கீப்பர்), மிச்செல் மார்ஷ், லலித் யாதவ், ரோவ்மன் பவல், அக்சர் படேல், ஷர்துல் தாக்கூர், குல்தீப் யாதவ், முஸ்தபிசுர் ரஹ்மான், சேட்டன் சக்கரியா

கொல்கத்தா நைட் ரைடர்ஸ்:

ஆரோன் பிஞ்ச், சுனில் நரைன், ஸ்ரேயாஸ் அய்யர் (கேப்டன்), நிதிஷ் ராணா, ரிங்கு சிங், வெங்கடேஷ் அய்யர், ஆண்ட்ரே ரஸல், டிம் சவுத்தி, பாபா இந்திரஜித் (விக்கெட் கீப்பர்), உமேஷ் யாதவ், ஹர்ஷித் ராணா