ஆசிய கோப்பையில் அதிக ரன்கள், அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவர்கள் pt
கிரிக்கெட்

Asia Cup| அதிக ரன்கள்.. அதிக விக்கெட்டுகள் பட்டியல்! முழு அலசல்!

ஆசிய கோப்பை கிரிக்கெட் வரலாற்றில் அதிக ரன்கள் அடித்த வீரர்கள் குறித்த விவரத்தை இங்கே தெரிந்துகொள்ளலாம்..

Rishan Vengai

ஆசிய கோப்பை கிரிக்கெட் வரலாற்றில் அதிக ரன்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் முதலிரண்டு இடத்தில் இலங்கை வீரர்கள் நீடிக்கின்றனர். 3வது இடத்தில் மட்டுமே இந்திய வீரர் இருந்தாலும், ஒரு வீரர் கூட ஆயிரம் ரன்களை கடக்கவில்லை..

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரானது 1984 முதல் நடைபெற்று வருகிறது. தொடக்கம் முதல் ODI வடிவத்தில் மட்டுமே போட்டிகள் நடத்தப்பட்ட நிலையில், 2016-ல் இருந்து டி20 வடிவத்திலும் போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

இந்த சூழலில் ஆசிய கோப்பை தொடரின் ஒருநாள் மற்றும் டி20 இரண்டு வடிவத்திலும் அதிக ரன்கள் அடித்த வீரர்கள் யார் என்ற விவரம் குறித்து இங்கே பார்க்கலாம்..

ODI வடிவம் - அதிக ரன்கள் அடித்தவர்கள் யார்?

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் ODI வடிவத்தில் அதிக ரன்கள் அடித்தவர்களாக முதலிரண்டு இடத்தில் இலங்கை ஜாம்பவான் வீரர்களான சனத் ஜெயசூர்யா மற்றும் குமார் சங்கக்கரா நீடிக்கின்றனர். இந்திய அணியின் ஜாம்பவான் வீரர் சச்சின் டெண்டுல்கர் 3வது இடத்தில் மட்டுமே நீடிக்கிறார்.

முதலிடம் - ஆசியக்கோப்பை வரலாற்றில் ஒருநாள் வடிவத்தில் அதிக ரன்கள் அடித்தவராக இலங்கை ஜாம்பவான் சனத் ஜெயசூர்யா 1220 ரன்களுடன் முதலிடத்தில் நீடிக்கிறார். 1990 முதல் 2008 வரை 25 போட்டிகளில் விளையாடியிருக்கும் அவர் 1220 ரன்களுடன், 6 சதங்களையும் விளாசியுள்ளார். இது ஆசிய கோப்பை வரலாற்றில் ஒரு வீரரால் அடிக்கப்பட்ட அதிக சதங்களாகும்.

இரண்டாவது இடம் - ஜெயசூர்யாவுக்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்தில் நீடிப்பது மற்றொரு இலங்கை வீரரான குமார் சங்கக்கரா. 2004-2014 க்கு இடையில் 24 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் மொத்தமாக 1,075 ரன்கள் குவித்துள்ளார்.

சச்சின் இந்த தொடரில் தனது 33 ஆவது சதத்தினை பதிவு செய்த போது..

3வது இடம் - இந்தியாவின் சிறந்த பேட்டிங் ஐகான்களில் ஒருவரான சச்சின் டெண்டுல்கர், ஆசியக்கோப்பை வரலாற்றில் அதிக ரன்கள் அடித்தவர்கள் பட்டியலில் மூன்றாவது வீரராக உள்ளார். 1990 முதல் 2012 வரை விளையாடிய சச்சின் 23 போட்டிகளில் மொத்தமாக 971 ரன்கள் அடித்துள்ளார். இந்தியாவின் தரப்பில் ஒரு வீரர் கூட ஆயிரம் ரன்களை கடக்கவில்லை.

டி20 வடிவம் - அதிக ரன்கள் அடித்தவர்கள் யார்?

ஆசிய கோப்பை தொடரில் 2016 முதல் டி20 வடிவத்தில் போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன்படி ஆசிய கோப்பை டி20 வடிவத்தில் அதிக ரன்கள் அடித்தவர்கள் பட்டியலில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி முதலிடத்தில் நீடிக்கிறார்.

இதுவரை இரண்டு முறை (2016 மற்றும் 2022) மட்டுமே ஆசியக் கோப்பை தொடர் டி20 வடிவத்தில் நடைபெற்ற நிலையில், அதிக ரன்கள் குவித்தவர்கள் பட்டியலை கீழே பார்க்கலாம்..

