IPL Mini Auction
IPL Mini Auction X
கிரிக்கெட்

IPL Auction 2024: வீரர்களை எடுக்க போட்டா போட்டி-சர்ப்ரைஸ் ஆன ஏலத்தொகை! டாப் 4 பர்சேஸ்கள் யார் யார்?

Viyan

2024 ஐபிஎல் தொடருக்கான மினி ஏலம் கடந்த செவ்வாய்க்கிழமை துபாயில் நடந்தது. மொத்தம் 77 இடங்கள் காலியாக இருக்க, பல அணிகளும் பல முக்கிய இடங்களுக்கு வீரர்களைத் தேடின. எதிர்பார்த்ததைப் போலவே பல சாதனைகள் இந்த ஏலத்தில் முறியடிக்கப்பட்டன. அதிலும், ஐபிஎல் ஏல வரலாற்றின் மிகவும் காஸ்ட்லியான வீரர் என்ற சாதனை இருமுறை முறியடிக்கப்பட்டது.

இதற்கு முன் கடந்த ஏலத்தில் சாம் கரணை பஞ்சாப் கிங்ஸ் அணி 18.5 கோடி ரூபாய் கொடுத்து வாங்கியது தான் பெரிய தொகையாக இருந்தது. ஆனால் இந்த ஏலத்தில் அது முறியடிக்கப்பட்டது. முதலில் ஆஸ்திரேலிய கேப்டன் பேட் கம்மின்ஸை 20.5 கோடி ரூபாய்க்கு வாங்கி சரித்திரம் படைத்தது சன்ரைசர்ஸ் ஹைதராபாத். ஆனால் சில நிமிடங்களிலேயே அந்த சாதனை உடைபட்டது. ஆஸ்திரேலிய வேகப்பந்துவீச்சாளர் மிட்செல் ஸ்டார்க்கை 24.75 கோடி ரூபாய்க்கு வாங்கியது கொல்கத்தா நைட் ரைடர்ஸ். இதன் மூலம் ஐபிஎல் வரலாற்றின் மிகப் பெரிய விற்பனை என்ற சாதனை படைத்தது அந்த அணி.

இவர்கள் போக டேரில் மிட்செல், ஹர்ஷல் படேல், அல்சாரி ஜோசஃப் என பல வீரர்கள் 10 கோடி ரூபாய்க்கும் மேல் விற்கப்பட்டனர். ஆனால் ஏலத்தைப் பொறுத்தவரை வெறும் தொகை மட்டுமே ஒரு வீரரின் மதிப்பை உறுதி செய்துவிடுவதில்லை. ஒரு அணியின் தேவை என்ன, அதற்கு ஏற்ற வீரரைத் தான் அந்த அணி வாங்கியிருக்கிறதா, அதற்கு என்ன தொகை கொடுத்திருக்கிறது என பல விஷயங்களை வைத்துத்தான் ஒரு பர்சேஸை கணக்கிட முடியும். அப்படி 4 சிறந்த பர்சேஸ்கள் யார்?

1. ஜெரால்ட் கொட்சியா - மும்பை இந்தியன்ஸ்

இந்த ஏலத்துக்கு முன்பாக, ஜெரால்ட் கொட்சியா மீது பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. 2023 ஒருநாள் உலகக் கோப்பை தொடரில் 8 போட்டிகளில் அவர் 20 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தியிருந்தார். வேகம், பௌன்ஸ், யார்க்கர் என ஒரு வேகப்பந்துவீச்சாளருக்குத் தேவையான பல திறமைகளும் அவரிடம் இருப்பதால் பல அணிகள் அவரை டார்கெட் செய்யும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இளம் வீரர் என்பதால் அவர் அதிக தொகைக்குப் போவார் என்றும் கணிக்கப்பட்டிருந்தது. அவர் தென்னாப்பிரிக்க டி20 தொடரான SA20 மற்றும் அமெரிக்காவின் மேஜர் லீக் கிரிக்கெட் ஆகிய தொடர்களில் சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு (முறையா ஜோஹன்னெஸ்பெர்க் சூப்பர் கிங்ஸ் & டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ்) விளையாடுவதால், சென்னை சூப்பர் கிங்ஸ் கூட பெரும் தொகைக்கு வாங்கும் என்று நினைக்கப்பட்டது. ஆனால் ஏலத்தில் நடந்ததோ வேறு.

