விளையாட்டு

சிஎஸ்கே நம்பிக்கை தூண் ஜடேஜாவா இப்படி! நீங்களுமா சொதப்புகிறீர்கள் என வருந்தும் ரசிகர்கள்!

சிஎஸ்கே நம்பிக்கை தூண் ஜடேஜாவா இப்படி! நீங்களுமா சொதப்புகிறீர்கள் என வருந்தும் ரசிகர்கள்!

ச. முத்துகிருஷ்ணன்

சிஎஸ்கேவின் தலைசிறந்த ஆல் ரவுண்டராக கொண்டாடப்பாட்ட ரவீந்திர ஜடேஜா, நடப்பு சீசனில் தொடர்ந்து சொதப்பி வருவது சென்னை ரசிகர்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஐபிஎல் வரலாற்றில் 4 முறை கோப்பையை தட்டிச் சென்ற சாதனைக்குரிய அணி. 2020ஐத் தவிர பங்கேற்ற அனைத்து தொடரிலும் பிளே ஆஃப் சுற்றுக்கு சென்ற தனி வரலாறையும் கொண்ட அணி சிஎஸ்கே. ஆனால் நடப்புச் சாம்பியனாக இந்த தொடரில் நுழைந்த சென்னை அணி, தொடர்ந்து சொதப்பி வருகிறது. அறிமுக அணிகளிடமெல்லாம் தோல்வியுற்று கிட்டத்தட்ட பிளே ஆஃப் சுற்றை விட்டு வெளியேறி விட்டது. ஒற்றை வரியில் தோனி பாணியில் சொன்னால் இதற்கெல்லாம் காரணம் “Too many holes in ship". அந்த Hole-இல் முக்கியமானது ஆல் ரவுண்டர் ஜடேஜாவின் ஆட்டம்.

முதலில் அவரின் பேட்டிங்கை சீர்தூக்கிப் பார்க்கலாம். இதுவரையிலான சீசன்களில் 6 மற்றும் 7வது இடத்தில் இறங்கிய ஜடேஜா கடைசி இரு ஓவர்களில் பொதுவாக விளையாடுவது போல சூழல் அமையும். அதிரடியாகவோ அல்லது தடுப்பாட்டத்தையோ தேவைக்கேற்ப விளையாடிச் செல்வார். சில ஆட்டங்களில் அரைசதங்கள், வெற்றிக்கு தேவையான ரன்களை அடிப்பதில் கில்லாடியாக திகழ்ந்தார். ஆனால் இந்த சீசனிம் 14,15 வது ஓவரிலேயே அவர் இறங்க வேண்டிய சூழல் ஏற்படுகிறது. அணிக்கு தேவையான ரன்களைக் கூட அடிக்காமல், மறுமுனையில் இருக்கும் பேட்ஸ்மேன் மீது அழுத்தம் அதிகரிக்கும் வகையில் அவர் விளையாடுவது விமர்சனங்களை கிளப்பியுள்ளது. ஆங்கர் இன்னிங்சை கூட சிறப்பாக விளையாடத் தவறுவது அடுத்து வரும் தோனி, பிராவோ, பிரட்டோரியஸ் மீது அழுத்தத்தை அதிகரிக்கச் செய்கிறது.

அடுத்ததாக அவரின் பவுலிங்! வழக்கமாக ஓவருக்கு 8 ரன்கள் விகிதத்தில் வழங்கும் பவுலர் என்றாலும் சில இக்கட்டான தருணங்களில் விக்கெட்டை வீழ்த்தி அணிக்கு நம்பிக்கை அளித்திருந்தார். ஆனால் இந்த சீசனில் இயல்பை விட அதிக ரன்களை வாரி வழங்கியும், விக்கெட்டுகளை வீழ்த்தாமலும் இருப்பது எதிரணிக்கு ஜாக்பாட் அடித்தது போல ஆகி விடுகிறது. மேலும் தேவையற்ற தருணங்களில் அவர் பந்து வீசச் செல்வது அணியை தோல்வியை நோக்கி இழுத்துச் சென்று விடுகிறது. விக்கெட் வீழ்த்தப்பட வேண்டிய தருணங்களில், எதிரணி பேட்டர்கள் நிலைப்பெற உதவுவது போல அவர் பந்து வீசுவது இன்னும் விமர்சனங்களை கிளப்பியுள்ளது.

