லாஸ் ஏஞ்சல்ஸ் 2028 ஒலிம்பிக்கில் கிரிக்கெட் மீண்டும் கொண்டு வரப்படும் நிலையில், அமெரிக்க கிரிக்கெட் வாரியத்தை ஐசிசி தற்போது இடைநீக்கம் செய்திருப்பது பேசுபொருளாகி உள்ளது.
2028ஆம் ஆண்டு லாஸ் ஏஞ்சல்ஸில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற உள்ளன. இந்த நிலையில் சமீபகாலமாக அமெரிக்க அணி சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்று விளையாடி வருகிறது. இந்த நிலையில், அவ்வணியின் கிரிக்கெட் வாரியத்தை ஐசிசி தற்போது இடைநீக்கம் செய்துள்ளது. அமெரிக்க கிரிக்கெட் சங்கம், ஐசிசி விதிமுறைகளைத் தொடர்ச்சியாக மீறியதும், முறையான நிர்வாக அமைப்பைச் செயல்படுத்தத் தவறியதுமே இந்த நடவடிக்கைக்கு முக்கியக் காரணங்கள் என்று ஐசிசி தெரிவித்துள்ளது.
இதுகுறித்து ஐசிசி வெளியிட்ட அறிக்கையில், “ஒரு நிலையான மற்றும் செயல்படும் நிர்வாக அமைப்பை உருவாக்கத் தவறியது, ஐசிசி அமைப்பின்கீழ், ஓர் உறுப்பினராக தனது கடமைகளைத் தொடர்ச்சியாக மீறியது, அமெரிக்க ஒலிம்பிக் மற்றும் பாராலிம்பிக் குழுவிடம் இருந்து, தேசிய நிர்வாக அமைப்பு என்ற அங்கீகாரத்தைப் பெறுவதில் எந்த முன்னேற்றமும் ஏற்படாதது, அமெரிக்காவிலும், உலக அளவிலும் கிரிக்கெட்டின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் செயல்பட்டது உள்ளிட்ட காரணங்கள் வாயிலாக இத்தகைய நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2024ஆம் ஆண்டிலேயே, அமெரிக்க கிரிக்கெட் சங்கம் ஐசிசியால் கண்காணிப்பில் வைக்கப்பட்டிருந்தது. முறையான மற்றும் சுதந்திரமான தேர்தல்களை நடத்தி, நிர்வாகச் சீர்திருத்தங்களை மேற்கொள்ளுமாறு பலமுறை அறிவுறுத்தப்பட்டும், அதனைச் செயல்படுத்தத் தவறியதாலேயே இந்த கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை, அமெரிக்காவில் கிரிக்கெட்டின் நீண்டகால நலன்களைப் பாதுகாக்கும் ஒரு முயற்சியாகப் பார்க்கப்படுகிறது.
அதேநேரத்தில், இந்த இடைநீக்க நடவடிக்கையை துரதிர்ஷ்டவசமானது; ஆனால் அவசியமானது என்று குறிப்பிட்டுள்ள ஐசிசி, இந்த நடவடிக்கையால் வீரர்களோ அல்லது விளையாட்டோ பாதிக்கப்படாது என்பதை உறுதி செய்துள்ளது. அமெரிக்காவின் தேசிய அணிகள், ஐசிசி நடத்தும் போட்டிகளில் தொடர்ந்து பங்கேற்கலாம் என அது தெரிவித்துள்ளது. மேலும், 2028 லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக் போட்டிக்கான தயாரிப்புகளிலும், அதில் பங்கேற்பதிலும் எந்த தடையும் இல்லை எனவும், இடைநீக்கம் அமலில் இருக்கும் வரை, அமெரிக்க தேசிய அணிகளின் நிர்வாகம் மற்றும் மேலாண்மையை, ஐசிசியே தற்காலிகமாக கவனிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.