விளையாட்டு

மகளிர் உலகக் கோப்பை: இங்கிலாந்தின் சுழலில் சிக்கி தோல்வியை தழுவியது இந்திய அணி

மகளிர் உலகக் கோப்பை: இங்கிலாந்தின் சுழலில் சிக்கி தோல்வியை தழுவியது இந்திய அணி

webteam

பே ஓவல் மைதானத்தில் நடைபெற்ற மகளிர் உலகக் கோப்பை போட்டியில் இந்திய அணியை நான்கு விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இங்கிலாந்து அணி மீண்டும் வெற்றிப்பாதைக்கு திரும்பியுள்ளது.

மகளிர் உலகக் கோப்பை 2022 தொடரில் இன்று பே ஓவல் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதின. முதலில் இந்திய அணி பேட்டிங் செய்தது. இந்திய அணியின் பேட்டர்கள் நிலைபெற்று ரன்கள் குவிக்க துவக்கம் முதலே தடுமாறினர். அணியின் ஓப்பனர் யஷ்திகா பட்டியா 8 ரன்கள் குவித்த நிலையில் அன்யாவின் பந்துவீச்சில் கிளீன் போல்டானார். கேப்டன் மிதாலி ராஜ் 1 ரன்னில் ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தார்.

இந்திய அணியின் தீப்தி ஷர்மா, ஸ்னே ரானா ஆகிய இருவரும் டக் அவுட்டாகி வந்த வேகத்தில் பெவிலியன் திரும்பினர். ஸ்மிரிதி மந்தனா துவக்கம் முதலே நிதானமாக ஆடியதால் இந்தியா கவுரமான ஸ்கோரை நோக்கிச் சென்றது . ஆனால் ஸ்மிரிதியும் எல்.பி.டபுள்யூ முறையில் அவுட்டாகினார். அடுத்ததாக பொறுமையாக ரன் சேர்த்து வந்த ரிச்சா கோஷ் ரன் அவுட்டாக, இந்திய அணியின் ஸ்கோர் ஊசலாடத் துவங்கியது. அடுத்து வந்தவர்களும் பெவியனுக்கு அணிவகுப்பு நடத்த 134 ரன்கள் குவித்த நிலையில் இந்தியா ஆல் அவுட் ஆனது.

இங்கிலாந்து தரப்பில் சார்லி தீன் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார், அவரது சுழலை சமாளிக்க முடியாமலும், ரன்கள் குவிக்கவும் இயலாமல் இந்திய பேட்டர்கள் கடுமையாக திணறியது குறிப்பிடத்தக்கது.

அடுத்ததாக விளையாடிய இங்கிலாந்து அணி நிதானமாக ரன்களை சேர்க்கத் துவங்கியது. சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை வீழ்த்திய போதும், இலக்கை நோக்கிய இங்கிலாந்தின் பயணத்தை இந்திய பவுலர்களால் தடுக்க இயலவில்லை. 31.2 ஓவர்களில் இலக்கை எட்டி 4 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது.

இங்கிலாந்து தரப்பில் ஹீதர் நைட் 53 ரன்களும், நடாலி ஸ்கீவர் 45 ரன்களும் குவித்து வெற்றிக்கு வித்திட்டனர். தொடர் தோல்விகளை சந்தித்து வந்த இங்கிலாந்து அணி மீண்டும் வெற்றிப் பாதைக்கு திரும்பியுள்ளது. தனது சுழல்பந்து வீச்சால் இந்திய அணியின் பேட்டிங்கை சிதறடித்த சார்லி தீன் "Player of the match" விருதை தட்டிச் சென்றார்.