என் பேட்டிங்கின் மீது ராகுல் டிராவிட் நம்பிக்கை வைத்திருந்தார் என்று இந்திய வேகப்பந்துவீச்சாளர் தீபக் சஹார் தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கு எதிரான 2 ஆவது போட்டியில் பவுலிங், பேட்டிங் என இரண்டிலும் பொறுப்புடன் செயல்பட்டு இந்திய அணிக்கு மகத்தான வெற்றியை தேடிக்கொடுத்தார் இளம் வீரர் தீபக் சஹார். தீபக் சஹார் பொறுப்புடன் பேட்டிங் செய்யவில்லை என்றால் நேற்றையப் போட்டியில் இந்தியா தோல்வியை தழுவியிருக்கும். இக்கட்டான நேரத்தில் பொறுப்பாக விளையாடிய தீபக் சஹார் - புவனேஷ்வர் குமார் ஆகியோர் வெற்றியை தேடிக்கொடுத்தனர்.
இது குறித்து பேசிய தீபக் சஹார் "இதைவிட சிறப்பாக விளையாடி நாட்டுக்கு வெற்றியை தேடி தர முடியாது என நினைக்கிறேன். ராகுல் சார் என்னை அனைத்து பந்துகளையும் விளையாடச் சொன்னார். அவர் இந்திய ஏ அணிக்கு பயிற்சியாளராக இருந்தபோது சில இன்னிங்ஸில் நான் சிறப்பாக பேட் செய்திருக்கிறேன். அதனால் அவர் என் மீது மிகுந்த நம்பிக்கை வைத்திருந்தார். நான் 7 ஆம் வீரராக களமிறங்கி பேட் செய்ய திறனுடையவன் என நம்பினார். அவரின் நம்பிக்கை இப்போது வீண்போகவில்லை என நினைக்கிறேன்" என்றார்.
மேலும் பேசிய அவர் "வெற்றிக்கான இலக்கு 50 ரன்களுக்கும் குறைவாக இருந்தபோது நம்பிக்கை ஏற்பட்டது. விக்கெட்டை இழக்காமல் இருந்தேன். பின்பு ரன்கள் குறைய குறைய சில ஷாட்டுகளை விளையாட தீர்மானித்தேன். சில ரிஸ்க்குகளை எடுத்தேன். எப்படியாவாது அணிக்கு வெற்றியை தேடி கொடுத்திட வேண்டும் என்பதே என் எண்ணமாக இருந்தது. இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள நினைத்தேன்" என்றார் தீபக் சஹார்.
நேற்றைய ஆட்டத்தில் தீபக் சஹார் 82 பந்துகளை சந்தித்து 69 ரன்களை எடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.