உலகின் நம்பர் 1 டி20 பேட்ஸ்மேனாக இருந்துவரும் அபிஷேக் சர்மா மற்றும் இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாக இருந்துவரும் சுப்மன் கில் இருவரின் ஆரம்ப கால கிரிக்கெட் முன்னேற்றத்தில் பெரிதும் பங்காற்றியவர் யுவராஜ் சிங்.
பஞ்சாபை சேர்ந்த வீரர்களான சுப்மன் கில் மற்றும் அபிஷேக் சர்மா இருவருக்கும் மெண்டராக செயல்பட்ட யுவராஜ் சிங், தற்போது அவர்களுடைய முன்னேற்றத்தில் ஒரு அங்கமாக இருந்துவருகிறார். இதை இரண்டு வீரர்களும் பலமுறை வெளிப்படுத்தியுள்ளனர்.
இந்நிலையில் தற்போது பஞ்சாப் கிங்ஸ் அணியின் தொடக்க வீரர்களான பிரியான்ஸ் ஆர்யா மற்றும் பிரப்சிம்ரன் இருவருக்கும் பயிற்சியளிக்க தொடங்கியுள்ளார் யுவராஜ் சிங்.
2008 ஐபிஎல் தொடரின் தொடக்க சீசனில் பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டனாக இருந்த யுவராஜ் சிங், பஞ்சாபை சேர்ந்த இளம்வீரர்களுக்கு கிரிக்கெட்டை சரியான பாதையில் அணுக உதவும் ஒரு முதுகெலும்பாக திரைக்குபின்னால் செயல்பட்டுவருகிறார். அவருடைய இந்த முயற்சி இந்திய அணிக்கு சிறந்த வீரர்களை தயார்படுத்தியுள்ளது.
இந்நிலையில் பஞ்சாப் கிங்ஸ் அணியின் தொடக்க வீரர்களாக 2025 ஐபிஎல் தொடரில் மிரட்டலான ஆட்டத்தை வெளிப்படுத்திய பிரியான்ஸ் ஆர்யா மற்றும் பிரப்சிம்ரன் இருவரும் தற்போது யுவராஜ் சிங்கிடம் பயிற்சிபெறுகின்றனர். இந்த புகைப்படத்தை பகிர்ந்திருக்கும் பஞ்சாப் கிங்ஸ் அணி "OG #YuvrajSingh இடமிருந்து கற்றுக்கொள்வது" என பதிவிட்டுள்ளது.
செப்டம்பர் 30 முதல் அக்டோபர் 5 வரை ஆஸ்திரேலியா ஏ அணிக்கு எதிராக நடைபெறவிருக்கும் மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடருக்கான இந்தியா ஏ அணியில் பிரப்சிம்ரன் மற்றும் பிரியான்ஸ் ஆர்யா இருவரும் இடம்பெற்றுள்ளனர். பிரப்சிம்ரன் மூன்று போட்டிகளிலும் விளையாடவிருக்கும் நிலையில், பிரியான்ஸ் ஆர்யா முதல் போட்டிக்கு மட்டுமே தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.