kapil dev - yograj singh web
கிரிக்கெட்

”கபில்தேவை சுட்டுக்கொல்ல துப்பாக்கியுடன் அவருடைய வீட்டிற்கு சென்றேன்..” - யுவராஜ் சிங் தந்தை

இந்திய அணியிலிருந்து காரணமே இல்லாமல் தன்னை நீக்கியபிறகு கேப்டனாக இருந்த கபில்தேவை துப்பாக்கியால் சுட்டுக்கொல்ல நினைத்ததாகவும், அதற்காக துப்பாக்கியோடு அவருடைய வீட்டிற்கே சென்றதாகவும் யுவராஜ் சிங்கின் தந்தை யோக்ராஜ் சிங் பகீர் தகவலை பகிர்ந்துள்ளார்.

Rishan Vengai

இந்திய கிரிக்கெட்டில் சர்ச்சைக்குரிய கருத்துகளுக்கு பெயர் போனவராக யுவராஜ் சிங்கின் தந்தையும், முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரருமான யோக்ராஜ் சிங் இருந்துவருகிறார்.

தன்னுடைய மகன் யுவராஜ் சிங்கின் கிரிக்கெட் வாழ்க்கையை முடித்துவிட்டதற்காக தோனியை எப்போதும் மன்னிக்க மாட்டேன்” என்ற சர்ச்சை கருத்துகளுக்கு பெயர் போனவரான அவர், தற்போது முன்னாள் உலகக்கோப்பை வென்ற கேப்டனான கபில்தேவை கொலைசெய்ய முயன்றதை வெளிப்படுத்தியுள்ளார்.

யுவ்ராஜ் சிங் தந்தை யோக்ராஜ் சிங்

1980-81 காலகட்டத்தில் இந்தியாவிற்காக 1 டெஸ்ட் மற்றும் 6 ஒருநாள் போட்டிகளில் விளையாடிய பிறகு இந்திய அணியிலிருந்து ஓரங்கட்டப்பட்டார் யோக்ராஜ் சிங்.

கபில்தேவை கொல்ல துப்பாக்கியுடன் சென்றேன்..

யுவராஜ் சிங்கின் தந்தை யோக்ராஜ் சிங் சமீபத்திய நேர்காணல் ஒன்றில், கபில்தேவை கொலை செய்ய துப்பாக்கியுடன் அவருடைய வீட்டிற்கே சென்றதாகவும், அங்கு அவருடைய அம்மா இருந்ததால் எதுவும் செய்யாமல் வந்துவிட்டதாகவும். பகீர் தகவலை கூறியிருக்கிறார்.

யூடியூப் சேனல் ‘Unfiltered by Samdish’-ல் பேட்டியளித்திருக்கும் யோக்ராஜ் சிங், “கபில் தேவ் இந்திய அணிக்கும், வடக்கு மண்டலம் மற்றும் ஹரியானா அணிக்கும் கேப்டனாக இருந்த போது எந்த காரணமும் இல்லாமல் என்னை அணியில் இருந்து நீக்கினார். இது தொடர்பாக கபில்தேவிடம் எனது மனைவி பல கேள்விகளை கேட்க விரும்பினார். அப்போது கபில்தேவுக்கு சரியான பாடம் கற்பிப்பேன் என கூறிவிட்டு, அவரைக் கொலை செய்ய எனது துப்பாக்கியை எடுத்துக்கொண்டு அவருடைய வீட்டிற்கு சென்றேன்.

யோக்ராஜ் சிங்

கபில் தேவின் தலையில் துப்பாக்கி குண்டுகளை துளைக்க விரும்பினேன். அப்போது ”கபில்தேவ் அவருடைய தாயாருடன் வெளியே வந்தார். அவரை பலமுறை கெட்டவார்த்தைகளால் திட்டினேன், உங்களால் எனது நண்பர் ஒருவரை இழந்தேன். இன்று நீங்கள் செய்ததற்கான பலனை நீங்கள் அனுபவிக்க வேண்டும். உங்கள் தலையில் துப்பாக்கியால் சுட வேண்டும் என விரும்பியே இங்கு வந்தேன். ஆனால், உங்கள் அருகில் பக்திமிக்க தாயார் இருப்பதால் அதனை செய்யவில்லை” என்று திட்டிவிட்டு அங்கிருந்து வந்தேன்.

அந்த தருணத்தில் தான் இனிமேல் நான் கிரிக்கெட் விளையாடக்கூடாது, நான் செய்ய நினைத்ததை யுவராஜ் சிங் கிரிக்கெட் விளையாடி செய்யவேண்டும் என முடிவெடுத்தேன்.

அடுத்த ஜென்மத்தில் ஒன்றாக பிறக்கவேண்டும் என கபில்தேவ் சொன்னார்..

2011-ல் இந்திய அணி உலகக் கோப்பை வென்ற போது, கபில்தேவ் ஒருவர் மட்டுமே கண்ணீர் வடித்தார். அவரிடம் ஒரு நாளிதழ் செய்தியை அனுப்பி, உலகக்கோப்பை கிரிக்கெட்டில் உங்களை விட எனது மகன் சாதித்துவிட்டான் என கூறினேன்.

அப்போது அவர் வாட்ஸ்அப்பில் எனக்கு ஒரு செய்தி அனுப்பி இருந்தார். அந்த செய்தியில், ”அடுத்த பிறவியில் நாம் சகோதரராக பிறக்கவேண்டும். ஒரே தாயாருக்கு குழந்தைகளாக பிறக்க வேண்டும்” எனக்கூறியிருந்தார். என்னை சந்திக்க வேண்டும் எனவும் கூறினார். ஆனால் பழைய பகை இருந்ததால் அது தடையாக அமைந்துவிட்டது என்று கூறினார்.

அதேபோல மறைந்த தேர்வுக்குழு தலைவர் முன்னாள் கிரிக்கெட் வீரர் பிஷன்சிங் பேடியையும் யோக்ராஜ் சிங் குற்றஞ்சாட்டினார். அந்த தருணத்தில் எனக்கு எதிராக பிஷன்சிங் பேடி உள்ளிட்டோர் சதி செய்தனர். அவரை நான் மன்னிக்கவே மாட்டேன். அவர் படுக்கையிலேயே உயிரிழந்துவிட்டார். நான் அணியில் இருந்து நீக்கப்பட்டபோது, தேர்வாளர்களில் ஒருவரிடம் பேசினேன். அதற்கு அவர், 'நான் மும்பை அணிக்காக விளையாடியதால் கவாஸ்கருக்கு நெருக்கமானவர் என்று நினைத்து பிஷன் சிங் பேடி என்னை தேர்வு செய்ய விரும்பவில்லை' என்று கூறினார். நான் கவாஸ்கருக்கு மிகவும் நெருக்கமான ஒருவராக அப்போது இருந்தேன்" என்று பேசியுள்ளார்.