விளையாட்டு

எந்த வீரரும் 35 ரன்களை தாண்டவில்லை .. ஆனால் சென்னை அணி 188 ரன் குவிப்பு

எந்த வீரரும் 35 ரன்களை தாண்டவில்லை .. ஆனால் சென்னை அணி 188 ரன் குவிப்பு

rajakannan

ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி 188 ரன்கள் குவித்துள்ளது.

ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையிலான இன்றைய போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. இதனையடுத்து, முதலில் பேட்டிங் செய்த சென்னை அணியில் ருதுராஜ் கெய்க்வாட், டுபிளசிஸ் தொடக்க வீரர்களாக களமிறங்கினர்.

கெய்க்வாட் 13 பந்துகளில் 10 ரன்கள் மட்டுமே எடுத்து இந்தப் போட்டியிலும் சொதப்பினார். அதிரடியாக விளையாடிய டுபிளசிஸ் 2 சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் 17 பந்துகளில் 33 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆனார். அதன்பிறகு மொயின் அலி 26, சுரேஷ் ரெய்னா 18, அம்பத்தி ராயுடு 27 என அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.

கேப்டன் தோனி இறுதியில் அதிரடியாக விளையாடுவார் என எதிர்பார்த்த நிலையில் நிறைய பந்துகளை வீணடித்து 17 பந்துகளில் 18 ரன்கள் எடுத்த நிலையில் நடையைக் கட்டினார். ஜடேஜா 8 ரன்னில் ஆட்டமிழக்க சாம் கர்ரன் 13 ரன்கள் எடுத்த நிலையில் எதிர்பாராத விதமாக ரன் அவுட் ஆனார்.

இறுதியில் சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 188 ரன்கள் எடுத்தது. டேவின் பிராவோ 8 பந்துகளில் 20 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழக்காமல் இருந்தார். ராஜஸ்தான் அணி தரப்பில் சகரியா 3, கிறிஸ் மோரிஸ் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.