ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் செய்திருக்கும் இந்திய அணி 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் தொடரில் விளையாடிவருகிறது.
'நியூசிலாந்துக்கு எதிராக சொந்த மண்ணில் படுதோல்வி' என்னும் பதக்கத்துடன் சென்ற இந்திய அணி, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியை வென்று தரமான கம்பேக் கொடுத்தது. ஆனால் இரண்டாவது டெஸ்ட் போட்டியை அசால்ட்டாக வென்ற ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் கொண்ட தொடரை 1-1 என சமன்செய்தது.
இந்நிலையில் இரண்டு அணிகளுக்கும் இடையேயான 3வது டெஸ்ட் போட்டியானது பிரிஸ்பேனில் உள்ள கப்பா மைதானத்தில் தொடங்கி நடைபெற்றுவருகிறது.
முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா முதல் இன்னிங்ஸில் டிராவிஸ் ஹெட் 152 ரன்கள், ஸ்மித் 101 ரன்கள் என்ற இரண்டு பேரின் சதத்தால் 445 ரன்களை குவித்துள்ளது. அதனைத்தொடர்ந்து விளையாடிவரும் இந்திய அணி தடுமாறி வருகிறது.
ஆஸ்திரேலியா முதல் இன்னிங்ஸில் பெரிய ஸ்கோரை பதிவுசெய்ததால் இந்தியாவும் நிச்சயம் பெரிய ரன்களை போர்டில் எடுத்துவரும் என எதிர்ப்பார்க்கப்பட்டது. ஆனால் ஜெய்ஸ்வால், கில், கோலி, ரோகித், பண்ட் என அனைவரும் சொற்ப ரன்களில் வெளியேறி நடையை கட்டினர்.
தனியொரு ஆளாக போராடிய கேஎல் ராகுல் 84 ரன்கள் அடித்திருந்த போது, சதமடிக்கும் வாய்ப்பை இழந்து நாதன் லயனின் பந்தில் அவுட்டாகி வெளியேறினார். அவ்வளவுதான் அணி காலி என்று நினைத்த நேரத்தில் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜடேஜா அரைசதமடித்து அசத்தினார்.
77 ரன்கள் எடுத்திருந்த போது ஜடேஜாவை பாட் கம்மின்ஸ் வெளியேற்றினார். நிதிஷ் ரெட்டியும் வெளியேற ஆட்டம் கிட்டத்தட்ட சீல்செய்யப்பட்டது. எப்படியும் இந்தியா ஃபோல்லோவ் ஆன் மூலம் ஆட்டத்தை தொடரப்போகிறது என்று நினைத்தபோது கடைசிவிக்கெட்டுக்கு கைக்கோர்த்த பும்ரா மற்றும் ஆகாஷ் தீப் இருவரும் ஆஸ்திரேலியா அணியை சர்ப்ரைஸ் செய்தனர்.
ஃபோல்லோவ் ஆன் மூலம் இந்தியா தொடர்ந்து பேட்டிங் செய்தால் எளிதில் ஆஸ்திரேலியா வெற்றியை நோக்கி சென்றிருக்கும். ஆனால் கடைசி விக்கெட்டுக்கு கைக்கோர்த்த பும்ரா மற்றும் ஆகாஷ் தீப் இருவரும் அதிரடியாக விளையாடி ரன்களை சேர்க்க, ஆஸ்திரேலியா பவுலர்களுக்கு என்ன செய்வதென்று புரியாமல் போனது. அதுவும் பாட் கம்மின்ஸ் ஓவரில் பும்ரா மற்றும் ஆகாஷ் தீப் இருவரும் சிக்சரை பறக்கவிட்டது இந்திய ரசிகர்களுக்கு கண்கொள்ளா காட்சியாக அமைந்தது.
விக்கெட்டையே விட்டுக்கொடுக்காமல் 39 ரன்கள் சேர்த்த இந்த போட்டி, ஆட்டத்தை கடைசி நாளுக்கு இந்தியாவின் பேட்டிங்கை எடுத்துச்சென்றுள்ளது. நாளை முதல் செஸ்ஸனில் முடிந்தவரை இந்த ஜோடி பேட்டிங் செய்யும் பட்சத்தில், ஆட்டம் நிச்சயம் சமனை நோக்கி செல்லும். ஒருவேளை ஆட்டம் டிராவில் முடிந்தால் அதற்கான பாராட்டுக்கள் பும்ரா மற்றும் ஆகாஷ் தீப்பையே சேரும்.
4வது ஆட்டத்தின் முடிவில் இந்தியா 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 252 ரன்கள் சேர்த்துள்ளது. ஆகாஷ் தீப் 2 பவுண்டரிகள் 1 சிக்சருடன் 27 ரன்களுடனும், பும்ரா ஒரு சிக்சருடன் 10 ரன்களுடனும் களத்தில் நிற்கின்றனர். முடிவு என்ன என்பதை நாளைய ஆட்டம் தீர்மானிக்கும்.