இன்றைய ஐபிஎல் போட்டியில் சென்னை- மும்பை இடையிலான வாழ்வா? சாவா? மோதலில் முதலில் பேட் செய்த மும்பை அணியின் முதல் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தி அந்த அணியின் டாப் ஆர்டரை தட்டித் தூக்கினார் சென்னையின் முகேஷ் சவுத்ரி.
ஐ.பி.எல். தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் இடையேயான போட்டி இன்று நடைபெற்று வருகிறது. நடப்பு தொடரில் ரவீந்திர ஜடேஜா தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, இதுவரை நடைபெற்றுள்ள 6 போட்டிகளில் ஒரே ஒரு போட்டியில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. அதே வேளையில் ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியோ, பங்கேற்ற 6 போட்டிகளில் ஒரு போட்டியில் கூட வெற்றி பெறவில்லை. இக்கட்டான இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் ஜடேஜா பவுலிங்கை தேர்வு செய்தார்.
மும்பை அணி தரப்பில் ஓப்பனர்களாக இஷான் கிஷன், ரோகித் சர்மா ஆகியோர் களமிறங்கினர். இந்த துவக்க ஜோடிக்கு ஆரம்பத்திலேயே அதிர்ச்சி காத்திருந்தது. பொறுப்புணர்ந்து விளையாடுவார் என எதிர்பார்த்த நிலையில், முகேஷ் சவுத்ரி வீசிய முதல் ஓவரின் 2வது பந்தில் சாண்ட்னரிடம் கேட்ச் கொடுத்து டக் அவுட் ஆகி அதிர்ச்சி அளித்தார் ரோகித் ஷர்மா.
அடுத்ததாக டெவால்ட் ப்ரெவிஸ் களத்திற்கு வர, இஷான் கிஷன் முதல் ஓவரின் 5வது பந்தில் கோல்டன் டக் அவுட் ஆகி நடையை கட்டினார். இதன் காரணமாக 2 ரன்களை சேர்ப்பதற்குள் 2 விக்கெட்டுகளை இழந்து மும்பை தடுமாறியது.
அடுத்து வந்த சூர்ய குமார் யாதவ் தனது வழக்கமான பாணியில் அதிரடி காட்டி விளையாட, ப்ரெவிஸ் நிதானமாக விளையாடிக் கொண்டிருந்தார். அடுத்ததாக சாண்ட்னர் வீசிய பந்தில் சூர்யகுமார் யாதவை ஸ்டம்பிங் செய்ய தவறினார் தோனி. சாண்ட்னர் வீசிய பந்தில் ப்ரெவிஸ் அடித்த பந்தை கேட்ச் பிடிக்கும் வாய்ப்பையும் தவற விட்டார் ஜடேஜா. ஆனால் இதை தனது அற்புதமான பந்துவீச்சால் ஈடுகட்டிவிட்டார் முகேஷ் சவுத்ரி. அவரது பந்துவீச்சில் தோனியிடம் கேட்ச் கொடுத்து நடையை கட்டினார் ப்ரெவிஸ். 23 ரன்களை சேர்ப்பதற்குள் 3 விக்கெட்டுகளை இழந்து விட்டது மும்பை. அந்த அணியின் டாப் ஆர்டரை மொத்தமாக காலி செய்து விட்டார் முகேஷ்.
இதையடுத்து இந்த சரிவில் இருந்து மும்பையை மீட்கும் முயற்சியில் சூர்யகுமார் யாதவ் - திலக் வர்மா கூட்டணி இறங்கியது. ஆனால் அந்த எண்ணத்தை தூள் தூளாக்கினார் சாண்ட்னர். அதிரடி காட்டிய சூர்யகுமார் யாதவை 32 ரன்கள் எடுத்த நிலையில் வெளியேற்றினார் சாண்ட்னர். 50 ரன்களை எடுப்பதற்குள் 4 விக்கெட்டுகளை இழந்து தள்ளாடி வருகிறது. 13 ஓவர்கள் முடிவில் 84 ரன்களை மட்டும் எடுத்தது மும்பை அணி. நிதானமாக ரன்களை சேர்த்துவந்த ஹ்ரிதிக்கை 25 ரன்களை ஆட்டமிழக்க செய்தார் பிராவோ. 14 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 89 ரன்கள் எடுத்தது மும்பை அணி.