Gerald Coetzee

வெறும் 5 கோடி ரூபாய்க்கு அவரை வாங்கியது மும்பை இந்தியன்ஸ். அனைத்து அணிகளும் ஸ்டார்க்குக்காக காத்திருந்ததால், கொட்சியாவுக்கு பெரும் போட்டி இல்லாமல் போனது. வான்கடே மைதானத்துக்கு ஏற்ற ஒரு அட்டகாசமான வீரரை வெறும் 5 கோடி ரூபாய்க்கு வாங்கியிருக்கிறது மும்பை இந்தியன்ஸ்.

2. வனிந்து ஹசரங்கா - சன்ரைசர்ஸ் ஹைதராபாத்

கடந்த ஏலத்தில் 10 கோடி ரூபாய்க்கும் மேல் போன ஒருவரை வெறும் 1.5 கோடி ரூபாய் அடிப்படை விலைக்கு வாங்கியிருக்கிறது சன்ரைசர்ஸ் ஹைதராபாத். கம்மின்ஸ் பெரிய தொகைக்கு வாங்கியிருந்தாலும் இதுதான் அவர்களின் மிகச் சிறந்த பர்சேஸ். ரஷீத் கான் வெளியேறிய பிறகு ஒரு டாப் லெக் ஸ்பின்னர் அவர்களுக்குக் கிடைக்கவில்லை.

Hasaranga

கடந்த 2 ஆண்டுகளாகவே அது அவர்களுக்குப் பெரிய தலைவலியாக இருந்தது. ஆதில் ரஷீத் போன்ற ஒருவரால் அந்த இடத்தை நிரப்ப முடியவில்லை. ஹசரங்காவின் காயம், அதன்பிறகான ஃபார்ம் ஆகியவற்றின் காரணத்தால் அவருக்கு மற்ற அணிகள் போட்டியிடாமல் இருந்திருக்கலாம். ஆனால், அது சன்ரைசர்ஸுக்கு சாதகமான அம்சமாக மாறிவிட்டது.

3. டிராவிஸ் ஹெட் - சன்ரைசர்ஸ் ஹைதராபாத்

Travis Head

டிராவிஸ் ஹெட் மீது இந்த ஏலத்துக்கு முன்பாக மாபெரும் எதிர்பார்ப்பு இருந்தது. அனைத்து அணிகளும் அவருக்காக போட்டியிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. மிகச் சிறந்த ஃபார்மில் இருந்த அவர் முதல் செஷனிலேயே பெரும் சென்சேஷனாக இருப்பார் என்று கருதப்பட்டிருந்தது. அப்படிப்பட்ட நிலையில் அவரை 6.8 கோடி ரூபாய்க்கே வாங்கிவிட்டது சன்ரைசர்ஸ். கடந்த முறை பெரும் பிரச்னையாக இருந்த அவர்களின் ஓப்பனிங் ஸ்லாட், இம்முறை பன்மடங்கு பலம் பெற்றிருக்கிறது.

4. ஹேரி ப்ரூக் - டெல்லி கேபிடல்ஸ்

Harry Brook

இந்த லிஸ்ட்டில் ஹேரி ப்ரூக்கின் பெயரைப் பார்ப்பதற்கு அதிர்ச்சியாக இருக்கலாம். கடந்த முறை சுமார் 13 கோடி ரூபாய்க்கு மேல் போன அவர், தன் செயல்பாட்டின் மூலம் அந்தத் தொகையை நியாயப்படுத்தவில்லை. அவர் விற்பனை ஆகாமல் கூடப் போகலாம் என்றுகூட சிலர் கருதினார்கள். ஆனால் ப்ரூக்கை 4 கோடி ரூபாய்க்கு வாங்கியிருப்பது டெல்லி கேபிடல்ஸுக்கு நல்ல பிசினஸ் தான். ஏனெனில் இப்போது ப்ரூக் சன்ரைசர்ஸுக்கு ஆடியது போல் டாப் ஆர்டர் பேட்ஸ்மேனாகப் பார்க்கப்படுவதில்லை. சமீபமாக இங்கிலாந்து அணிக்கு ஃபினிஷராக போட்டிகளை வென்று கொடுத்திருக்கிறார். டெல்லி கேபிடல்ஸுக்கு 5/6 ஸ்லாட்களில் பிரச்சனை எப்போதும் இருப்பதால், ப்ரூக் அதை சரிசெய்வார். அப்படியொரு வீரருக்கு 4 கோடி என்ற தொகை மிகவும் நல்ல பிசினஸ் தான்.