டெல்லிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் சென்னை அணி 179 ரன்கள் குவித்துள்ளது.
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்று வரும் 50வது லீக் போட்டியில் சென்னை அணியும் டெல்லி அணியும் விளையாடி வருகின்றன. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்ய சென்னை அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் டூ பிளசிஸ் மற்றும் ஷேன் வாட்சன் களமிறங்கினர்.
ஆட்டத்தின் நான்காவது ஓவரிலேயே வாட்சன் ரன் எதுவும் எடுக்காமல் அவுட்டாகி அதிர்ச்சியளித்தார். எனினும் இதனையடுத்து களமிறங்கிய ரெய்னா டூ பிளசிஸ் உடன் இணைந்து நிதானமாக விளையாடினார். இருவரும் பொறுப்புடன் விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இவர்கள் இரண்டாவது விக்கெட்டிற்கு 83 ரன்கள் சேர்த்தனர். இதனால் சென்னை அணி 14 ஓவர்களில் 88 ரன்கள் எடுத்தது. டூ பிளசிஸ் 41 பந்துகளில் 39 ரன்கள் எடுத்து வெளியேறினார்.
மறுமுனையில் தனது அதிரடி ஆட்டத்தை தொடர்ந்த ரெய்னா ஐபிஎல் வரலாற்றில் தனது 37வது அரைசதத்தை பூர்த்தி செய்தார். இவர் 8 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்சர் உதவியுடன் 37 பந்துகளில் 59 ரன்கள் சேர்த்து அவுட் ஆனார். சென்னை அணி 15 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 102 ரன்கள் எடுத்தது. இதனைத்தொடர்ந்து களமிறங்கிய தோனி மற்றும் ஜடேஜா சற்று அதிரடி காட்டினர். ஜடேஜா 2 சிக்சர் மற்றும் 2 பவுண்டரிகள் விளாசினார். ஜடேஜா 10 பந்துகளில் 25 ரன்கள் எடுத்து மோரிஸ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
எனினும் தோனியின் ஆட்டத்தால் 19-வது ஓவரில் மட்டும் சென்னை அணி 18 ரன்கள் சேர்த்தது. கடைசி ஓவரில் தோனி 22 ரன்கள் விளாசினார். இறுதியில் சென்னை அணி 4 விக்கெட் இழப்பிற்கு 179 ரன்கள் குவித்தது. தோனி 3 சிக்சர் மற்றும் 4 பவுண்டரிகளுடன் 22 பந்துகளில் 44 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். அவருடன் ராயுடு 5 ரன்களுடன் களத்தில் இருந்தார். டெல்லி அணி சார்பில் சுஜித் 2 விக்கெட்களை வீழ்த்தினார். அத்துடன் மோரிஸ் மற்றும் அக்சர் பட்டேல் தலா ஒரு விக்கெட் சாய்த்தனர். டெல்லி அணி வெற்றிப் பெற 180 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.