virat kohli / WTC Final
virat kohli / WTC Final Twitter
கிரிக்கெட்

WTC Final: நீண்டுகொண்டே இருக்கும் 10வருட கோப்பை கனவு! இந்தியாவின் தோல்விக்கு இதுதான் முக்கிய காரணம்!

Rishan Vengai

முடிவுக்கு வராமல் நீண்டுகொண்டே இருக்கும் 10 வருட கோப்பை கனவு!

ஐசிசி கோப்பையின் இறுதிப்போட்டி அதில் இந்திய அணி என்றாலே தோல்வியும் ஏமாற்றமும் மட்டுமே மிச்சமாக இருந்துவருகிறது. இத்தனை கால கிரிக்கெட் வரலாற்றில் இந்திய அணி 10 முறை ஐசிசி தொடரின் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது. அதில் 4 முறை கோப்பையை கைப்பற்றியுள்ள இந்திய அணி, ஒருமுறை மட்டும் கோப்பையை பகிர்ந்துள்ளது. மற்றபடி 5 முறை படுதோல்வியை மட்டுமே சந்தித்துள்ளது.

1983 World Cup

1983 ஆம் ஆண்டு கபில்தேவ் தலைமையில் ஒருநாள் உலகக்கோப்பையை வென்ற இந்திய அணி, 28 வருடங்களுக்கு பிறகு 2011-ல் தான் தோனி தலைமையில் மீண்டும் கோப்பையை கைப்பற்றியது. 2007 டி20 உலகக்கோப்பை, 2011 ஒருநாள் உலகக்கோப்பை மற்றும் 2013 சாம்பியன்ஸ் ட்ரோபி முதலிய 3 ஐசிசி கோப்பைகளை அடுத்தடுத்து கைப்பற்றி அசத்தியிருந்தார் முன்னாள் இந்திய கேப்டன் எம் எஸ் தோனி.

MS DHONI / 3 ICC Trophies

2013-ல் தோனி வென்று கொடுத்த கோப்பைக்கு பிறகு இந்திய அணி 2014 டி20 உலகக்கோப்பை, 2017 சாம்பியன்ஸ் ட்ரோபி மற்றும் 2021 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் என 3 முறை இறுதிப்போட்டிக்கு முன்னேறியும் தோல்வியை மட்டுமே சந்தித்துள்ளது. 2013க்கு பிறகான பத்து வருடங்களாக கோப்பைக்கான முயற்சியில் தோல்வியையே சந்தித்து வருகிறது இந்திய அணி.

2 முறை WTC பைனலுக்கு சென்ற ஒரே அணி.. இருந்தும் வெற்றிக்கான இடத்தில் இல்லை!

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பை பொறுத்தவரையில் தொடங்கப்பட்ட இந்த இரண்டு தொடர்களில், இரண்டு முறையும் இறுதிப்போட்டிக்கு முன்னேறிய ஒரே அணி என்றால் அது இந்திய அணி மட்டும் தான். கடந்த 2019-2021 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டியில் நியூசிலாந்து அணிக்கு எதிராக விளையாடிய இந்திய அணி படுதோல்வியை சந்தித்தது. நியூசிலாந்து முதல் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் டைட்டிலை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி கைப்பற்றி அசத்தியது.

WTC Final 2021

இந்நிலையில் 2021-2023 உலக டெஸ்ட் சாம்பியன்சிப் இரண்டாவது முறையாகவும் WTC பைனலுக்கு முன்னேறிய இந்திய அணி, இப்போதாவது கோப்பையை வெல்லும் என்று எதிர்ப்பார்க்கப்பட்டது. ஆனால் பேட்டிங் பவுலிங் என இரண்டிலும் ஒரு கை மேலோங்கி இருந்த ஆஸ்திரேலிய அணி, வெற்றியை எட்டிப்பிடித்து தன்னுடைய கோப்பைகளின் எண்ணிக்கையில் மேலும் ஒன்றை கூட்டியுள்ளது.

வெற்றியை எட்டும் நிலையில் இருந்த போதும் சொதப்பிய கோலி மற்றும் ரஹானே!

469 மற்றும் 270/8 என்று இரண்டு இன்னிங்ஸிலும் சிறப்பாக செயல்பட்ட ஆஸ்திரேலிய அணி, இந்தியா வெற்றிபெற 444 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. 444 ரன்கள் என்ற இமாலய இலக்கை துரத்திய இந்திய அணி நல்ல தொடக்கத்தை கொடுத்தாலும் சர்ச்சைக்குரிய வகையில் கில்லின் விக்கெட்டை இழந்து தடுமாறியது. முக்கியமான நேரத்தில் அடுத்தடுத்து கேப்டன் ரோகித் சர்மா மற்றும் சட்டீஸ்வர் புஜாரா இருவரது விக்கெட்டையும் கைப்பற்றிய ஆஸ்திரேலிய அணி அசத்தலான பந்துவீச்சை வெளிப்படுத்தியது. அதற்கு பிறகு கைக்கோர்த்த விராட் கோலி மற்றும் அஜிங்க்யா ரஹானே இருவரும் சிறப்பான பார்ட்னர்ஷிப் போட்டு இந்திய அணிக்கு நம்பிக்கையை அளித்தனர்.

