Vaibhav Sooryavanshi  எக்ஸ் தளம்
கிரிக்கெட்

”நீ வீட்டுக்குப் போ..” வம்பிழுத்த இலங்கை வீரர்.. எல்லை மீறிய வைபவ் சூர்யவன்ஷி.. ஐசிசி தண்டனை?

சூர்யவன்ஷியின் இந்த எல்லைமீறிய செயல் ஐசிசி நடத்தை விதிமுறை 2.12-இன்படி தண்டனைக்குரிய குற்றமாகும்.

Prakash J

இலங்கை ஏ அணிக்கு எதிரான போட்டியில், இந்திய அணி வீரர் வைபவ் சூர்யவன்ஷி, அவ்வணி வீரர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டது விவாதப் பொருளாக மாறியுள்ளது. இதுதொடர்பான காரணம் தற்போது வெளியாகி உள்ள நிலையில், அதற்கு ஐசிசி அபராதம் அல்லது தண்டனை விதிக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தியா ஏ, இலங்கை ஏ, ஆப்கானிஸ்தான் ஏ அணிகளுக்கு இடையிலான முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடர் இலங்கையில் நடைபெற்று வருகிறது. இத்தொடரின் 4ஆவது போட்டியில் இந்தியா ஏ மற்றும் இலங்கை ஏ அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்தின. இதில் முதலில் பேட் செய்த இந்திய அணி 49.2 ஓவர்களில் 265 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. பின்னர் ஆடிய இலங்கை அணியும் போராடி 9 விக்கெட் இழப்புக்கு ஆட்டத்தை டிரா செய்தது.

இதையடுத்து சூப்பர் ஓவர் முறை கடைப்பிடிக்கப்பட்டு இலங்கை அணி வெற்றிபெற்றது. இந்தப் போட்டியில் இந்தியா 'ஏ' அணி தோல்வியடைந்த உடனேயே, வைபவ் சூர்யவன்ஷி தனது நிதானத்தை இழந்து இலங்கை 'ஏ' அணி வீரர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். தவிர, இலங்கை நட்சத்திர வீரர்களில் ஒருவரையும் தள்ளிவிட்டார்.

பின்னர் ஆட்டம் முடிந்தும் வீரர்கள் ஒருவருக்கொருவர் கைகுலுக்கத் தொடங்கியபோதும், சூர்யவன்ஷி மகிழ்ச்சியாக இல்லை. அவர் பெவிலியனுக்குத் திரும்பிச் சென்றபோது, ​​அவரது சக வீரர்கள் அவரைச் சமாதானப்படுத்தினர். சூர்யவன்ஷியின் இந்தக் கோபம் தொடர்பாக தற்போது காரணம் வெளியாகி உள்ளது. போட்டி முடிந்தபிறகு, மைதானத்தைவிட்டு வெளியேறிய வைபவ் சூர்யவன்ஷியைப் பார்த்து, இலங்கை வீரர் வீசென் ஹாலம்பகே, "போட்டி முடிந்துவிட்டது... இனி நீ வீட்டுக்குப் போ!" என்று வம்புக்கு இழுக்கும் வகையில் பேசியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சூர்யவன்ஷி, அந்த வீரருடன் மோதலில் ஈடுபட்டுள்ளார்.

Vaibhav Sooryavanshi

இதுவே வைபவின் ஆத்திரத்திற்குக் காரணமாகக் கூறப்படுகிறது. இந்த விவகாரம் இணையத்தில் வைரலான நிலையில், வைபவ் சூர்யவன்ஷிக்கு ஐசிசி விதிப்படி தண்டனை விதிக்கப்படலாம் என கூறப்படுகிறது. சூர்யவன்ஷியின் இந்த எல்லைமீறிய செயல் ஐசிசி நடத்தை விதிமுறை 2.12-இன்படி தண்டனைக்குரிய குற்றமாகும். இதற்கு முன்பாக, ஆட்டத்தின்போது வீசப்பட்ட நோ-பால் விவகாரத்தில் கேப்டன் திலக் வர்மா நடுவர்களிடம் வாக்குவாதம் செய்தபோது, சூர்யவன்ஷியும் மைதானத்திற்குள் நுழைந்து நடுவர்களிடம் ஆக்ரோஷமாகப் பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.