அடுத்து ஜடேஜாவின் ஃபீல்டிங்! இதற்கு முந்தைய சீசன்களில் ஜடேஜாவை நோக்கி பேட்டர் அடித்த பந்து பறந்து செல்கிறது என்றால், கண்ணை மூடிக் கொண்டு சொல்லலாம். அது “அவுட்” என்று! ஆனால் தற்போது நிலைமை தலைகீழாகி விட்டது. மும்பைக்கு எதிரான ஆட்டத்தில் ஜடேஜாவை நோக்கி பறந்து செல்கிறது. மைதானத்தில் இருந்து கேட்ச், அவுட் என்று சத்தம் கேட்க வேண்டும் அல்லவா! ஆனால் அன்று மயான அமைதி நிலவியது! ஏனென்றால் லட்டு போல வந்த கேட்ச்களை எல்லாம் நழுவ விட்டிருந்தார் ஜடேஜா. 100 ரன்னுக்குள் மும்பையை அன்று சுருட்டியிருக்க கிடைத்த வாய்ப்பை தவற விட்டார் அவர். இதற்கு முன்பு ஃபீல்டிங்கில் அவர் காட்டிய ஆர்வம் “Intention" எல்லாம் மொத்தமாக மாயமாகி இருக்கிறது.

அணியில் கெய்க்வாட் முதல் அனைவரும் சொதப்பி வரும் நிலையில் ஜடேஜாவும் காலை வாருவது தான் ரசிகர்களுக்கு இன்னும் கவலை அளிக்கிறது. பஞ்சாப்புக்கு எதிரான ஆட்டத்தில் 13வது ஓவரில் களத்திற்கு வந்தார் ஜடேஜா. தேவைப்படும் ரன்ரேட் 12ஐ தாண்டிச் சென்ற நிலையில் ராயுடு ஒருபக்கம் தனியாளாக போராட, ஜடேஜா 1,2 ரன்களை மட்டும் அதிகம் எடுத்து வந்தார். இதனால் ராயுடு மீது அழுத்தம் அதிகமானது. ஆனால் அவர் பவுண்டரி, சிக்ஸர்களாக விளாசி இலக்கை நோக்கி நகர்த்தி வந்தார். அவரும் ஒரு கட்டத்தில் சோர்ந்து போய் அவுட்டாக, ஜடேஜா தனது ஆங்கர் இன்னிங்சை 18,19 ஓவர்களில் காட்ட கைமேல் வந்த சென்னையில் வெற்றி வாய்ப்பு நழுவிப்போனது. 3 ஓவர்களில் சென்னைக்கு 41 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், 18 & 19வது ஓவரில் சென்னை அடித்த ரன்கள் 14 மட்டுமே. கடைசி ஓவரில் 27 ரன்கள் தேவைப்ப்ட்ட நிலையில், ஒரு சிக்ஸ் அடித்து தோனி வெளியேற சென்னையின் வெற்றியும் வெளியேறி விட்டது. தோல்வி உறுதியான பிறகு ஜடேஜா சிக்ஸர் பறக்கவிட, இதை முன்கூட்டியே ஆடியிருக்கலாமே என ரசிகர்கள் கருத்துகளை தெரிவித்தனர்.

கடைசியாக அவரது கேப்டன்ஷிப்! ஆன் ஃபீல்டில் தோனி வழிநடத்துவது அனைவருக்கும் வெளிப்படையாக தெரிந்தாலும், சில தருணங்களில் அவர் கேப்டனாக முடிவெடுக்கும் நிலைக்கு தள்ளப்படுகிறார். தவறுகளை தொடர்ந்து செய்கிறார். அது அவருக்கு அழுத்தமாக மாறி, அவருக்குள் இருக்கும் வீரரை மழுங்கடிக்கிறது என்ற விமர்சனத்தையும் நம்மால் மறுக்க முடியாது. அவரை தக்க வைக்க அணி செலவு செய்த அதிக தொகை கூட அவரது ஆட்டத்தை சீர்குலைப்பதாக ரசிகர்களும் தெரிவித்து வருகின்றனர். இன்னும் 6 ஆட்டங்கள் மீதமுள்ள நிலையில், மீண்டும் ஜடேஜா சிறந்த ஆல் ரவுண்டராக ஃபார்முக்கு திரும்புவது சென்னை அணிக்கு மட்டுமல்ல! உலகக் கோப்பையை எதிர்நோக்கியுள்ள இந்திய 20 ஓவர் அணிக்கும் மிகவும் அவசியமானதும் கூட!

மீண்டு வாருங்கள் “சர்” ரவீந்திர ஜடேஜா!