விளையாட்டு

டி.ஆர்.எஸ். முறை - என்ன தவறு செய்கிறார் கோலி?

டி.ஆர்.எஸ். முறை - என்ன தவறு செய்கிறார் கோலி?

Rasus

இந்திய அணி ஆஸ்திரேலியாவிற்கு எதிராக புனேவில் நடந்த டெஸ்ட் போட்டியில் 333 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இதையடுத்து, இந்திய அணி டி.ஆர்.எஸ். தொழில்நுட்பத்தை சரியாக பயன்படுத்தவில்லை என்ற குற்றசாட்டு எழுந்தது. இப்போது பெங்களூரில் நடைபெற்று வரும் இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் இதே தவறு நடப்பதாக கிரிக்கெட் விமர்சகர்கள் கூறியுள்ளனர்.

இந்திய அணியின் கேப்டன் விராத் கோலி சக வீரர்களின் கருத்தை பொருட்படுத்தாமல் டி.ஆர்.எஸ் மூலம் அப்பீல் செய்யும் வாய்ப்புகளை தவறாக பயன்படுத்துகிறார் எனபது தான் குற்றச்சாட்டு. டி.ஆர்.எஸ் என்பது நடுவரின் முடிவுக்கு எதிராக அப்பீல் செய்யும் முறை. டெஸ்ட் போட்டிகளில், ஒரு இன்னிங்ஸில் இந்த அப்பீலை 2 முறை தவறாக பயன்படுத்தினால், அதற்கு மேல் 80 ஓவர்கள் முடிந்த பிறகு தான் மறுபடியும் பயன்படுத்த முடியும்.

பெங்களூரில் நடைபெற்று வரும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில், எல்பிடபிள்யூ முறையில் விராத் கோலி ஆட்டமிழந்தார். நடுவர் அவுட் கொடுத்த உடனே, கையை தூக்கிக்காட்டி டி.ஆர்.எஸ். முறை மூலம் அப்பீல் செய்தார். இந்த முடிவுக்கு, அவருடன் களத்தில் இருந்த இந்திய வீரர், கே.எல்.ராகுல் உடன்படவில்லை. விராத்-க்கு அவுட் கொடுத்தது சரிதான் என்று கே.எல்.ராகுல் தன் தலையை ஆட்டியது மறு ஒளிபரப்பில் தெளிவாக காட்டப்பட்டது.

புனேவில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியிலும், தனது நான்கு அப்பீல்களையும் ஃபீல்டிங் செய்யும் போது தவறாக பயன்படுத்தி இந்திய அணி வீணாக்கியது.

அணியின் சக வீரர்கள் கருத்தை பொருட்படுத்தாமல் கோலி டி.ஆர்.எஸ். முறையை வீணாக்குவது சரியல்ல என சுனில் கவாஸ்கர் உள்ளிட்ட முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர்கள் தெரிவித்துள்ளனர்.

டி.ஆர்.எஸ் முறை பயன்பாட்டுக்கு வந்த பிறகு இந்திய அணி, எட்டு டெஸ்ட் போட்டிகளில் (பெங்களூரு டெஸ்ட் நாள் 1 உட்பட) விளையாடியுள்ளது. இதில் 56 முறை அப்பீல் செய்துள்ள இந்திய அணிக்கு, 17 முறை மட்டுமே வெற்றி கிடைத்துள்ளது.