விளையாட்டு

ப்ளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியது டெல்லி அணி !

ப்ளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியது டெல்லி அணி !

webteam

பெங்களூர் அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றுள்ளது.

ஐபிஎல் தொடரில் டெல்லி ஃபெரோஷா கோட்லா மைதானத்தில் இன்று நடைபெறும் லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் டெல்லி கேபிடல்ஸ் அணியும் மோதின. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. 

முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணியில் ஷிகார் தவான் (50), கேப்டன் ஸ்ரேயஸ் ஐயர் (52) மற்றும் ரூதர் ஃபோர்ட் (28) ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இறுதியில் டெல்லி அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 187 ரன்கள் குவித்தது. பெங்களூர் அணியில் சாஹல் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். உமேஷ், சுந்தர், சாய்னி ஆகியோர் தலா ஒரு விக்கெட் சாய்த்தனர். 

இதனையடுத்து 188 ரன்கள் இழக்குடன் பெங்களூர் அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களான விராட் கோலி மற்றும் பார்த்திவ் பட்டேல் சிறப்பான தொடக்க அளித்தனர். இவர்கள் இருவரும் முதல் 5 ஓவர்களில் 56 ரன்கள் எடுத்து டெல்லி பந்துவீச்சை நொறுக்கினர். பார்திவ் பட்டேல் 7 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்சர் உதவியுடன் 20 பந்துகளில் 39 ரன்கள் எடுத்து அக்சர் பட்டேல் சுழலில் வெளியறினார். இதனைத் தொடர்ந்து விராட் கோலியும் 17 பந்துகளில் 23 ரன்கள் எடுத்து அவுட் ஆனார்.

அடுத்து களமிறங்கிய சிவம் தூபே, டிவில்லியர்ஸ் ஒரளவு ரன்கள் சேர்த்தனர். இதனால் பெங்களூர் அணி 10 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 90 ரன்கள் குவித்தது. 12வது ஓவரில் டிவில்லியர்ஸ் (17) ரூதர்போர்டு இடம் விக்கெட்டை பறிகொடுத்தார். இதனையடுத்து பெங்களூர் அணி சீரான இடைவேளையில் விக்கெட்டை இழந்தது. கிலாசன் (3), சிவம் தூபே (24) அடுத்தடுத்து வெளியேறினர்.

எனினும் குருகீரத் சிங் மற்றும் ஸ்டியோனிஸ் இணைந்து அணியின் ஸ்கோரை உயர்த்த முற்பட்டனர். 16வது ஓவர் முடிவில் பெங்களூர் அணி 136 ரன்கள் சேர்த்தது. இன்னும் வெற்றிப் பெற அந்த அணிக்கு 51 ரன்கள் தேவைப்பட்டன. இதனால் இவர்கள் இருவரும் அடித்து ஆட தொடங்கினர். 19வது ஓவரில் குருகீரத் சிங் 1 சிக்சர் மற்றும் 2 பவுண்டரிகள் உதவியுடன் 27 ரன்கள் எடுத்திருந்தப் போது அவுட் ஆனார். இதனைத் தொடர்ந்து பெங்களூர் அணியின் வெற்றி வாய்ப்பு மிகவும் குறைந்தது. 

இறுதியில் பெங்களூர் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 171 ரன்கள் மட்டும் எடுத்து 16 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இந்தப் போட்டியில் வெற்றிப் பெற்றதன் மூலம் டெல்லி அணி ப்ளே ஆஃப் சுற்றிற்கு முன்னேறியுள்ளது. அத்துடன் புள்ளிப்பட்டியலில் டெல்லி அணி முதலிடம் பிடித்துள்ளது.