17வது ஆசியக்கோப்பை தொடரானது யுஏஇ-ல் உள்ள துபாய் மற்றும் அபுதாபி மைதானங்களில் நடைபெற்றுவருகிறது. இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான், யுஏஇ, ஓமன், ஹாங்காங் முதலிய 8 அணிகள் இரண்டு குழுக்களாக லீக் போட்டிகளில் விளையாடிய நிலையில், இந்தியா, பாகிஸ்தான், இலங்கை மற்றும் வங்கதேசம் முதலிய 4 அணிகள் சூப்பர் 4 சுற்றுக்கு தகுதிபெற்றுள்ளன.
சூப்பர் 4 சுற்றில் ஒரு அணி மற்ற 3 அணிகளுடன் மோதவிருக்கும் நிலையில், 4 அணிகளில் இருக்கும் எந்த வீரர் கேம் சேஞ்சர் வீரராக இருப்பார் என்பதை இங்கே பார்க்கலாம்..
இலங்கை அணியின் இன்ஃபார்ம் வீரராக இருந்துவருபவர் தொடக்க வீரரான பதும் நிசாங்கா. லீக் சுற்றில் 3 போட்டிகளிலும் வென்றுள்ள இலங்கை அணியில் அணிக்கு பேலன்ஸ் தரும் வீரராக இருக்கும் பதும் நிசாங்கா, மூன்று போட்டிகளில் 41.33 சராசரியுடன் 124 ரன்கள் எடுத்து தொடரில் அதிக ரன்கள் அடித்த வீரராக முதலிடத்தில் நீடிக்கிறார். இதில் இரண்டு அரை சதங்கள் அடங்கும்.
பதும் நிசாங்கா நிதானமாக விளையாடி, அதேநேரம் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தும் வீரராகவும் இருக்கிறார். தேவைப்படும்போது இன்னிங்ஸை நங்கூரமிடும் அதே வேளையில், ரன்வேகத்தை அதிகரிக்கும் அவரது திறன் அவரை இலங்கை அணியின் முக்கிய வீரராக மாற்றுகிறது.
டெத் ஓவர் ஸ்பெசலிஸ்ட்டான முஸ்தஃபிசூர் ரஹ்மான், வங்கதேச அணியின் முக்கிய வீரராக ஜொலித்துவருகிறார். இறுதிஓவரில் அவருடைய கட்டர் பந்துகளை எதிர்கொள்வது பேட்ஸ்மேன்களுக்கு கடினமான ஒன்றாக இருந்துவருகிறது. தன்னுடைய ஃபார்மை தொடர்ந்துவரும் மூத்தவீரர், லீக் போட்டிகளில் 4 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
இந்திய அணியின் தொடக்க வீரராக விளையாடிவரும் இளம் வீரரான அபிஷேக் சர்மா, தன்னுடைய அபாரமான ஹிட்டிங் திறமையால் அச்சுறுத்தும் வீரராக விளங்குகிறார். இவர் களத்தில் இருக்கும் ஒவ்வொரு பந்தும் எதிரணிக்கு சிக்சர், பவுண்டரிகளை பரிசாக அளிக்கின்றன. தன்னுடைய சிறந்த ஃபார்மில் இருக்கும் அபிஷேக் சர்மா, இந்திய அணியின் கேம் சேஞ்சர் வீரராக இருந்துவருகிறார். அவரால் பவர்பிளேவிலேயே ஆட்டத்தின் போக்கை மாற்றிவிட முடியும்..
பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர்கள் இன்னும் சோபிக்கவில்லை, அதிலும் பாகிஸ்தான் ரசிகர்களின் நம்பிக்கை வீரராக இருந்துவரும் சைம் ஆயூப் 3 போட்டிகளிலும் 0 ரன்னில் வெளியேறி அதிர்ச்சி கொடுத்துள்ளார்.
சமீபத்திய ஒருநாள் கிரிக்கெட்டில் அடுத்தடுத்து 3 சதங்களை அடித்து ஆச்சரியப்படுத்திய சைம் ஆயூப், இன்னும் ஆசியக்கோப்பையில் மிளிராமல் இருந்துவருகிறார். பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர்கள் ஜொலித்தால் மட்டுமே அவர்களால் மிகப்பெரிய டோட்டலை குவிக்க முடியும். அந்தவகையில் சைம் ஆயூப் மீண்டுவருவது பாகிஸ்தான் அணிக்கு முக்கியமான ஒன்றாக இருக்கும் பட்சத்தில், தொடக்க வீரரான சைம் ஆயூப் அவர்களின் கேம் சேஞ்சிங் வீரராக இருப்பார். பந்துவீச்சிலும் அவருடைய சுழற்பந்துவீச்சு எஃபக்டிவாக இருந்துவருகிறது.