விராட் கோலி

முதல் இடம் - முன்னாள் இந்திய கேப்டன் விராட் கோலி 2016 மற்றும் 2022 பதிப்புகளில் 9 இன்னிங்ஸ்களில் விளையாடி மொத்தம் 429 ரன்கள் குவித்துள்ளார். அவருடைய சராசரி யாரையும் பின்தள்ளும் வகையில் 85.80 ஆக உள்ளது. இதில் 2022 ஆசியகோப்பை தொடரில் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக ஆட்டமிழக்காமல் 122 ரன்கள் அடித்து அசத்தினார். இதுதான் ஆசிய கோப்பை தொடரின் டி20 வடிவத்தில் எந்தவொரு வீரராலும் அடிக்கப்பட்ட அதிகபட்ச தனிநபர் ஸ்கோராக உள்ளது.

முகமது ரிஸ்வான்

2வது இடம் - கோலிக்கு அடுத்தபடியாக பாகிஸ்தானின் முகமது ரிஸ்வான் 6 போட்டிகளில் 281 ரன்களுடன் இரண்டாவது இடத்தில் உள்ளார்.

ரோகித் சர்மா

3வது இடம் - மூன்றாவது இடத்தில் இந்திய ஒருநாள் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா, 9 போட்டிகளில் 271 ரன்கள் அடித்து நீடிக்கிறார்.

பாபர் ஹயாத்

4வது இடம்- அற்புதமான பேட்டிங் திறமையை வெளிப்படுத்தியிருக்கும் ஹாங்காங்கின் பாபர் ஹயாத் 5 போட்டிகளில் ஒரு சதம் உட்பட 235 ரன்களைக் குவித்து, அதிக ரன்கள் எடுத்தவர்கள் பட்டியலில் நான்காவது இடத்தில் உள்ளார்.

அதிக விக்கெட்டுகள்

ஆசிய கோப்பை தொடரில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவர்கள் பட்டியலில் ஒருநாள் வடிவத்தில் முதல் 3 இடங்களிலும் இந்திய வீரர்கள் இடம்பெறவில்லை.

ODI வடிவம் - அதிக விக்கெட்டுகள்

Muralitharan

முதல் இடம் - இலங்கை ஜாம்பவான் பவுலர் முத்தையா முரளிதரன் 24 போட்டிகளில் 30 விக்கெட்டுகளுடன் முதலிடத்தில் உள்ளார். இதில் ஒரு ஐந்து விக்கெட்டுகள் இன்னிங்ஸ் அடங்கும்.

2வது இடம் - முரளிதரனை தொடர்ந்து 2வது இடத்தில் நீடிப்பது மற்றொரு ஜாம்பவான் பவுலரான லசித் மலிங்கா. இவர் வெறும் 14 போட்டிகளில் விளையாடி 29 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியுள்ளார். இதில் மூன்று ஐந்து விக்கெட்டுகள் அடங்கும்.

3வது இடம் - பட்டியலின் மூன்றாவது இடத்திலும் மற்றொரு இலங்கை பவுலரான மிஸ்ட்ரி ஸ்பின்னர் மெண்டிஸ் நீடிக்கிறார். இவர் வெறும் 8 போட்டிகளில் 26 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியுள்ளார்.

பட்டியலில் 4வது இடத்திலும் இந்திய பவுலர் இடம்பெறவில்லை. 4வது இடத்தில் பாகிஸ்தானின் சயத் அன்வர் 20 போட்டியில் 25 விக்கெட்டுகளுடனும், 5வது இடத்தில் இந்தியாவின் ரவீந்திர ஜடேஜா 20 போட்டியில் 25 விக்கெட்டுகளுடனும் நீடிக்கின்றனர்.

Ajantha Mentis

டி20 வடிவம் - அதிக விக்கெட்டுகள்

முதலிடம் - டி20 வடிவத்தை பொறுத்தவரை ஸ்விங் பந்துவீச்சுக்கு பெயர் போனவரான இந்தியாவின் புவனேஷ்வர் குமார் முதலிடத்தில் நீடிக்கிறார். இவர் 6 போட்டிகளில் 13 விக்கெட்டுகளுடன் பட்டியலில் முன்னிலை வகிக்கிறார்.

2வது இடம் - புவனேஷ்வரை தொடர்ந்து இரண்டாவது இடத்தில் ஐக்கிய அரபு எமிரேட்ஸைச் சேர்ந்த அம்ஜத் ஜாவேத் 7 போட்டிகளில் விளையாடி 12 விக்கெட்டுகளுடன் நீடிக்கிறார்.

3வது இடம் - மூன்றாவது இடத்தை பொறுத்தவரையில் தலா 11 விக்கெட்டுகளுடன், இந்தியாவின் ஹார்திக் பாண்ட்யா, ஆப்கானிஸ்தானின் ரஷித் கான் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸின் முகமது நவீத் 3 பேர் நீடிக்கின்றனர்.