ஹர்பஜன் சிங்கும், இம்ரான் தாஹிரும் ஓல்டு ஓயினை போல பக்குவப்பட்டவர்கள் என்று சிஎஸ்கே கேப்டன் மகேந்திர சிங் தோனி கூறியுள்ளார்.
ஐபிஎல் தொடரிலேயே மிகவும் வயதான வீரர்கள் அதிகம் உள்ள அணி சென்னை சூப்பர் கிங்ஸ்தான். இரண்டு வருட தடைக்கு பின்னர் 2018 ஐபிஎல் தொடரின் போது 30 வயதுக்கும் அதிகமான வீரர்கள் அடங்கிய அணியை சிஎஸ்கே நிர்வாகம் தேர்வு செய்த போது பலரும் கிண்டல் செய்தனர். சென்னை சூப்பர் கிங்ஸ் என்பதை சீனியர் சூப்பர் கிங்ஸ் என்று கலாய்த்தார்கள். ஆனால், கடந்த ஐபிஎல் போட்டியில் அதிரடியாக விளையாடி சென்னை அணி கோப்பையை கைப்பற்றியது.
சென்னை அணியில் கேப்டன் தோனி (37), வாட்சன் (37), பிராவோ (35), ரெய்னா (31), கேதர் ஜாதவ்(33), அம்பத்தி ராயுடு (33), மோகித் சர்மா (30), டு பிளிசிஸ் (34) எனப் பெரும்பாலானோர் 30 வயதினை கடந்தவர்கள். இதில், இம்ரான் தாஹிர் (39), ஹர்பஜன் சிங் (38) இருவரும் இருப்பதிலே அதிக வயதுடைய சீனியர்கள். இளம் வயது வீரர்கள் குறைவாகவே சென்னை அணியில் உள்ளனர்.
இருப்பினும், சென்னை அணியில் தற்போது நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் வெற்றிகளை குவித்து வருகிறது. சுழற்பந்து வீச்சில் சீனியர்களான இம்ரான் தாஹிரும், ஹர்பஜன் சிங்கும் மிகவும் சிறப்பாக பந்துவீசி விக்கெட்களை சாய்த்து வருகின்றனர். இம்ரான் 9, ஹர்பஜன் 7 விக்கெட் எடுத்துள்ளனர். கொல்கத்தா அணிக்கு எதிராக நேற்று நடைபெற்ற போட்டியிலும் இருவரும் சிறப்பாக பந்துவீசி விக்கெட் எடுத்தனர். ரன்களையும் கட்டுப்படுத்தினர்.
போட்டிக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தோனி, ஹர்பஜன் சிங்கும், இம்ரான் தாஹிரும் ‘ஓல்டு ஓயின்’போல் பக்குவப்பட்டவர்கள் என்று நெகிழ்ச்சியாக கூறினார். மேலும், ‘ஹர்பஜன், தாஹிர் வயதானவர்கள். அவர்கள் ஒயின் போன்றவர்கள். அவர்கள் நன்றாக பக்குவப்பட்டுவிட்டார்கள். எந்தப் போட்டியில் ஹர்பஜன் விளையாடினாலும் மிகவும் சிறப்பாக செயல்படுகிறார். போட்டியில் நெருக்கடி ஏற்படும் நேரங்களில் இம்ரானை பந்துவீச அழைப்பேன். அவர் சிறந்த முறையில் பந்துவீசிவார். ஒட்டுமொத்தமாக பந்துவீச்சு மிகவும் சிறப்பாக இருந்தது” என்று கூறினார் தோனி.