ஷார்ஜாவில் நடைபெற்று வரும் டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை அணியின் ஆடும் லெவனில் சேர்க்கப்பட்டுள்ளார் கேதார் ஜாதவ்.
இந்த சீசனில் 6 ஆட்டங்களில் வெறும் 58 ரன்களை எடுத்துள்ள ஜாதவை சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் காட்டுத்தனமாக விமர்சித்திருந்த நிலையில் கடந்த இரண்டு ஆட்டங்களாக ஆடும் லெவனிலிருந்து கழட்டி விடப்பட்டிருந்தார் ஜாதவ்.
அவருக்கு மாற்றாக பெங்களூருவுக்கு எதிரான ஆட்டத்தில் ஆடும் வாய்ப்பை பெற்ற தமிழக வீரர் ஜெகதீசன் 33 ரன்களை குவித்து அசத்தினார். ஃபீல்டிங்கிலும் சிறப்பான பங்களிப்பை அவர் கொடுத்திருந்தார்.
இந்நிலையில், இன்றைய ஆட்டத்தில் ஜெகதீசனை சேர்க்காமல் ஜாதவை மீண்டும் அணியில் சேர்த்திருப்பது சென்னை ரசிகர்களை செம கடுப்பாக்கி உள்ளது.
பலர் சென்னை அணியை சமூக வலைத்தளங்களில் விமர்சித்து போஸ்ட் போட்டு வருகின்றனர்.
“சென்னை அணியில் ஒரு எக்ஸ்ட்ரா பேட்ஸ்மேன் வேண்டுமென்றால் அது ஜெகதீசனாக தான் இருந்திருக்க வேண்டும். பேட்டிங் மற்றும் ஃபீல்டிங்கில் துடிப்போடு செயல்படுபவர் அவர். வாழ்நாள் முழுவதும் சென்னை ரசிகனாக உள்ள என்னை இந்த முடிவு கோவப்படுத்தி பார்க்கிறது” என சென்னை ரசிகர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
“அவருக்கு கொடுக்கப்பட்ட ஒரே ஒரு வாய்ப்பில் அவர் என்ன தவறு செய்து விட்டார்? மீண்டும் ஏன் கேதார் ஜாதவ்?” என மற்றொரு ரசிகர் கேள்வி எழுப்பியுள்ளார்.
அதற்கான பதிலை ஜாதவ் தனது ஆட்டத்தின் மூலம் சொல்வாரா என்பதை பார்க்க கொஞ்சம் காத்திருக்க வேண்டும்.