பதினோறாவது ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் முதல் பிளே ஆப் போட்டி இன்று நடக்கிறது. இதுவரை நடந்த 56 லீக் போட்டி முடிவுகளின் அடிப்படையில், புள்ளி பட்டியலில் டாப் 4 இடங்களை பெற்ற ஐதராபாத், சென்னை, கொல்கத்தா, ராஜஸ்தான் அணிகள் பிளே-ஆஃப் சுற்றுக்கு முன்னேறியுள்ளன. நடப்பு சாம்பியன் மும்பை, பெங்களூரு, பஞ்சாப், டெல்லி அணிகள், அவுட்!
இறுதிப்போட்டிக்கான முதலாவது தகுதி சுற்றில் டாப்-2 இடங்களை வகிக்கும் ஐதராபாத்தும் சென்னையும் இன்று இரவு மோதுகின்றன. மும்பை வான்கடே மைதானத்தில் நடக்கும் இந்தப் போட்டியில், இரு அணிகளுமே சம பலத்தில் இருப்பதால் பரபரப்புக்கு பஞ்சமிருக்காது.
அம்பத்தி ராயுடு, சிஎஸ்கேவின் தூண் ஆகியிருக்கிறார். இவர், இந்த சீசனில்தான் சிஎஸ்கேவுக்கு வந்தார். தனது அதிரடியின் மூலம் கேப்டன் தோனிக்கும் அணி நிர்வாகத்தும் செல்லப் பிள்ளையாகியிருக்கிறார் ராயுடு. வாட்சன், ’சின்னத் தல’ சுரேஷ் ரெய்னா, கேப்டன் தோனி ஆகியோர் பேட்டிங்கில் பலமாக இருக்கிறார்கள். இவர்களில் ஒருவர் நின்றால் போதும் சிஎஸ்கே-வின் ஸ்கோர் எகிறும். ஒரே ஒரு போட்டியில் கலக்கிய சாம் பில்லிங்ஸ் தொடர்ந்து சொதப்பி வருகிறார். இதனால் இன்றைய போட்டியில் அவருக்கு பதில் வேறு வீரரை களமிறக்கலாம்.
கடந்தப் போட்டியில் சிறப்பாக பந்துவீசிய நிகிடி, நான்கு விக்கெட்டுகளை நச்சென்று அள்ளினார். அதோடு டெத் ஓவரிலும் சிறப்பாக வீசினார். அதனால் இந்தப் போட்டியிலும் பிராவோவுக்குப் பதில் நிகிடி, டெத் ஓவரை தொடர்வார் என எதிர்பார்க்கலாம். ஆரம்பத்தில் அதிக ரன்களைக் கொடுத்த ஷர்துல் தாகூர், இப்போது கச்சிதமாக வீசுகிறார். தீபக் சாஹரும் அப்படியே. இன்றைய போட்டியிலும் அவர்கள் கலக்குவார்கள் என எதிர்பார்க்கலாம்.
கனே வில்லியம்சன் தலைமையிலான ஐதராபாத் அணி, பந்துவீச்சு, பேட்டிங் இரண்டிலும் மிரட்டுகிறது. அந்த அணியின் ஹேல்ஸ், தவான், கேப்டன் வில்லியம்சன், மனீஷ் பாண்டே ஆகியோர்தான் அந்த அணியின் பேட்டிங் ஜாம்பவான்கள். வில்லியம்சன் இந்த தொடரில் இதுவரை 661 ரன் சேர்த்துள்ளார்.
பந்து வீச்சில் சித்தார்த் கவுல், சந்தீப் ஷர்மா, புவனேஷ்வர்குமார், சுழல் பந்துவீச்சாளர்கள் ரஷித் கான், ஷகிப் அல் ஹசன் சிறப்பாக பந்துவீசுகிறார்கள். இருந்தாலும் கடைசி மூன்று லீக் போட்டிகளில் வரிசையாக தோல்வி அடைந்துள்ள அந்த அணி, இந்தப் போட்டியில் மீண்டும் உத்வேகத்துடன் திரும்பும் என எதிர்பார்க்கலாம்.
ஐதராபாத்துக்கு எதிராக நடந்த இரண்டு லீக் போட்டியிலும் சென்னை அணிதான் வெற்றி பெற்றிருக்கிறது என்பதால் சிஎஸ்கே அதிக நம்பிக்கையுடன் இருக்கிறது. இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெறும் அணி நேரடியாக 27ஆம் தேதி நடைபெறவுள்ள இறுதிப் போட்டிக்கு நேரடியாக தகுதி பெறும். தோற்கும் அணிக்கு இன்னொரு வாய்ப்பு வழங்கப்படும். அதாவது வெளியேற்றுதல் சுற்றில் வெற்றிபெறும் அணியுடன் 2-வது தகுதி சுற்றில் மோதும் வாய்ப்பு கிடைக்கும்.
போட்டி இரவு 7 மணிக்கு தொடங்குகிறது. சென்னை அணி 7-வது முறையாக இறுதிப்போட்டிக்குள் அடியெடுத்து வைக்க வேண்டும் என்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பு. நிறைவேற்றுவாரா தோனி?