Rashid Khan
Rashid Khan R Senthil Kumar
கிரிக்கெட்

AFGvNZ | இன்னொரு அதிரடியை நிகழ்த்துமா ஆப்கானிஸ்தான்..?

Viyan
போட்டி 16: நியூசிலாந்து vs ஆப்கானிஸ்தான்
மைதானம்: எம் ஏ சிதம்பரம் ஸ்டேடியம், சேப்பாக்கம், சென்னை
போட்டி தொடங்கும் நேரம்: அக்டோபர் 17, மதியம் 2 மணி

2023 உலகக் கோப்பையில் இதுவரை:

நியூசிலாந்து
போட்டிகள் - 3, வெற்றிகள் - 3, தோல்வி - 0, முடிவு இல்லை - 0, புள்ளிகள் - 6
புள்ளிப் பட்டியலில் இடம்: இரண்டாவது

இங்கிலாந்து, வங்கதேசம் அணிகளுக்கு எதிராக சேஸிங் செய்த இரண்டு போட்டிகளையுமே முறையே 9 மற்றும் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றிருக்கிறது நியூசிலாந்து. முதலில் பேட்டிங் செய்த போட்டியிலுமே (vs நெதர்லாந்து) 300 ரன்களைத் தாண்டி 99 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆக, நியூசிலாந்து பெற்றிருக்கும் வெற்றிகள் மூன்றுமே பெரிய வெற்றிகள் தான்!

ஆப்கானிஸ்தான்
போட்டிகள் - 3, வெற்றி - 1, தோல்விகள் - 2, முடிவு இல்லை - 0, புள்ளிகள் - 2
புள்ளிப் பட்டியலில் இடம்: ஆறாவது
தொடர்ந்து வங்கதேசம், இந்தியா என இரண்டு துணைக் கண்ட அணிகளுக்கு எதிராக தோல்வியடைந்திருந்த ஆப்கானிஸ்தான் அணி, முந்தைய போட்டியில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்தை வீழ்த்தி அனைவரையும் அதிர்சிக்குள்ளாக்கியிருக்கிறது. 284 ரன்கள் எடுத்த ஆப்கானிஸ்தான் அணி, 215 ரன்களுக்கு இங்கிலாந்தை ஆல் அவுட் ஆக்கி வரலாறு படைத்தது.

மீண்டும் வில்லியம்சன் இல்லாமல் களமிறங்கும் நியூசிலாந்து

நியூசிலாந்து அணி இந்த உலகக் கோப்பையை ஹாட்ரிக் வெற்றியோடு தொடங்கியிருக்கிறது. பேட்டிங், பௌலிங் என அனைத்து ஏரியாவிலும் ஆதிக்கம் செலுத்தி போட்டிகளை வென்றுகொண்டிருக்கிறது பிளாக் கேப்ஸ். இந்தப் போட்டியில் வென்றால் அரையிறுதியை அந்த அணி நெருங்கிவிடும். ஆனால் இந்தப் போட்டியில் அந்த அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் இந்தப் போட்டியில் ஆடமாட்டார். காயத்திலிருந்து மீண்டு வங்கதேசத்துக்கு எதிராகக் களமிறங்கியவர், போட்டியின்போது பந்து கையில் பட்டதில் காயமடைந்தார். ஸ்கேன் எடுத்ததில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டது. அதனால் கடந்த போட்டியைத் தவறவிட்ட வில் யங் மீண்டும் அணியில் இடம்பிடிப்பார். முதலிரு போட்டிகளைப் போல் ரச்சின் ரவீந்திரா நம்பர் 3 வீரராகக் களம் காண்பார். சான்ட்னர், ரவீந்திரா, கிளென் ஃபிளிப்ஸ் ஆகியோரின் சுழலில் நம்பிக்கை வைத்திருப்பதால் முந்தைய போட்டியில் ஈஷ் சோதி விளையாடவில்லை. இந்தப் போட்டியின் ஆடுகளம் அதேபோல் இருந்தால் அவருக்கு இடம் கிடைக்காது. வழக்கமான சேப்பாக்க ஆடுகளமாக இருந்தால் நிச்சயம் சோதியை அந்த அணி லெவனில் சேர்க்க விரும்பும்.

