விளையாட்டு

வார்னர் விளாசலில் வீழ்ந்தது பஞ்சாப்: சன் ரைசர்ஸ் 6 வது வெற்றி!

வார்னர் விளாசலில் வீழ்ந்தது பஞ்சாப்: சன் ரைசர்ஸ் 6 வது வெற்றி!

webteam

பஞ்சாப்புக்கு எதிராக, நேற்று நடந்த ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணி 45 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஐபிஎல் தொடரின் 48வது லீக் போட்டியில், சன் ரைசர்ஸ் ஐதராபாத் மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் நேற்று மோதின. ஐதராபாத் ராஜிவ் காந்தி மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் பஞ்சாப் அணி டாஸ் வென்று, முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் களமிறங்கிய ஐதராபாத் அணியில் தொடக்க ஆட்டக்காரர்களான டேவிட் வார்னர் மற்றும் சாஹா அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். 28 ரன்களில் சாஹா வெளியேற, வார்னர் அதிரடியை தொடர்ந்தார். அடுத்து வந்த மணிஷ் பாண்டே சற்று பொறுமையாக விளையாடி 25 பந்துகளில் 36 ரன்கள் எடுத்து விக்கெட்டை இழந்தார்.

அதிரடியை குறைக்காமல் பேட்டிங் செய்த வார்னர் 81 (56) ரன்களில் அஸ்வின் வீசிய பந்தில் விக்கெட்டை இழந்தார். கடைசி நேரத்தில் ஜோடி சேர்ந்த கேப்டன் வில்லியம்சன் மற்றும் நபி, சிக்சர்களை பறக்கவிட்டனர். இதனால் அணியின் ஸ்கோர் 18வது ஓவரிலேயே 200-ஐ நெருங்கியது. பின்னர் 18.2 -வது ஓவரில் ஷமி வீசிய பந்தில் வில்லியம்சன் 14 (7) ரன்களில் விக்கெட்டை இழந்து நடையைக்கட்டினார்.

 பின்னர் அதே ஓவரில் முகமது நபியும் 20 (10) ரன்களில் அவுட் ஆனார். 20 ஓவர்கள் முடிவில் ஐதராபாத் அணி 6 விக்கெட்டு கள் இழப்பிற்கு 212 ரன்கள் குவித்தது. பஞ்சாப் அணியில் அஸ்வின் மற்றும் ஷமி தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

பின்னர் 213 ரன் குவித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் அணி, 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 167 ரன் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் 45 ரன் வித்தியாசத்தில் ஐதராபாத் அணி வெற்றி பெற்றது. பஞ்சாப் தரப்பில் அதிக பட்சமாக, கே.எல்.ராகுல் 56 பந்தில் 79 ரன்னும் மயங்க் அகர்வால் 27 ரன்னும் எடுத்தனர். மற்றவர்கள் யாரும் நிலைத்து நிற்கவில்லை. 

ஐதராபாத் தரப்பில் கலீல் அகமது, ரஷித் கான் தலா 3 விக்கெட்டும் சந்தீப் சர்மா 2 விக்கெட்டும் வீழ்த்தினர். 12 போட்டிகளில் விளையாடியுள்ள ஐதராபாத் அணிக்கு இது 6 வது வெற்றி. பஞ்சாப் அணிக்கு 7 வது தோல்வி. இதன்மூலம் பஞ்சாப் அணியின் அடுத்தச் சுற்று வாய்ப்பு கேள்விக்குறியாகி இருக்கிறது.