Daren Sammy x page
கிரிக்கெட்

"5 நாள் ஆச்சு.. வீட்டுக்குப் போகணும்” - டேரன் சமியின் பதிவு.. இந்தியாவில் முடங்கிய WI வீரர்கள்!

வெஸ்ட் இண்டீஸ் அணி, சூப்பர் 8 சுற்றுடன் வெளியேறியது. எனினும், ஈரான் போர் காரணமாக அது, இன்னும் சொந்த நாடு திரும்ப முடியாமல் இந்தியாவிலேயே தங்கியுள்ளது.

Prakash J

ஈரான் போர் காரணமாக வெஸ்ட் இண்டீஸ் அணி, இன்னும் சொந்த நாடு திரும்ப முடியாமல் இந்தியாவிலேயே தங்கியுள்ளது. இந்நிலையில், அந்த அணியின் தலைமைப் பயிற்சியாளர் டேரன் சமி வெளியிட்டுள்ள பதிவு ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. இதுகுறித்து அவர், “நான் வீட்டுக்குப் போகணும்" எனப் பதிவிட்டுள்ளார்.

டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் அடுத்தகட்டத்தை எட்டியுள்ளது. 20 அணிகள் பங்கேற்ற நிலையில், அதில் 8 அணிகள் சூப்பர் சுற்றுக்கு முன்னேறின. அதில் 4 அணிகள் அரையிறுதிக்கு முன்னேறின. இதில் முதலாவது அரையிறுதியில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி நியூசிலாந்து அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இதைத் தொடர்ந்து இன்று நடைபெறும் இரண்டாவது அரையிறுதியில் இந்தியா மற்றும் இங்கிலாந்து ஆகிய அணிகள் மும்பை வான்கடே மைதானத்தில் மோதி வருகின்றன. இதில் வெற்றிபெறும் அணி, இறுதிப்போட்டியில் நியூசிலாந்தை எதிர்கொள்ளும். இந்த நிலையில், இதில் பங்கேற்றிருந்த வெஸ்ட் இண்டீஸ் அணி, சூப்பர் 8 சுற்றுடன் வெளியேறியது. எனினும், ஈரான் போர் காரணமாக அது, இன்னும் சொந்த நாடு திரும்ப முடியாமல் இந்தியாவிலேயே தங்கியுள்ளது.

டி20 உலகக்கோப்பை தொடர் முடிந்து சொந்த நாடு திரும்பத் திட்டமிட்டிருந்த நிலையில், அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர் காரணமாக விமானப் போக்குவரத்தில் ஏற்பட்ட தடங்கல்களால், அந்த அணி கொல்கத்தாவிலேயே தங்கியுள்ளது.

இந்நிலையில், அந்த அணியின் தலைமைப் பயிற்சியாளர் டேரன் சமி வெளியிட்டுள்ள பதிவு ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. இதுகுறித்து அவர், “நான் வீட்டுக்குப் போகணும்" எனப் பதிவிட்டுள்ளார். இன்னொரு பதிவில், "எப்போது செல்வோம் என்ற தகவலையாவது சொல்லுங்கள். இன்று, நாளை, அடுத்த வாரம்.. என ஏதாவது ஒரு தகவலைக் கூறுங்கள். இத்துடன் 5 நாட்கள் ஆகி விட்டது" எனப் பதிவிட்டுள்ளார். அவருடைய இந்தப் பதிவு தொடரிலிருந்து வெளியேறிய விரக்தியையும், வீடு திரும்ப முடியாத வீரர்களின் மனநிலையையும் பிரதிபலித்துள்ளது.

ஈரான் தாக்குதலால், பல நாடுகள் தங்களது வான்வெளியை மூடியுள்ளதால், வழக்கமாகப் பயன்படுத்தப்படும் விமான வழித்தடங்கள் மாற்றப்பட்டுள்ளன. மேலும் பல விமானங்கள் ரத்து செய்யப்பட்டும், தாமதப்படுத்தப்பட்டும் வருகின்றன. இந்த சர்வதேச விமானப் போக்குவரத்து கட்டுப்பாடுகள் காரணமாகவே வெஸ்ட் இண்டீஸ் அணியால் திட்டமிட்டபடி கொல்கத்தாவிலிருந்து புறப்பட முடியவில்லை. வெஸ்ட் இண்டீஸ் அணியைப் போலவே ஜிம்பாப்வே அணியும் இதே பாதிப்பால் சிக்கியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும், சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் மற்றும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுடன் இணைந்து மாற்றுப் பயண ஏற்பாடுகளைச் செய்வதற்கான தீவிர முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.