விளையாட்டு

சிஎஸ்கேவில் இருந்து கழட்டிவிடப்படுகிறார்களா ஹர்பஜன் சிங், சாவ்லா, முரளி விஜய்?

jagadeesh

நடப்பாண்டு நடைபெற இருக்கும் ஐபிஎல் டி20 தொடரிலிருந்து சிஎஸ்கே வீரர்கள் ஹர்பஜன் சிங், பியூஷ் சாவ்லா மற்றும் முரளி விஜய் ஆகியோர் நீக்கப்படுவார்கள் எனக் கூறப்படுகிறது.

2021-ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் ஏப்ரல் மாதம் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் ஐபிஎல் அணிகளுக்கு வீரர்களை தேர்ந்தெடுப்பதற்கான மினி ஏலத்தை பிப்ரவரி 11-ஆம் தேதி நடத்த பிசிசிஐ திட்டமிட்டுள்ளது. இதன் காரணமாக ஐபிஎல் தொடரில் இருக்கும் 8 அணிகளும் சில வீரர்களை வெளியேற்றி புதிய வீரர்களை வாங்கும் சூழல் உருவாகியுள்ளது. இதில் ஐபிஎல் வரலாற்றில் கடந்தாண்டு மோசமாக விளையாடிய சில வீரர்கள் சிஎஸ்கே அணியில் இருந்து  வெளியேற்றப்படலாம் எனக் கூறப்படுகிறது.

அதன்படி முரளி விஜய் மற்றும் பியூஷ் சாவ்லா ஆகியோரை வெளியேற்ற சிஎஸ்கே நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. சிஎஸ்கே அணியின் தொடக்க காலத்தில் சிறப்பாக விளையாடிய முரளி விஜய் அதன் பின்பு பெரிய அளவில் சோபிக்கவில்லை. அதன் பின்பு பஞ்சாப் அணிக்கு சென்ற விஜய் அவ்வணிக்கு கேப்டனாகவும் இருந்தார். அதன்பின்பு 2018 இல் மீண்டும் சிஎஸ்கே அணியில் இணைந்தார் விஜய். ஆனால் அதன் பின்பும் சொல்லிக்கொள்ளும் அளவுக்கான ஆட்டத்திறனை அவர் வெளிப்படுத்தவில்லை.

2019 ஐபிஎல் ஏலத்தின்போது சுழற்பந்துவீச்சாளர் பியூஷ் சாவ்லாவை ரூ.6.75 கோடிக்கு ஏலம் எடுத்தது சிஎஸ்கே. ஆனால் கடந்த சீசனில் முதல் போட்டியை தவிர வேறு எந்தப் போட்டியிலும் பியூஷ் சாவ்லா சிறப்பாக விளையாடவில்லை. இதனால் இந்த சீசனில் சாவ்லாவை வெளியேற்றும் முடிவை சிஎஸ்கே நிர்வாகம் மேற்கொள்ள முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. சாவ்லாவை வெளியேற்றுவதன் மூலம் சிஎஸ்கேவுக்கு வேறு வீரர்களை வாங்கும் நிதியும் அதிகரிக்கும் என்பதும் காரணமாக சொல்லப்படுகிறது.

மேலும் கடந்தாண்டு ஐபிஎல் தொடரில் பங்கேற்பதற்காக துபாய் சென்ற ஹர்பஜன் சிங் சொந்தக் காரணங்களுக்காக மீண்டும் நாடு திரும்பினார். அதனால் கடந்தாண்டு ஐபிஎல் தொடர் முழுவதும் ஹர்பஜன் சிங் பங்கேற்கவில்லை. இதனையடுத்து இந்தாண்டு சிஎஸ்கே அணியிலிருந்து ஹர்பஜன் சிங் விடுவிக்கப்படுகிறார் எனவும் கூறப்படுகிறது. இவர்களை தவிர ஆஸ்திரேலியாவின் ஜோஷ் ஹேசல்வுட், தென் ஆப்பிரிக்காவின் இம்ரான் தாஹிர், கரன் சர்மா ஆகியோரும் விடுவிக்கப்படுகிறார்கள் என்ற செய்தி உலா வரத் தொடங்கியுள்ளன.