Virat Kohli

நான்காம் நாள் முடிவில் 164/3 என்ற நிலையில் இருந்த இந்திய அணிக்கு வெற்றிபெற 280 ரன்கள் தேவையிருந்தது. இந்நிலையில் கடைசி நாள் ஆட்டத்தை தொடங்கிய இந்திய அணியில் கோலி மற்றும் ரஹானே இருவரும் நிதானமாகவே தொடங்கினர். ரன்களை விட்டுக்கொடுக்க விரும்பாத ஆஸ்திரேலிய அணி தொடக்கத்திலேயே அட்டாக்கிங் பீல்டிங்கை வைக்காமல், ஒரு விதமாக பாதுகாப்பாகவே விளையாடியது. பேட்டிங் செய்ய சாதகமான நிலை இருந்தாலும் இந்திய வீரர்கள் தவறிழைக்கும் வரை காத்திருந்தனர் ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்கள். முதல் அரை மணி நேரத்தை தாக்குப்பிடித்தாலே போதும் இந்திய அணிக்கு எல்லாம் சாதகமாகவே மாறும் என்ற நிலையில் தான் போட்டியிருந்தது.

Boland Vs Virat Kohli

தொடர்ந்து லைன் லெந்தை சிறப்பாக வீசிய போலன்ட் இந்திய அணிக்கு எமனாகவே இந்த இறுதிப்போட்டியில் இருந்தார். இன்-ஸ்விங் மற்றும் அவுட்-ஸ்விங் பந்துகளை கூர்மையாக வீசிய போலன்ட் விராட் கோலியின் மோசமான பக்கத்திற்கு அழைத்து சென்றார். போலன்ட் விரித்த வலையில் விழுந்த கோலி, வெளியில் செல்லும் பந்துக்கு தன்னுடைய விக்கெட்டை பரிசாக கொடுத்து வெளியேறினார். ஒரு அனுபமுள்ள வீரர் முக்கியமான ஒரு சூழலின் போது எதைப்போன்ற வழியில் விக்கெட்டை இழக்கக்கூடாதோ அப்படி கொடுத்துவிட்டு வெளியேறினார். தொடர்ந்து ஜடேஜாவையும் டக் அவுட்டில் வெளியேற்றிய போலன்ட் கிட்டத்தட்ட போட்டியை அங்கேயே தடுத்து நிறுத்திவிட்டார்.

விராட் கோலி மற்றும் ஜடேஜா வெளியேறினாலும் முதல் இன்னிங்ஸில் நம்பிக்கையளித்த ரஹானே தொடர்ந்து எடுத்துசெல்வார் என்று எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில், அவரும் ஒரு மோசமான ஷாட் விளையாடி வெளியேறினார். உடன் ஷர்துல் தாக்கூரும் டக் அவுட்டில் வெளியேற, ஆஸ்திரேலிய அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை விரைவாகவே வீழ்த்தி அசத்தியது. முடிவில் இந்தியாவை 234 ரன்களில் ஆல் அவுட் செய்த ஆஸ்திரேலிய அணி, தன்னுடைய கோப்பை குடோனில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பையும் சேர்த்துக்கொண்டது.

இந்தியாவின் தோல்விக்கு இதுதான் முக்கியமான காரணம்!

இந்திய அணியின் தோல்விக்கு புஜாரா, ரோகித் சர்மா போன்றவர்களின் மோசமான பேட்டிங், சுப்மன் கில்லின் சர்ச்சைக்குரிய விக்கெட், விராட் கோலி மற்றும் ரஹானேவின் சொதப்பல் ஷாட்கள் என பல காரணங்கள் இருந்தாலும் முக்கியமான காரணமாக பார்க்கப்படுவது, டி20 கிரிக்கெட் விளையாடிவிட்டு அப்படியே டெஸ்ட் போட்டிக்கு தாவியது தான். ஐபிஎல் தொடரை முடித்துவிட்டு வந்து உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் பங்குபெற வெறும் 10 நாட்கள் மட்டுமே இந்திய அணிக்கு இடைவெளி இருந்தது. 2023 ஐபிஎல் மே 30ஆம் தேதி முடிவடைந்த நிலையில், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஜூன் 7ஆம் தேதி தொடங்கப்பட்டது.

டெஸ்ட் போட்டிக்கு தேவையான பயிற்சி இல்லாததே இந்திய அணியின் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது. எப்பேற்பட்ட உலகத்தரம் வாய்ந்த வீரர்கள் இருந்தாலும், உங்களால் வெள்ளைப்பந்து கிரிக்கெட்டிலிருந்து உடனடியாக சிகப்பு பந்து கிரிக்கெட்டை எளிதாக விளையாட முடியாது என்பதை மீண்டும் ஒருமுறை டெஸ்ட் கிரிக்கெட் நிரூபித்து காட்டியுள்ளது. இதே போன்று தான் 2021ஆம் ஆண்டு டி20 உலகக்கோப்பைக்கும் இந்திய அணி ஐபிஎல்லை முடித்த கையோடு சென்றது. அப்போது அரையிறுதிக்கு கூட முன்னேறாமால் லீக் சுற்றோடு வெளியேறியது இந்திய அணி. அப்போது ஐபிஎல்லால் தங்களுக்கு அதிகமான பணிச்சுமை இருந்ததாக வீரர்கள் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.