vaibhav suryavanshi  PT web
கிரிக்கெட்

கண் முன் நிகழ்ந்த தோல்வி | சூப்பர் ஓவரில் சூர்யவன்ஷியை ஏன் இறக்கவில்லை? ரசிகர்கள் அதிர்ச்சி!

வாய்ப்பு இருந்தும் வைபவ் சூர்யவன்ஷி ஏன் களமிறக்கப்படவில்லை என்ற கேள்வி எழுந்துள்ளது. அடுத்தடுத்து விக்கெட் வீழ்ந்ததை மைதானத்தில் இருந்து சோகத்துடன் வைபவ் பார்க்கும் படங்கள் தற்போது வைரலாக பகிரப்பட்டு வருகிறது.

rajakannan

வாய்ப்பு இருந்தும் வைபவ் சூர்யவன்ஷி ஏன் களமிறக்கப்படவில்லை என்ற கேள்வி எழுந்துள்ளது. அடுத்தடுத்து விக்கெட் வீழ்ந்ததை மைதானத்தில் இருந்து சோகத்துடன் வைபவ் பார்க்கும் படங்கள் தற்போது வைரலாக பகிரப்பட்டு வருகிறது.

ஏசிசி ஆண்கள் ஆசியக் கோப்பை ரைசிங் ஸ்டார்ஸ் 2025 தொடர் கத்தாரில் நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்ற முதலாவது அரையிறுதிப் போட்டியில் இந்திய ஏ அணியும், வங்கதேச ஏ அணியும் பலப்பரீட்சை நடத்தின. இதில் டாஸ் ஜெயித்த இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட் செய்த வங்கதேச அணி, 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 194 ரன்கள் எடுத்தது. அவ்வணியில் அதிகபட்சமாக தொடக்க வீரர் ரஹ்மான் சோகன் 65 ரன்களும், மெக்ராப் ஆட்டமிழக்காமல் 48 ரன்களும் எடுத்தனர்.

india a

பின்னர் 195 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியில் தொடக்க ஜோடிகளான வைபவ் சூர்யவன்ஷி (38), பிரியன்ஷ் ஆர்யா (44) நல்ல அடித்தளம் அமைத்துக் கொடுத்தனர். பொறுப்புணர்ந்து ஆடிய கேப்டன் ஜிதேஷ் சர்மா மற்றும் நேகல் வதேதரா முறையே 33 மற்றும் 32 ரன்களில் வெளியேற, அடுத்து வந்த வீரர்களும் வெற்றிக்காகப் போராடினர். கடைசி ஓவரில் 16 என்ற நிலையில் இருந்து கடைசி பந்தில் 4 ரன்கள் என்ற நிலைக்கு வந்தது. கடைசி பந்தில் மூன்று ரன்கள் எடுக்கப்பட ஆட்டம் சமனில் முடிந்தது.

சூப்பர் ஓவர் வரை சென்ற நிலையில் இந்தியா ஏ அணி நிச்சயம் வெற்றி பெறும் என்று இந்திய ரசிகர்களுக்கு நம்பிக்கை பிறந்தது. அதற்கு முக்கிய காரணம் தொடக்க வீரரான வைபவ் சூர்யவன்ஷி களமிறங்குவார் என்பதுதான். இந்த தொடரில் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு எதிராக 42 பந்துகளில் 144 ரன்கள் விளாசி இருந்தார். பாகிஸ்தானுக்கு எதிராகவும் 23 பந்துகளில் 45 ரன்கள் எடுத்திருந்தார். இன்றைய போட்டியில்கூட 4 சிக்ஸர்களுடன் 15 பந்துகளில் 38 ரன்கள் அடித்திருந்தார். ஆனால், சூப்பர் ஓவரில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணிக்கு கேப்டன் ஜிதேஷ் சர்மா மற்றும் நமன் தீப் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். வைபவ் சூர்யவன்ஷி களமிறக்கப்படவில்லை.

வங்கதேச அணியில் ரிபன் மண்டோல் பந்துவீசினார். முதல் பந்திலேயே ஜிதேஷ் சர்மா க்ளீன் போல்டு ஆனார். அதுவும் மோசமான ஷாட் ஆட முயன்று ஆட்டமிழந்தார். அதன்பிறகும் வைபவ் களமிறக்கப்படவில்லை. ஆஷுதோஷ் சர்மா களமிறங்கினார். முதல் விக்கெட் வீழ்ந்த அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்குள் ஆஷுதோஷ் சர்மாவும் கேட்ச் கொடுத்து பெவிலியன் திரும்பினார். இருவரும் அடுத்தடுத்து ஆட்டமிழந்ததால் இந்தியா ஏ அணி ரன் ஏதும் எடுக்கவே இல்லை. இது இந்திய அணி வரலாற்றில் முதல்முறை. ஒரு ரன் என்ற இலக்கை நோக்கி விளையாடி வங்கதேச அணி, முதல் பந்தில் விக்கெட்டை இழந்தாலும் இரண்டாவது பந்தில் ஒயிடு ரன் மூலம் வெற்றி பெற்றது.

வாய்ப்பு இருந்தும் வைபவ் சூர்யவன்ஷி ஏன் களமிறக்கப்படவில்லை என்ற கேள்வி எழுந்துள்ளது. அடுத்தடுத்து விக்கெட் வீழ்ந்ததை மைதானத்தில் இருந்து சோகத்துடன் வைபவ் பார்க்கும் படங்கள் தற்போது வைரலாக பகிரப்பட்டு வருகிறது.

தோல்விக்கு தானே பொறுப்பேற்பதாக கேப்டன் ஜிதேஷ் சர்மா கூறியுள்ளார். போட்டிக்கு பின் பேசிய ஜிதேஷ் சர்மா, “வைபவ் மற்றும் பிரியான்ஷ் இருவரும் பவர் பிளேவில் சிறப்பாக விளையாடக் கூடியவர்கள். டெத் ஓவர்களில் அஷு மற்றும் ரமன் தீப் ஹிட் அடிக்கக்கூடியவர்கள். அதனால், சூப்பர் ஓவரில் யார் விளையாடுவது என்பதை கூடி முடிவெடுத்தோம். இது இறுதி முடிவு என்னுடையதுதான்” என்றார்.