MS Dhoni - Yuvraj Singh
MS Dhoni - Yuvraj Singh Twitter
கிரிக்கெட்

“நீங்கள் தான் என்னுடைய முக்கிய வீரர் என்று தோனி சொல்லிக்கொண்டே இருப்பார்!” - யுவராஜ் சிங்

Rishan Vengai

வெள்ளை பந்து ஆட்டத்தில் ஒரு சிறந்த மிடில் ஆர்டர் வீரரை தேர்ந்தெடுங்கள் என்று சொன்னால் பெரும்பாலான ரசிகர்கள் முன்னாள் இந்திய வீரரான யுவராஜ் சிங்கை தான் தேர்ந்தெடுப்பார்கள். அந்தளவு ஒயிட் பால் கிரிக்கெட்டில் ஒரு தனி ராஜாங்கமே வைத்திருந்தார் யுவராஜ் சிங்.

அவருடைய ஃபிளிக் ஷாட், ஸ்வீப் ஷாட், கிரவுண்டின் எந்த பக்கம் வேண்டுமானாலும் அடிக்கும் திறமை என அனைத்துமே ஒவ்வொரு இந்திய ரசிகனின் மனதிலும் நீங்காமல் இருக்கும். வேகப்பந்துவீச்சாளர் மற்றும் சுழற்பந்துவீச்சாளர் என இரண்டு விதமான பந்துவீச்சு தாக்குதலுக்கு எதிராகவும் அற்புதமான ஆட்டத்தை வைத்திருந்த அவர், இன்றும் அனைவரின் விருப்பமான தேர்வாக இருந்துவருகிறார்.

ஒவ்வொரு முன்னாள் இந்திய ஜாம்பவான் வீரருக்கும் ஒரு மாற்று வீரர்கள் வந்துவிட்டார்கள், வந்துகொண்டும் இருக்கிறார்கள். ஆனால் யுவராஜ் சிங் போன்ற சிறந்த மிடில் ஆர்டர் பேட்டர் இன்னும் வரவில்லை. அந்த இடமென்பது யுவராஜ் சிங் சென்ற பிறகு இன்னும் காலியாகவே இருந்துவருகிறது. அதனால் தான் 2019 உலகக்கோப்பையில் கூட “யுவராஜ் போன்ற ஒரு வீரரை இந்தியா இன்னும் கண்டுபிடிக்கவில்லை” என்று முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் மைக்கேல் க்ளார்க் கூறியிருந்தார்.

4 உலகக்கோப்பைகளை வென்றிருக்கும் யுவராஜ் சிங்!

40 டெஸ்ட், 304 ஒருநாள் போட்டிகள் மற்றும் 58 T20 போட்டிகளில் விளையாடியிருக்கும் யுவராஜ் சிங், 2000-ம் ஆண்டில் இந்தியாவின் 19 வயதுக்குட்பட்ட உலகக் கோப்பை வெற்றியின் ஒரு பகுதியாக இருந்தார். அதனைத்தொடர்ந்து 2000 ICC சாம்பியன்ஸ் ட்ராபி வெற்றி (கங்குலி தலைமையில் இலங்கையுடன் பகிர்ந்து கொண்டது), 2007 T20 உலகக் கோப்பை மற்றும் 2011 ஒருநாள் உலகக் கோப்பை வெற்றிகள் என தன் வாழ்க்கையில் 4 உலகக்கோப்பைகளை கண்டுள்ளார்.

அதில் தோனி தலைமையில் வென்ற 2007-ம் ஆண்டு T20 உலகக் கோப்பை மற்றும் 2011 ஒருநாள் உலகக் கோப்பைகளின் போது யுவராஜின் அற்புதமான பங்களிப்பை, எந்தவொரு இந்திய கிரிக்கெட் ரசிகராலும் எப்போதும் மறக்கமுடியாது. இந்நிலையில் 2011 வரை கேப்டன் எம் எஸ் தோனி எந்தளவு தன் மீது நம்பிக்கை வைத்திருந்தார் என்பது பற்றி இப்போது கூறியுள்ளார் யுவராஜ் சிங்.

‘நீங்கள் தான் என்னுடைய முக்கியமான வீரர் என்று தோனி சொல்லிக்கொண்டே இருப்பார்!’ - யுவராஜ் சிங்

யுவராஜ் சிங் மற்றும் தோனி என்ற காம்போவை எந்த இந்திய ரசிகராலும் மறக்கமுடியாது. ஏனெனில் இந்த இணை தான் யுவராஜ் சிங்கின் 6 பந்துகளில் 6 சிக்சர்களின் போதும், தோனியின் வின்னிங் சிக்சரின் போதும் களத்தில் இருந்தது. மேலும் பல போட்டிகளில் இந்த இணை பல சாதனைகளை செய்துள்ளது. யுவராஜ் சிங் கேன்சரில் இருந்து மீண்டு வந்து விளையாடிய போதும், இந்த இணைதான் ஒரே நேரத்தில் சதங்களை அடித்து அசத்தியது. அந்தளவு இந்திய அணியில் இந்த இணை மறக்கமுடியாத பல தருணங்களை தந்துள்ளது.

yuvi - MSD

இந்நிலையில் தோனி குறித்து பேசியிருக்கும் யுவராஜ் சிங், “2011 உலகக் கோப்பை வரை, எம்.எஸ் தோனி என் மீது மிகுந்த நம்பிக்கை வைத்திருந்தார். நீங்கள் என்னுடைய முக்கியமான வீரர் என்று எப்போதும் என்னிடம் சொல்லுவார். என்னை எப்படி வெளிக்கொண்டுவர வேண்டும் என அவருக்கு தெரிந்திருந்தது. ஆனால் நோயிலிருந்து மீண்டு வந்த பிறகு என் ஆட்டம் மாறியது மற்றும் அணியிலும் நிறைய மாற்றங்கள் நிகழ்ந்தன. அதனால் தான் 2015 உலகக் கோப்பையில் பங்குபெற முடியவில்லை.

yuvi - MSD

2015 உலகக்கோப்பையை பொறுத்த வரையில், நீங்கள் எதையும் பெரிதாக குறிப்பிட முடியாது. இந்த இடத்தில், ஒரு கேப்டனாக சில நேரத்தில் நீங்கள் எல்லாவற்றையும் நியாயப்படுத்த முடியாது என்பதை என்னால் உணரமுடிந்தது (‘தோனி எனக்காக பேச முடியாமல் இருந்ததை புரிந்துகொள்ள முடிகிறது’ என்கிற தொணியில்). ஏனென்றால் அனைத்தையும் தாண்டி, இறுதியில் இந்திய அணி எவ்வாறு செயல்படுகிறது என்பதைத்தான் ஒரு கேப்டன் பார்க்க வேண்டும்” என்று யுவராஜ் நியூஸ் 18 உடன் கூறியுள்ளார்.