டிராவிட், ஃபிளமிங், நெக்ரா, ஜெயவர்த்தனே
டிராவிட், ஃபிளமிங், நெக்ரா, ஜெயவர்த்தனே twitter
கிரிக்கெட்

இந்திய அணியில் ராகுல் டிராவிட் மாற்றமா? பயிற்சியாளர் ரேஸில் 3 பேர்!

Prakash J

தொடர் தோல்விகளைச் சந்தித்து வருவதால், இந்திய கிரிக்கெட் அணியில் மாற்றம் செய்யப்பட இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. சமீபத்தில் இந்திய அணி, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பை (WTC) ஆஸ்திரேலியாவிடம் பறிகொடுத்தது. வெற்றிபெறுவதற்கான வாய்ப்புகள் இருந்தும், இந்திய அணி தோல்வியடைந்தது கிரிக்கெட் வல்லுநர்களால் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது.

Ind vs Aus / WTC Final

தவிர, முன்னாள் கேப்டன் தோனிக்கு, பிறகு இந்திய அணி எந்த ஐசிசி கோப்பைகளையும் வென்றது இல்லை. இது, மேலும் விமர்சனத்திற்குள்ளாகி வருகிறது. இதையடுத்து, வருங்கால போட்டிகளைக் கருத்தில்கொண்டு, இந்திய அணியை வலுப்படுத்தும் நோக்கில் நிர்வாகம் சில மாற்றங்களைச் செய்ய இருப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

இதன் முதற்கட்டமாக இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டை மாற்றுவதற்கான பேச்சு எழுந்துள்ளது. இந்திய கிரிக்கெட்டின் ஜாம்பவான்களில் ஒருவரான டிராவிட், 2021 டி20 உலகக் கோப்பையைத் தொடர்ந்து ரவி சாஸ்திரியின் பதவிக்காலம் முடிவடைந்த பின்னர் தலைமைப் பயிற்சியாளராகப் பொறுப்பேற்றார்.

டிராவிட் பயிற்சியாளராக தனது பணியை சிறப்பாக தொடங்கினாலும், கடந்த ஆண்டு அவருக்கு ஏமாற்றமே (டி20 உலகக்கோப்பை, ஆசியக் கோப்பை) மிஞ்சியது. அதுபோல், சமீபத்திய உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பை இழந்ததும் ராகுல் டிராவிட்டின் பதவியைக் கடுமையாக விமர்சிக்க வைத்துள்ளது. தவிர, அவருடைய பதவிக்கும் ஆபத்து ஏற்பட்டிருப்பதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.

ராகுல் டிராவிட்டின் பயிற்சியாளர் பதவி குறித்துப் பேசிய ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித், “அவர், சிறந்த கிரிக்கெட் வீரர். திறமையான செயல்திறன் கொண்டவர். ஒரு பயிற்சியாளராக தன்னுடைய திறமையைச் சிறப்பாகவே செய்து காட்டினார். எனவே, இந்திய அணியை மீண்டும் வலுவாகக் கட்டி எழுப்புவதற்கு அவருக்கு மீண்டும் ஒரு வாய்ப்பை வழங்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

டிராவிட்டை மாற்றுவதற்கான செய்திகள் குறித்து பறந்துகொண்டிருக்கும் நிலையில், நியூசிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் ஃபிளமிங், இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஆசிஸ் நெஹ்ரா, இலங்கை அணியின் முன்னாள் கேப்டன் ஜெயவர்த்தனே ஆகியோரின் பெயர்கள் இந்திய அணியின் அடுத்த பயிற்சியாளர்கள் பட்டியலில் பரிசீலிக்கப்பட்டு வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதில் நியூசிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் ஃபிளமிங், சென்னை அணியின் தலைமைப் பயிற்சியாளராக இருந்து, அந்த அணியை பலமுறை இறுதிப்போட்டிக்கு அழைத்துச் சென்றிருப்பதுடன், கோப்பையையும் வாங்கிக் கொடுத்திருக்கிறார்.

அதுபோல், ஆசிஸ் நெஹ்ராவும் குஜராத் அணி தொடக்கத்திலேயே ஐபிஎல் கோப்பையை வாங்க காரணமாக இருந்துள்ளார். தொடர்ந்து அந்த அணியை இரண்டாவது முறையாக இறுதிப்போட்டிக்கு அழைத்துச் சென்றுள்ளார். அதுபோல் ஜெயவர்த்தனேவும் மும்பை அணியின் வெற்றிக்காக உழைத்தவர். இதனால், இம்மூவரின் பெயர்களும் அந்தப் பட்டியலில் இருப்பதாகக் கூறப்படுகிறது.