இந்திய அணியின் கிரிக்கெட் வீரர்கள் ஹர்பஜன் சிங் மற்றும் இர்ஃபான் பதான் ஆகிய இருவரும் தமிழ் திரையுலகில் கால் பதிக்க உள்ள செய்தி சமீபத்தில் உறுதியானது. இந்தச் சூழலில் திரையுலகில் ஏற்கெனவே கால் பாதித்த கிரிக்கெட் நட்சத்திரங்கள் யார் என்பது குறித்து சற்று திரும்பி பார்க்கலாம்.
பொதுவாக சினிமாவில் கிரிக்கெட்டை மையக் கதையாக வைத்து சில திரைப்படங்கள் வருவது வழக்கம். அவற்றில் சில வசூல்களையும் அள்ளுவது உண்டு. பாலிவுட்டில் ‘லகான்’, தமிழ் சினிமாவில் வெளியான ‘சென்னை 600028’, ‘ஜீவா’ உள்ளிட்ட படங்கள் கிரிக்கெட் சார்ந்த படங்களாக வெளி வந்தன. இவை கிரிக்கெட் ரசிகர்கள் இடையே நல்ல வரவேற்பை பெற்றன. இதற்கு மாறாக கிரிக்கெட் வீரர்களும் அவ்வப்போது திரையில் வந்து சில கதாபாத்திரங்களில் நடித்து உள்ளனர். அவர்களில் சிலரை தற்போது திரும்பி பார்ப்போம்.
கபில் தேவ்
இந்திய கிரிக்கெட் அணி முதல் முறை உலகக் கோப்பையை வெல்ல முக்கிய காரணமாக இருந்தவர் அப்போதைய கேப்டன் கபில்தேவ். இவர் கிரிக்கெட் களத்தில் மட்டும் கால் பதிக்கவில்லை. திரையுலகிலும் ஒரு கலக்கு கலக்கியுள்ளார். இவர் ‘இக்பால்’(Iqbal), 'முஜ் சே ஷாதி காரோகி'(Mujhse shaadhi karogi), 'ஸ்டெம்ப்டு'(Stumped) உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.
சுனில் கவாஸ்கர்:
இந்திய கிரிக்கெட் அணியின் முக்கிய பேட்ஸ்மேனாக வலம் வந்தவர் சுனில் கவாஸ்கர். இவர் பேட்டிங்கில் மட்டும் திறமையை காட்டாமல் நடிப்பு உலகிலும் தனது திறமையை காட்டி உள்ளார். இவர் மராத்தி படமான 'சவ்லி பிரேமச்சி'(Savli Premachi) யில் நடித்துள்ளார். அத்துடன் 1988-ஆம் ஆண்டு வெளியான ‘மலாமால்’(Malaamaal) என்ற படத்திலும் சிறிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
அஜய் ஜடேஜா:
இவர் 1990-களில் இந்திய கிரிக்கெட்டில் சிறப்பாக விளையாடி வந்தவர். சூதாட்டப் புகாரில் சிக்கியதால் இவரின் கிரிக்கெட் வாழ்க்கை எதிர்பாராத விதமாக முடிவிற்கு வந்தது. இவர் 2003-ஆம் ஆண்டு வெளியான ‘கேல்’ என்ற திரைப்படத்தில் நடித்தார். இந்தப் படம் சரியாக வெற்றி பெறாததால் இவர் கிரிக்கெட் வர்ணனையாளராக மாறியுள்ளார்.
யுவராஜ் சிங்:
இந்திய அணி 2007-ஆம் ஆண்டு டி-20 உலகக் கோப்பையை வெல்வதற்கும், 2011-ஆம் ஆண்டு ஒருநாள் உலகக் கோப்பையை வெல்வதற்கும் மிகவும் முக்கிய காரணமாக இருந்தவர் யுவராஜ் சிங். இவர் சமீபத்தில் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து தனது ஓய்வை அறிவித்தார். கிரிக்கெட் ஆட்டத்தில் தனது அதிரடியை ஆரம்பிப்பதற்கு முன்னதாகவே யுவராஜ் சிங், சினிமா உலகில் கால் பதித்தவர். இவர் குழந்தை நட்சத்திரமாக அவரது தந்தையுடன் ஒரு சில பஞ்சாபி திரைப்படங்களில் நடித்துள்ளார்.
சச்சின் டெண்டுல்கர்:
இந்திய அணியின் ஜாம்பவான் வீரர் சச்சின் டெண்டுல்கர். இவர் கிரிக்கெட் வரலாற்றில் பல சாதனைகளை படைத்துள்ளார். இவரின் வாழ்க்கை வரலாறு தொடர்பாக எடுக்கப்பட்ட ஃபீச்சர் படத்தில் (Feature Film) சச்சின் டெண்டுல்கர் நடித்துள்ளார். இந்தத் திரைப்படத்தில் சச்சினின் வாழ்க்கை குறித்து பல அரிய தகவல்கள் வெளியானது.
சடகோபன் ரமேஷ்:
இந்திய அணியில் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய தமிழ்நாட்டு வீரர்களில் ஒருவர் சடகோபன் ரமேஷ். இவர் தனது கிரிக்கெட் வாழ்க்கைக்கு பிறகு தமிழ் திரைப்படங்கள் சிலவற்றில் நடித்தார். அதில் குறிப்பாக ‘சந்தோஷ் சுப்பிரமணியம்’, ‘போட்டா போட்டி’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். எனினும் இவருடைய படங்கள் சரியாக வெற்றிப் பெறாததால் இவர் மீண்டும் கிரிக்கெட் வர்ணனைக்கு திரும்பியுள்ளார்.
திரைப்படங்களில் இந்திய கிரிக்கெட் வீரர்கள் மட்டுமல்லாது வெளிநாட்டு வீரர்களில் சிலரும் திரையுலகில் களமிறங்கி தங்களின் தடத்தை பதவி செய்துள்ளனர்.
பிரட் லீ:
ஆஸ்திரேலிய அணியின் முக்கியமான வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவராக இருந்தவர் பிரட் லீ. இவர் ஆஸ்திரேலிய அணிக்காக களமிறங்கிய போது தனது வேகத்தால் பேட்ஸ்மேன்களை மிரட்டியவர். இவர் ‘அன் இந்தியன்’ (UnIndian) என்ற இந்திய-ஆஸ்திரேலிய படத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தின் சில காட்சிகள் ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் எடுக்கப்பட்டன.
பிராவோ:
வெஸ்ட் இண்டீஸ் அணியின் அதிரடி ஆல்ரவுண்டரான பிராவோ அந்த அணிக்காக சிறப்பாக விளையாடியவர். இவர் கிரிக்கெட் விளையாட்டில் விக்கெட் எடுத்தவுடன் நடனம் ஆடி கொண்டாடுவதில் மிகவும் வல்லவர். இவரின் சிறப்பான நடனமே இவரை தமிழில் ‘சித்திரம் பேசுதடி 2’ படத்தில் ஒரு பாடல் காட்சியில் நடிக்க வைத்தது.