ஐபிஎல் தொடரில் 200 போட்டிகளை விளையாடிய முதல் வீரர் என்ற சாதனையை சிஎஸ்கே அணியின் கேப்டன் தோனி இன்று படைக்க உள்ளார்.
முன்னாள் இந்திய அணியின் கேப்டனான தோனி, கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் சிஎஸ்கே அணிக்காக விளையாடி வருகிறார். மேலும் அந்த அணியை வழிநடத்தியும் வருகிறார். இதனிடையே சிஎஸ்கே அணிக்கு கடந்த 2016 மற்றும் 2017 ஆம் ஆண்டு தடை விதிக்கப்பட்டபோது தோனி, ரைசிங் பூனே சூப்பர்கியண்ட் அணிக்காக விளையாடினார். அந்த அணிக்காக 30 போட்டிகளில் விளையாடியுள்ளார். தோனி 2016 இல் ஆர்.பி.எஸ்ஸின் கேப்டனாக இருந்தார், ஆனால் அவருக்கு பதிலாக ஸ்டீவ் ஸ்மித் அடுத்த சீசனுக்கு மாற்றப்பட்டார்.
சிஎஸ்கே அணியை வழிநடத்திய தோனி, இதுவரை 8 முறை அந்த அணியை இறுதி போட்டிக்கு கொண்டு சென்றுள்ளார். அதில் 3 போட்டிகளில் சிஎஸ்கே அணி கோப்பையை வென்றுள்ளது. 2019 ஐபிஎல் போட்டியில் தோனி தலைமையிலான சிஎஸ்கே அணி, மும்பை அணியிடம் ஒரே ஒரு ரன் வித்தியாசத்தில் கோப்பையை தவறவிட்டது. ஐபிஎல் போட்டிகளில் இதுவரை 4568 ரன்களை ஸ்கோர் செய்துள்ள நிலையில் இதில் 3994 ரன்கள் சிஎஸ்கேவுக்காக விளையாடிய போட்டிகளில் சேர்த்துள்ளார். இரண்டு ஆண்டுகள் ஆர்.பி.எஸ்ஸில் இருந்த போது 27 இன்னிங்ஸ்களில் விளையாடிய அவர் 574 ரன்கள் எடுத்தார்.
ஐபிஎல்லில் இதுவரை 199 போட்டிகளில் விளையாடிய முதல் வீரராக தோனி உள்ளார். ஐ.பி.எல்லில் அதிக எண்ணிக்கையிலான வீரர்களின் பட்டியலில் தோனியைத் தொடர்ந்து ரோஹித் சர்மா இருக்கிறார். அவரைத்தொடர்ந்து 3வது இடத்தில் சுரேஷ் ரெய்னா உள்ளார். இந்நிலையில் இன்று சிஎஸ்கே அணி ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடன் அபுதாபி சேக் ஜயத் ஸ்டேடியத்தில் இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு மோத உள்ளது. இந்த போட்டியின்போது சிஎஸ்கே அணியின் கேப்டன் தோனி தனது 200 ஆவது ஐபிஎல் போட்டியை விளையாட உள்ளார். இதன் மூலம் ஐபிஎல் தொடரில் 200 போட்டிகளை விளையாடிய முதல் வீரர் என்ற சாதனையை சிஎஸ்கே அணியின் கேப்டன் தோனி படைக்க உள்ளார்.
இதனிடையே “ஒரு போர்வீரன் எப்போதும் வெல்லும் ஒருவன் அல்ல, அவன் எப்போதும் போராடுகிறவன்” என சிஎஸ்கே தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.
மகேந்திர சிங் தோனி தலைமையிலான சென்னை அணியும், ஸ்மித் தலைமையிலான ராஜஸ்தான் அணியும் நடப்பு சீசனில் தலா 9 போட்டிகளில் விளையாடி 3 வெற்றிகளை மட்டுமே பதிவு செய்துள்ளன. இதனால் இரு அணிகளுக்கும் இது வாழ்வா? சாவா? என்ற போட்டியாக மாறியுள்ளது.