Yuvraj Singh - Stuart Broad
Yuvraj Singh - Stuart Broad  Twitter
கிரிக்கெட்

“Take a Bow” - ஸ்டூவர்ட் பிராட்-க்கு புகழாரம் சூட்டிய யுவராஜ் சிங்

Justindurai S

இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 5வது மற்றும் கடைசி ஆஷஸ் டெஸ்ட் போட்டி லண்டனில் உள்ள ஓவல் மைதானத்தில் நடந்து வருகிறது. இந்த நிலையில் இங்கிலாந்தின் மூத்த வேகப்பந்து வீச்சாளர் ஸ்டூவர்ட் பிராட், இந்த ஆஷஸ் டெஸ்ட் தனது சர்வதேச கிரிக்கெட்டின் கடைசி ஆட்டமாக இருக்கும் என்று அறிவித்துள்ளார். ஆஷஸ் தொடரின் முடிவில் ஓய்வு அறிவிப்பை வெளியிட்டிருப்பதன் மூலம், 17 ஆண்டுகால சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையில் இருந்து ஸ்டூவர்ட் பிராட் விடைபெற உள்ளார்.

Stuart Broad

37 வயதான ஸ்டூவர்ட் பிராட், கடந்த 2006-ல் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமானவர். இதுவரை 167 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 602 விக்கெட்களை கைப்பற்றியுள்ளார். இந்நிலையில் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ள ஸ்டூவர்ட் பிராட்-க்கு முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ''உங்கள் சிறப்பான டெஸ்ட் வாழ்க்கைக்கு வாழ்த்துக்கள் பிராட். மிகச்சிறந்த மற்றும் எதிரிலிருப்போர் அஞ்சும்வகையிலான டெஸ்ட் பந்து பந்துவீச்சாளர்களில் நீங்கள் ஒருவர். உண்மையான ஜாம்பவான். உங்கள் பயணமும் உறுதியும் மிகவும் ஊக்கமளிக்கிறது” என தெரிவித்துள்ளார்.

கடந்த 2007 டி20 உலகக் கோப்பை தொடரில் பிராட் வீசிய ஓவரில் 6 சிக்ஸர்களை யுவராஜ் சிங் விளாசினார். அதன்மூலம் யுவராஜ் சிங் மட்டுமில்லாது ஸ்டூவர்ட் பிராடும் கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார் என்பது குறிப்பிடத்தக்கது.

Yuvraj Singh - Stuart Broad

இதுகுறித்து இந்த ஆஷஸ் இறுதி டெஸ்ட்டின் 3ஆம் நாளில் செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டூவர்ட் பிராட், 6 சிக்சர்கள் அடித்த போது இருந்த மனநிலையை பகிர்ந்து கொண்டார். அதில், “ஆமாம் அது என் கிரிக்கெட் வாழ்க்கையில் மிகவும் கடினமான நாள். அதிலிருந்து நிறைய கற்றுக் கொண்டேன். சர்வதேச கிரிக்கெட்டில் குறுகிய போட்டிகளில் தான் நாம் விளையாடியிருக்கிறோம் என்பதை உணர்ந்தேன்.

இது மீண்டும் என் கிரிக்கெட் பயணத்தில் நடக்கவே கூடாது என்பதில் உறுதியாக இருந்தேன். என்னை அதிலிருந்து வேகமாக வெளிக்கொண்டுவர தயார்படுத்தினேன். அத்தகைய சூழலில் அந்த வேகமான முயற்சி எனக்கு கைக்கொடுக்கவில்லை. பின்னர் எதிர்காலத்திற்கு தயார் செய்யும் ஒரு போர்வீரனாக என்னை நானே மாற்றிக்கொள்வதில் முழுவீச்சில் இறங்கினேன்” என்றார் ஸ்டூவர்ட் பிராட்.