சுப்மன் கில் மற்றும் ஜிதேஷ் சர்மா இந்திய டி20 உலகக்கோப்பை அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். கேப்டன் சூர்யகுமார் யாதவ் மற்றும் அஜித் அகர்கர், கில்லின் நீக்கம் அவரது ஃபார்மால் அல்ல, அணியின் சரியான காம்பினேஷனுக்காக என விளக்கமளித்துள்ளனர். அக்சர் பட்டேல், இஷான் கிஷன் மற்றும் ரிங்கு சிங் ஆகியோருக்கு புதிய வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
2011ஆம் ஆண்டு இந்தியாவில் நடந்த ஒருநாள் உலகக்கோப்பையை வென்றபிறகு, 2016 டி20 உலகக்கோப்பை மற்றும் 2023 ஒருநாள் உலகக்கோப்பை என இரண்டு ஐசிசி தொடர்கள் இந்திய மண்ணில் நடத்தப்பட்டன. ஆனால் இரண்டில் ஒன்றில் கூட இந்திய அணியால் வெற்றிபெற முடியவில்லை. நம்பர் 1 அணியாக இருந்தபோதும் பலநேரங்களில் இந்திய அணியின் உலகக்கோப்பைக்கான வீரர்கள் தேர்வு சுமாராகவே இருந்துள்ளது. இம்முறையும் அப்படி ஏதும் சொதப்பல் நடந்துவிடுமோ என்ற குழப்பம் ரசிகர்களுக்கு அதிகமாகவே இருந்தது.
இந்திய டி20 அணியில் சுப்மன் கில்லுக்கு வழங்கப்பட்ட அதிக முக்கியத்துவம் ரசிகர்களுடைய பெரிய கவலையாக மாறியது. கில்லுக்கு டி20 அணியில் இடமே இல்லை, அவரை ஏன் அணியில் திணிக்கிறீர்கள், சுப்மன் கில்லால் 3 டி20 சதங்கள் அடித்திருக்கும் சஞ்சு சாம்சன் பெஞ்சில் அமர்ந்திருக்கிறார். உங்களுக்கு கில் முக்கியமா? இல்லை கோப்பை முக்கியமா? என பல்வேறு விமர்சனங்கள் தொடர்ந்து வைக்கப்பட்டன.
இந்தசூழலில் தான் உலகக்கோப்பைக்கான டி20 அணியிலிருந்து சுப்மன் கில்லும், ஜிதேஷ் சர்மாவும் நீக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு பதிலாக அக்சர் பட்டேல், இஷான் கிஷன் மற்றும் ரிங்கு சிங் ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
சுப்மன் கில் நீக்கம் குறித்து பேசியிருக்கும் இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ், கில்லின் தரம் என்ன என்பது எங்களுக்கு தெரியும், இந்த முடிவு அவரின் ஃபார்ம் சார்ந்து எடுக்கப்பட்டது அல்ல், அணியில் சரியான காம்பினேஷன் இருக்கவேண்டும் என முடிவுசெய்து எடுக்கப்பட்டது என பேசியுள்ளார்.
அஜித் அகர்கர் பேசுகையில், 15 பேர் கொண்ட அணியை தேர்வுசெய்யும்போது அணியின் காம்பினேசனுக்காக சில வீரர்களால் இடம்பெற முடியவில்லை. கில், ஜிதேஷ் சர்மா இருவரும் தவறாக எதுவும் செய்யவில்லை என பேசியுள்ளார்.