dhoni - shreyas iyer web
கிரிக்கெட்

தோனிக்கு பிறகு ஏன் ஸ்ரேயாஸ் ஐயர் ’மக்களின் தலைவன்’.. முன்னாள் CSK வீரர் சொன்ன ஒற்றுமை!

கேப்டன்சியில் தோனியை போலவே ஸ்ரேயாஸ் ஐயர் செயல்படுவதாகவும், அதனால் தான் அவருக்கு கீழ் அனைத்து வீரர்களும் சிறப்பாக செயல்படுவதாகவும் முன்னாள் வீரர் ஒப்பிட்டு கூறியுள்ளார்.

Rishan Vengai

2026 ஐபிஎல் தொடரில் 7 போட்டிகளில் தோல்வியறியாமல் முன்னிலை வகிக்கும் பஞ்சாப் கிங்ஸை ஸ்ரேயாஸ் ஐயர் திறமையாக வழிநடத்தி வருகிறார். சேஸிங், டிஃபண்ட் என இரு சூழலிலும் பவுலர்களை நம்பிக்கையுடன் கையாளும் அவர், தோனியின் அணுகுமுறையைப் பின்பற்றி அடுத்த ‘மக்களின் தலைவன்’ என மாறியுள்ளதாக முன்னாள் சிஎஸ்கே வீரர் கூறியுள்ளார்.

2026 ஐபிஎல் தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணி 7 போட்டிகளில் ஒரு தோல்வி கூட இல்லாமல் வெற்றிகரமாக செயல்பட்டுவருகிறது. புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் பஞ்சாப் கிங்ஸை, கேப்டனாக அற்புதமாக வழிநடத்திவருகிறார் ஸ்ரேயாஸ் ஐயர்.

சேஸிங் என்றாலும் சரி, ஸ்கோரை டிஃபண்ட் செய்வதென்றாலும் சரி பவுலர்களை எப்படி கையாள்வது, எந்த பேட்ஸ்மேனை எந்த இடத்தில் களமிறக்குவது, போட்டிக்கு இடையில் சரியான முடிவுகளை எடுப்பது என கேப்டனாக மிளிர்ந்துவருகிறார் ஸ்ரேயாஸ்.

shreyas iyer pbks captain

பல ரசிகர்கள் ஸ்ரேயாஸ் ஐயரை இந்திய டி20 அணியின் கேப்டனாக நியமிக்க வேண்டும் என்ற கருத்தை முன்வைத்துவரும் நிலையில், முன்னாள் வீரர் யோ மகேஷ் ஸ்ரேயாஸ் ஐயர் அப்படியே தோனியின் சிந்தனைகளை ஒத்திருப்பதாக புகழ்ந்துள்ளார்.

ஸ்டார் ஸ்போர்ட்ஸ் உடனான உரையாடலில் பேசியிருக்கும் முன்னாள் சிஎஸ்கே வீரரான யோ மகேஷ், ஸ்ரேயாஸ் ஐயர் தோனியை போலவே வீரர்களின் நம்பிக்கையை சம்பாதிப்பதாகவும், அதுதான் மிகவும் கடினமான விசயம் என்றும் பேசியுள்ளார்.

ஸ்ரேயாஸ் குறித்து பேசியிருக்கும் அவர், “ஸ்ரேயாஸ் ஐயரிடம் இருக்கும் இதேபோலான சிந்தனை தான் தோனியிடமும் இருந்தது. நான் சிஎஸ்கே அணியில் இருந்த 2 வருடங்களில், தோனி என்னிடம் சொன்னது இதைத்தான். நான் மேட்ச் ஆடும்போது தோனி என்னிடம் வந்து, முதல்ல பேட்ஸ்மேனுக்கு எதிரான உன்னுடைய பிளான் என்னன்னு சொல்லு, அதை முதலில் முயற்சித்து பார்க்கலாம். அது சரியாக செல்லவில்லை என்றால், நான் என்னுடைய பிளானை சொல்றன் அப்புறம் அதை முயற்சிக்கலாம் என்று கூறினார்.

தோனியின் இந்த அணுகுமுறை பவுலரின் மனநிலையை டென்சன் இல்லாமல் யோசிக்கவைக்கிறது, அதனால் பவுலருடைய மனதில் என்ன இருக்கிறது என்பதை முழுமையாக அவரிடம் சொல்லி சரியாக செயல்படுத்த முடியும். அதுதான் போட்டியில் மிகவும் முக்கியமானது என்று நான் நினைக்கிறேன். எப்போதெல்லாம் ஸ்ரேயாஸ் ஐயர் கேப்டன்சி செய்கிறாரோ அப்போதெல்லாம் வீரர்களின் நம்பிக்கையை சம்பாதித்துள்ளார். அது மிகவும் கடினமான விசயம், அதை அவர் சிறப்பாக செய்வதால் தான் ரிசல்ட் சிறப்பானதாக இருக்கிறது. அதனால் அவரை மக்கள் தலைவன் என்று கூறுகிறோம்” என பேசியுள்ளார்.