விளையாட்டு

ஹாட்ரிக் கேட்ச்சை கோட்டைவிட்ட போல்ட் - திட்டிய மிஸ்ரா

ஹாட்ரிக் கேட்ச்சை கோட்டைவிட்ட போல்ட் - திட்டிய மிஸ்ரா

rajakannan

ஹாட்ரிக் விக்கெட் கிடைக்காத விரக்தியில் ட்ரெண்ட் போல்ட்டை கொஞ்சம் திட்டிவிட்டதாக டெல்லி அணியின் சுழற்பந்துவீச்சாளர் மிஸ்ரா கூறியுள்ளார்.

டெல்லி கேபிடல்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி டெல்லியில் இன்று நடைபெற்றது. இதில் டெல்லி அணி 5 விக்கெட் வித்தியாத்தில் வெற்றிபெற்றது. இந்தப் போட்டியில் டெல்லி அணியின் சுழற்பந்துவீச்சாளர் அமித் மிஸ்ரா மூன்று விக்கெட்களை சாய்த்தார். இருப்பினும், அவர் இந்த ஐபிஎல் தொடரின் நான்காவது முறை ஹாட்ரிக் விக்கெட் எடுக்கும் வாய்ப்பினை நூலிழையில் தவறவிட்டார்.

டெல்லி அணி சார்பில் 6வது ஓவரை மிஸ்ரா வீசினார். அந்த ஓவரில் இரண்டாவது பந்தில் லோம்ரார், மூன்றாவது பந்தில் பின்னி அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இதனால், அவருக்கு ஹாட்ரிக் வாய்ப்பு கிடைத்தது. அவரது நான்காவது பந்தினை பராக் எதிர்கொண்டார். மிஸ்ராவின் பந்தினை பராக் அடிக்க அது ஸ்டம்பிற்கு அருகே உயரமாக சென்றது. அங்கு நின்று கொண்டிருந்த டிரெண்ட் போல்ட் அதனை பிடிக்க முயன்றார். அது அழகான கேட்ச் தான். ஆனால், அதனை போல்ட் தவறவிட்டார். இத்தனைக்கும் அவர் டைவ் அடித்து அந்த பந்தினை பிடிக்க முயன்றார். 

அதனால், ஐபிஎல் தொடரில் 4வது முறையாக ஹாட்ரிக் விக்கெட் எடுக்கும் வாய்ப்பு மிஸ்ராவுக்கு பறிபோனது. அவர் மிகவும் டென்ஷன் ஆகி மைதானத்தின் தரையிலேயே உட்கார்ந்துவிட்டார். போட்டி முடிந்த பின்னர் மிஸ்ரா பேசுகையில், “ஹாட்ரிக் விக்கெட் பறிபோனதில் வருத்தம்தான். உண்மையில், ட்ரெண்ட் போல்ட்டை கொஞ்சம் திட்டிவிட்டேன். அவர் டைவ் அடித்து பிடிக்க வேண்டியதில்லை. அது, சாதாரண கேட்ச்தான்” என்று வருத்தத்துடன் கூறினார்.