மகளிர் உலகக் கோப்பைக் கிரிக்கெட் தொடரின், இன்றைய 2வது அரையிறுதிப் போட்டியில் நடப்புச் சாம்பியன் ஆஸ்திரேலியாவும், இந்தியாவும் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
8 அணிகள் கலந்துகொண்ட மகளிர் உலகக் கோப்பைக் கிரிக்கெட் தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற்று வரும் நிலையில், தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து, இந்தியா ஆகிய அணிகள் புள்ளிகள் பட்டியலில் முதல் 4 இடங்களுக்கு முன்னேறி அரையிறுதிக்குள் நுழைந்தன.
இந்த நிலையில் இறுதிப்போட்டிக்குள் நுழையப் போவது யார் என்பதைத் தீர்மானிக்கும் முதல் அரையிறுதிப் போட்டி நேற்று கவுகாத்தியில் நடைபெற்றது. இதில் தென்னாப்பிரிக்கா அணியும் இங்கிலாந்து அணியும் பலப்பரீட்சை நடத்தின. இந்தப் போட்டியில் 4 முறை சாம்பியனான இங்கிலாந்து அணியை, தென்னாப்பிரிக்கா அணி 125 ரன்கள் வீழ்த்தி முதல்முறையாக உலகக்கோப்பை இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றுள்ளது.
இதற்கிடையே, இரண்டாவது அரையிறுதிப் போட்டி இன்று நவி மும்பையில் நடைபெற இருக்கிறது. இதில் நடப்பு சாம்பியனான ஆஸ்திரேலியாவை இந்திய அணி எதிர்கொள்கிறது. இப்போட்டியில் இந்திய அணி வெற்றிபெற்றால், மூன்றாவது முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறும். அதேநேரத்தில் ஆஸ்திரேலியா வெற்றிபெற்றால், 10வது முறையாக இறுதிப்போட்டிக்குள் நுழையும். இதனால், இவ்விரு அணிகளுக்கு இடையே எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. உள்ளூரில் நடப்பதால் இந்த முறை எப்படியும் இறுதிப்போட்டிக்குள் நுழைந்துவிட வேண்டும் என்கிற வேட்கையில் இந்திய அணி இருக்கிறது.
லீக் போட்டிகளில் தொடர்ச்சியாக ஹாட்ரிக் தோல்வியடைந்த இந்திய அணி, நியூசிலாந்தை வீழ்த்தி அரையிறுதிக்குள் நுழைந்துள்ளது. இந்திய அணியைப் பொறுத்தவரை ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தனது கடைசி ஐந்து ஒருநாள் போட்டிகளில் துணை கேப்டன் ஸ்மிருதி மந்தனா 105, 58, 117, 125 மற்றும் 80 ரன்கள் எடுத்துள்ளார். அவருடைய பங்களிப்பு இந்தப் போட்டியிலும் தேவைப்படுகிறது. அதேநேரத்தில், தொடக்க ஜோடி பிரதிகா ராவல் காயம் காரணமாக விலகியிருப்பது பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது. இந்த இணைதான் கடந்த போட்டியில் அதிக ரன்கள் குவித்து சாதனை படைத்தது. பிரதிகா ராவலுக்கு பதில் ஷஃபாலி வர்மாவுடன் தொடக்க வீராங்கனையாக களமிறங்கத் தயாராக உள்ளார். அவர் ஒத்துழைப்பு கொடுக்கும் பட்சத்தில் இந்திய அணி நல்ல ஸ்கோரைத் தொடும்.
கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுருக்கு இது, கடைசி உலகக் கோப்பையாக இருக்கும் எனக் கூறப்படும் நிலையில், அவரும் இன்றைய போட்டியில் கடுமையான சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. இவர்களைத் தவிர, பேட்டிங்கில் ஜெமிமா ரோட்ரிக்ஸ், ஹர்லீன் தியோல், ரிச்சா கோஷ் ஆகியோரும், பவுலிங்கில் ரேனுகா சிங், தீப்தி சர்மா, ஸ்னே ரானா, கிரந்தி கவுட், ஸ்ரீசாரணி ஆகியோரும் கடந்த போட்டிகளைவிட, இன்றைய போட்டியில் சிறப்பாகச் செயல்பட வேண்டியது அவசியம். நடப்பு உலகக் கோப்பைத் தொடரில் இந்திய அணி லீக்கில் ஆஸ்திரேலியாவிடம் தோல்வி கண்டுள்ளது. அதற்கு, பதிலடி கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் இந்திய அணி உள்ளது.
மறுபுறம், அலிசா ஹீலி தலைமையிலான ஆஸ்திரேலிய மகளிர் அணி நடப்பு உலகக் கோப்பை தொடரில் தோல்வியையே சந்திக்காமல் அரையிறுதிவரை முன்னேறியுள்ளது. அந்த அணி விளையாடிய 7 போட்டிகளில் 6 வெற்றியையும், ஒரு போட்டி மழை காரணமாக முடிவு எட்டப்படாததன் காரணமாக 13 புள்ளிகளைப் பெற்று பட்டியலின் முதலிடத்தைப் பிடித்துள்ளது. இதுதவிர்த்து ஏற்கெனவே 7 முறை சாம்பியன் பட்டத்தை வென்றிருக்கும் ஆஸ்திரேலிய அணி, 8ஆவது சாம்பியன் பட்டத்தை வெல்லும் உத்வேகத்துடன் இந்த போட்டியை எதிர்கொள்ள இருக்கிறது.
அணியின் பேட்டிங்கில் அலிசா ஹீலி (கேப்டன்), தஹ்லியா மெக்ராத், பெத் மூனி, எல்லிஸ் பெர்ரி, அன்னாபெல் சதர்லேண்ட், ஜார்ஜியா வோல் உள்ளிட்டோர் அபாரமான ஃபார்மில் உள்ளனர். பந்துவீச்சை பொறுத்தவரையில் அலனா கிங், மேகன் ஸ்கட், ஜார்ஜியா வேர்ஹாம், ஆஷ்லே கார்ட்னர் உள்ளிட்டோர் இருப்பது அணிக்கு மிகப்பெரும் பலமாக பார்க்கப்படுகிறது. 2017 உலகக் கோப்பை அரையிறுதியில் இந்தியாவிடம் ஆஸ்திரேலியா தோல்வி கண்டது. அதை மனதில் வைத்து ஆஸ்திரேலியாவும் களமிறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. நவி மும்பையில் உள்ள டி.ஒய்.பாட்டில் மைதானமும் பேட்டர்களின் சொர்க்கபுரியாக திகழ்வதால், இந்தப் போட்டியிலும் டாஸ் ஜெயிக்கும் அணி, பலத்தைத் தரும் என நம்பப்படுகிறது.