Ind vs Wi
Ind vs Wi Insta
கிரிக்கெட்

முதல் போட்டியில் செய்த தவறை சரிசெய்யுமா இந்திய அணி? தோல்வியிலிருந்து மீண்டு வருமா?

Viyan

வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப் பயணம் செய்துவரும் இந்திய ஆண்கள் கிரிக்கெட் அணி, 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 1-0 என வென்றது. 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2-1 என வெற்றி பெற்றது இந்தியா. அடுத்ததாக 5 போட்டிகள் கொண்ட சர்வதேச டி20 தொடர் வியாழக்கிழமை டிரினிடட்டில் தொடங்கியது. ஆனால் முதல் போட்டியில் யாரும் எதிர்பாராத விதமாக இந்திய அணி தோல்வியைச் சந்தித்தது.

Suryakumar

முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 149 ரன்கள் எடுத்தது. இந்திய அணி நிச்சயம் வென்றுவிடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இந்தியாவுக்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்தனர் வெஸ்ட் இண்டீஸ் பௌலர்கள். ஆரம்பத்தில் இருந்தே சீரான இடைவெளியில் இந்திய அணி விக்கெட்டுகளை இழந்துகொண்டே இருந்தது. கடைசியில் 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 145 ரன்கள் மட்டுமே எடுத்தது அந்த அணி. அதனால் 4 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது இந்தியா.

ஒருநாள் தொடரைப் போலவே இந்தப் போட்டியிலும் இந்திய அணியின் டீம் செலக்‌ஷன் விமர்சனத்துக்குள்ளாக்கப்பட்டது. ஒருநாள் தொடரில் பேட்டிங் பொசிஷன் முடிவுகள், அதற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட வீரர்கள் போன்ற முடிவுகள் விமர்சிக்கப்பட்டன. இந்த டி20 போட்டியிலேயே இந்திய அணியின் டெய்ல் செலக்‌ஷன் விவாதத்துக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.

Ishan Kishan - Gill

இந்தப் போட்டியில் இஷான் கிஷன், சுப்மன் கில், சூர்யகுமார் யாதவ், சஞ்சு சாம்சன், ஹர்திக் பாண்டியா, திலக் வர்மா, அக்‌ஷர் படேல் என இந்திய அணியின் டாப் 7 பக்காவாக இருந்தது. ஆனால் அதன்பிறகு ஒருவர் கூட ஓரளவு பேட்டிங் செய்பவராக இல்லை. குல்தீப் யாதவ், யுஸ்வேந்திர சஹால், ஆர்ஷ்தீப் சிங், முகேஷ் குமார் என நான்கு நம்பர் 11 வீரர்களோடு களமிறங்கியிருந்தது இந்திய அணி. அது சேஸிங்கில் பெரிய பின்னடைவாக அமைந்தது.

Sanju Samson

16வது ஓவரில் சஞ்சு சாம்சன் விக்கெட்டை இழந்தபோது, இந்திய அணிக்கு 27 பந்துகளில் 37 ரன்கள் தேவைப்பட்டது. களத்தில் அக்‌ஷர் படேல் இருக்க, கைவசம் 4 விக்கெட்டுகள் இருந்தன. நிச்சயம் எந்த அணிக்குமே இது வின்னிங் ஜோன் தான். ஆனால் இந்தியாவுக்கு அப்படி இருக்கவில்லை. மற்ற பேட்ஸ்மேன்கள் யாருமே ரன் அடிக்கக்கூடியவர்கள் இல்லை என்பதால், அக்‌ஷர் படேல்தான் முழு பாரத்தையும் சுமக்கவேண்டும் என்ற நெருக்கடிக்குத் தள்ளப்பட்டார். அதனால் அவர் அடித்து ஆட முற்பட்டு ஆட்டமிழந்தார். எதிர்பார்த்ததைப்போலவே மற்றவர்களால் ஆட்டத்தை முடிக்க முடியவில்லை. ஆர்ஷ்தீப் சிங் சற்று முயற்சி செய்து பார்த்தாலும், இந்திய அணியால் வெற்றி பெற முடியவில்லை.

டி20 யுகம் மொத்தமாக மாறிக்கொண்டிருக்கும் நிலையில் ஒருசில அணிகள் கடைசிவரை பேட்டிங் செய்யக்கூடிய அணிகளாக இருக்கின்றன. குறைந்தபட்சம் நம்பர் 9 வரை! 8 & 9 இடங்களில் களமிறங்கும் பௌலர்கள் ஓரளவு பேட்டிங்குக்கு கைகொடுப்பவர்களாக இருக்கின்றனர். உதாரணம்: ஆஸ்திரேலியா - ஸ்டார்க், கம்மின்ஸ். இங்கிலாந்து - வோல்ஸ், வுட். இந்திய அணியிலும் அப்படியான வீரர்கள் இல்லாமல் இல்லை. ஷர்துல் தாக்கூர், வாஷிங்டன் சுந்தர், ஹர்ஷல் படேல், புவனேஷ்வர் குமார் போன்ற பல வீரர்களைப் பார்த்திருக்கிறோம். அப்படியிருக்கையில் ஒரு வெளிநாட்டுத் தொடரில் இந்திய அணி 4 நம்பர் 11 வீரர்களோடு களமிறங்கியிருப்பது அனைவருக்கும் ஆச்சர்யமளிப்பதாக இருக்கிறது.

Tilak Varma

ஆனால் இந்தத் தொடருக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் அனைத்து பௌலர்களுமே அப்படிப்பட்டவர்கள்தான். அதனால் இந்திய அணி ஒரு கூடுதல் பேட்ஸ்மேனை அணியில் சேர்த்து அக்‌ஷரை எட்டாவது வீரராகக் களமிறக்கலாம். திலக் வர்மாவின் பௌலிங்கைப் பயன்படுத்தலாம். ஆனால், அதை இந்தப் போட்டியில் இந்திய அணி செய்யுமா என்பதுதான் மிகப் பெரிய கேள்வி.