விளையாட்டு

மிரட்டிய ஸ்ரேயாஸ் ஐயர்; கொல்கத்தா அணிக்கு கடின இலக்கு

மிரட்டிய ஸ்ரேயாஸ் ஐயர்; கொல்கத்தா அணிக்கு கடின இலக்கு

webteam

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற 220 ரன்கள் என்ற கடின இலக்கை நிர்ணயித்துள்ளது டெல்லி டேர்டெவில்ஸ்.
 
ஐபிஎல் தொடரின் இன்றைய 26-வது ஆட்டம் டெல்லி பெரோஷா கோட்லா மைதானத்தில் 8 மணிக்கு தொடங்கியது. இதில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி கேப்டன் தினேஷ் கார்த்திக்  பந்து வீச்சை தேர்வு செய்தார். கம்பீர் நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக 19 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான போட்டியில் கலக்கிய ப்ரித்வி ஷா சேர்க்கபட்டார். டெல்லி அணியின் தொடக்க வீரராக ப்ரித்வி ஷா மற்றும் கொலின் மன்ரோ களம் இறங்கினர். சிறப்பாக விளையாடிய இந்த ஜோடி டெல்லி அணிக்கு சிறப்பான தொடக்கம் கொடுத்தது. 18 பந்துகளில் 33 ரன்கள் எடுத்து இருந்த முன்ரோ 7-வது ஓவரில் ஆட்டமிழந்தார்.


இதையடுத்து களமிறங்கிய கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர், பிரித்வி ஷாவுடன் இணைந்து அதிரடி காட்டினார். இந்த ஜோடி 7 ஓவர்களில் 67 ரன்கள் சேர்த்தது. தனக்கான வாய்ப்பை சிறப்பாக பயன்படுத்திய பிரித்வி ஷா, 44 பந்துகளில் 62 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து களம் கண்ட ரிஷாப் பண்ட் தான் சந்தித்த முதல் பந்திலேயே ஆட்டமிழக்க, ஸ்ரேயாஸூடன், மேக்ஸ்வெல் இணைந்தார். அதிரடியில் மிரட்டிய இந்த ஜோடி கொல்கத்தா பந்து வீச்சாளர்களின் பந்துகளை நாலாபுறமும் சிதறடித்தனர். அரை சதம் கண்ட கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர், தொடர்ந்து அதிரடியில் மிரட்ட டெல்லி அணியின் ஸ்கோர் மளமளவென உயர்ந்தது. 18 பந்துகளில் 27 ரன்கள் எடுத்திருந்த நிலையில், மேக்ஸ்வெல் ஆட்டமிழந்தாலும், மறுமுனையில் வானவேடிக்கை நிகழ்த்திய ஸ்ரேயாஸ் ஐயர் 40 பந்துகளில் 93 ரன்களுடன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இதனால்  நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் டெல்லி அணி 4 விக்கெட் இழப்பிற்கு 219 ரன்கள் குவித்தது.