இன்னொரு அப்செட்டை அரங்கேற்றுமா ஆப்கானிஸ்தான்

Rashid Khan

இங்கிலாந்தை வீழ்த்தி மாபெரும் சரித்திரம் படைத்த ஆப்கானிஸ்தான் அதே உத்வேகத்தோடு இன்னொரு வெற்றியைப் பதிவு செய்ய விரும்பும். ஒருவழியாக அந்த அணியின் பேட்டிங் கடந்த போட்டியில் ஓரளவு கைகொடுத்தது. மிடில் ஆர்டர் வழக்கம்போல் கைவிரித்தாலும் கடைசி கட்டத்தில் இக்ரம் அலி கில், ரஷீத், முஜீப் போன்றவர்கள் ஓரளவு நல்ல ஸ்கோர் எடுத்து அணிக்கு உதவினார்கள். அந்த மிடில் ஆர்டர் மட்டும் எழுச்சி பெற்றால், நிச்சயம் ஆப்கானிஸ்தான் இன்னும் பெரிய கனவுகள் காணலாம். முதலிரு போட்டிகளிலும் தாக்கம் ஏற்படுத்தாத அவர்களின் மிகப் பெரிய ஆயுதமான ஸ்பின் யூனிட் இங்கிலாந்தை புரட்டிப் போட்டது. அது ஆப்கானிஸ்தானுக்கு இப்போது அசுர பலம் கொடுக்கும்.

மைதானம் எப்படி?

வழக்கமாக சேப்பாக்கம் ஆடுகளம் ஸ்பின்னர்களுக்கு சொர்க்க பூமியாக இருக்கும். ஆஸ்திரேலியா, இந்தியா அணிகள் மோதிய ஆட்டத்தின் முதல் இன்னிங்ஸ் அப்படித்தான் இருந்தது. ஆனால் வேகப்பந்துவீச்சாளர்களுக்கு இரண்டாவது இன்னிங்ஸில் ஒத்துழைத்தது. நியூசிலாந்து vs வங்கதேசம் போட்டியிலும் ஃபாஸ்ட் பௌலர்கள் விக்கெட் வேட்டை நடத்தினார்கள். அது தொடரும் பட்சத்தில் இந்தப் போட்டி நியூசிலாந்துக்கு சாதகமாக இருக்கும். ஒருவேளை இது வழக்கமான சேப்பாக்கம் ஆடுகளத்தில் ஆடப்பட்டால், ஆப்கானிஸ்தான் ஸ்பின்னர்கள் இன்னொரு அப்செட்டை அரங்கேற்ற வாய்ப்பிருக்கும்.

கவனிக்கப்படவேண்டிய வீரர்கள்


நியூசிலாந்து - டெவன் கான்வே: சேப்பாக்கம் மைதானத்தை நன்கு அறிந்தவர். அதுமட்டுமல்லாமல் இன்றைய காலகட்டத்தில் ஸ்பின்னை சிறப்பாக எதிர்கொள்ளக்கூடிய ஒரு வீரர். முஜீபின் பவர்பிளே ஓவர்களைக் கடக்க இவரது அனுபவம் பெரிய அளவில் உதவும்.

Devon Conway


ஆப்கானிஸ்தான் - ரஷீத் கான்: சேப்பாக்கம் மைதானத்தில் மேஜிக் நிகழ்த்தக்கூடிய ரஷீத், நியூசிலாந்து மிடில் ஆர்டரில் சிறு விரிசலை ஏற்படுத்தினாலும், அது பெரும் பூகம்பத்துக்கு வழிவகுக்கலாம்.